செட்டிநாட்டு பொங்கல் விழா நிகழ்வு பற்றிய ஒரு முழு தொகுப்பு :
பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் அனவைரும் கொண்டாடி மகிழும் ஒரு சமத்துவ விழா . இந்த விழா செட்டிநாட்டில் எப்படி நகரத்தார்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் /மகிழ்கின்றனர் என்பதே இந்த கட்டுரை
செட்டிநாட்டு வீடுகளும் உணவுகளும் மட்டும் பிரமாண்டமானவை அல்ல திருமணத்திற்கும் பின் பெண் பிள்ளைக்கும் அனுப்பும் பொங்கல் பானையும் பிரமாண்டமானவையே
செட்டிநாட்டில் பொங்கப்பானை:
செட்டிநாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆச்சிகளுக்கும் அவர்களது தாய் வீட்டில் இருந்து பொங்கப்பானை கொண்டு வருவது ஒரு வழக்கம் . இதன் பொருள் என்னவென்றால் உன்னை நாங்கள் மறக்கவில்லை என்று எங்களோடு நினைவில் என்றும் உள்ளாய் .பொங்கபானையை பெண்ணின் அப்பசியோ ,தம்பியோ அல்லது அண்ணனோ கொண்டுவந்து தருவது வழக்கமாகும் . தனது சகோதரி அல்லது மகள் வீட்டுக்கு பொங்கல் இட தேவையான பச்சருசி , நெய் , தேங்காய் , வாழைபழம், வாழை இலை வெற்றிலை, பாக்கு, கூட்டுகாய் குழம்பு வைக்க தேவையான சக்கரவல்லிக்கிழங்கு , அவரைக்காய் , பச்சைபட்டாணி ,மொச்சைக்காய் , தட்டப்பைத்தன்காய் ,நெல்லிக்காய், வெண்டிக்காய் , கத்தரிக்காய் , மாவத்தல் , காரட் , உருளைக்கிழங்கு ,பரங்கிக்காய் ,வாழைக்காய் ,புடலங்காய் ,முருங்கைக்காய் போன்ற காய்கறிகள் , பொரிப்பதற்கு வல்லிகிழங்கு ,பாலைக்காய் , அவியலுக்கு பரங்கிக்காய் போன்ற காய்கறிகள் பொங்கப் பானையின் வாயில் கட்டுவதர்க்கு மஞ்சள்கொத்து போன்றவைகளுடன் கரும்பு வாங்கிவருவார் . முன்பு பெண்வீட்டு இரண்டு கட்டு கொண்டுவந்து கொடுப்பர் . தலைப்பொங்கல் என்றாள் பெண்ணுக்கு மாப்பிளைக்கு கெண்டைசீலை கெண்டை வெட்டி கொண்டுவந்து கொடுப்பர் . அவற்றை வாங்குவதர்க்கு முன் வீட்டில் விளக்கேற்றி வைத்து தடுக்கு போட்டு வைத்து அதில் தன் தமயனையோ அல்லது அப்பச்சியையோ அமரவைத்து பொங்கப் பானையை பெற்றுக்கொண்டு வயதில் பெரியவர் என்றாள் ஆசிர்வாதமும் பெற்றுகொள்வது வழக்கம் .பொங்கப்பானை கொண்டுவரும் தம் உடன்பிறந்த அண்ணன் / அப்பச்சி / தம்பிகளுக்கு பாசத்துடன் முட்டை அவித்து வைத்து கசாப்பு எடுத்து குழம்பு வைத்து பரிமாறுவாள் . பின் அவர்கள் சொல்லிக்கொண்டு கிளம்புகையில் ஒரு புது சட்டியில் அவரவர் புகுந்த வீட்டு முறைப்படி 11ருபாய்
21 ருபாய் 51ருபாய் 101 ருபாய் என்று வைத்து கொடுத்து வழியணுப்புவாள் .
முதல் பொங்கல் என்றாள் கெண்டைசீலை கெண்டை வெட்டி கொண்டுவந்து கொடுப்பர் . பின் சீலைக்கு என்று 101 301 501 என்று தங்கள் வசதிக்கு தக்க ரூபாயை கையில் கொடுப்பர் . பெண்பிள்ளையுடன் இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்திருந்தால் வருடம் ஒருவர் என்ற சுழற்சி முறையில் பொங்கல் பானை கொண்டு வருவர். தற்போது சிலர் பொங்கலுக்கு என்று ஒருதொகையை வங்கியில் தங்கள் சகோதரிகள் கணக்கில் செலுத்திவிடுகின்றனர் .முன்பு அனைவரும் ஒன்றாக அருகில் இருந்தனர் வீடுகளுக்கு மிகவும் சிறப்பாக பொங்கர் பானையை கொண்டு சென்று கொடுத்து வந்தார்கள் .இன்று இந்த நிலை மாறிவருகிறது இன்று சில வீடுகளில் இத்தனை வருடங்கள் பொங்கப்பானை தருகிறோம் என்று பேசிக்கொள்கின்றனர் அன்று அன்பு பாசம் ஆகியற்றின் வெளிப்பாடாக நிகழ்ந்த ஒரு செயல் இன்று சில பகுதிகளில் சடங்காகவும் நிகழ்கிறது .
ஆனால் இன்றும் சில வீடுகளில் முன்பு போல் இந்த நிகழ்வை ஆடம்பரமாக தடபுடலாக நிகழாவிட்டாலும் அவரவர் சத்திக்கும் இயன்றதை செய்து வருகின்றனர்.
அம்பிகை மீனாட்சியம்மைக்கு பொங்கப் பானை :
நம் செட்டிநாட்டில் ஆச்சிகளுக்கு எப்படி பொங்களுக்கு முன் தங்கள் பிறந்த வீட்டில் இருந்து பொங்கப்பானை வருகிறதோ அதே போல் நம் செட்டிநாட்டிளும் பரவலாக உள்ள நகரசிவன் கோயில்களில் உள்ள அம்பிகைக்கு அந்த அந்த ஊர் நகரத்தார்கள் சார்பில் பொங்கல் பானை கொண்டு வந்து கொடுப்பர் . பொங்களுக்கு முதல் நாள் அல்லது காலையில் அந்த ஊரில் உள்ள நகரத்தார்கள் (செட்டியார்கள்/ ஆச்சிகள் ) ஒன்றாக கூடி ஆளூக் ஒரு பொருளாக (அருசி , பருப்பு , வெல்லம் , தேங்காய் , காய்கறிகள் )அவற்றுடன் அம்மைக்கும் அப்பனுக்கும் பட்டாடை கொண்டுவருவர் . அவற்றை கோயிலில் அம்பிகை முன் வைத்து வழிபட்டு கோயிலில்உள்ள மடப்பள்ளியில் கொடுத்துவிட்டு வருவர் .
பொங்கலன்று காலை கோயிலில் உள்ள பரிவார தேவதைகளுக்கு அம்மை(மீனாக்ஷி ) அப்பன்னுக்கும் (சுந்தரேஸ்வரர் ) சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று பின் புது வஸ்திரம் சார்த்தப்படும் . தை மாதப் பிறப்பு நல்ல நேரம் பார்த்து கோயிலில் பொங்கல் இடப்படும் . நகரசிவன் கோயிலில் பொங்கப்பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கல் பானையில் பால் பொங்கிய பின் ஆச்சிகள் வீட்டில் பொங்கப்பானையை அடுப்பில் ஏற்றுவர். இதன் பொருள் என்னவென்றால் முதலில் அம்பிகை மீனாக்ஷி யின் பானையில் முதில் பால் பொங்கவேண்டும் என்று நோக்கத்தில் இவ்வாறு செய்கின்றனர் காரணம் உமையவளை தங்கள் ஆத்தாவாக பாவிக்கின்றனர் .அதுபோல மீனாட்சியம்மையை தங்கள் மகளாக நினைத்து பொங்கப்பானைகொண்டு குடுப்பது வழக்கம். மேலும் சில நகரத்தார் ஊர்களில் அம்பியின் பொங்கல் பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கலிடும் வழக்கமும் இன்றளவும் உள்ளது
செட்டிநாட்டுப் பொங்கல் :
பொதுவாக தமிழகத்தில் தைத் திங்களன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் வைத்து கதிரவனுக்கு படைத்தது வழிபடுவர் . எங்கள் செட்டிநாட்டில் மூன்று பொங்கல் இடுவர் . இதற்காக பெண்ணின் திருமணத்தின் பொது மூன்று இரும்படுப்பு மூன்று முரிசொம்பு திருமணத்தின்போது வைப்பர் இதை கொண்டு பொங்கல் வைப்பது வழக்கம் .ஒன்று அதிகாலையில் அரசமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாருக்கு முதலில் சக்கரைப்பொங்கல் வைத்து வழிபாடு செய்வர் இதன் பொருள் அதி முதற்பொருளான விநாயகருக்கும் முதல் வணக்கம் நன்றி தெரிவிக்க இந்த பொங்கல்.வீட்டின் வாயில் மாக்கோலம் இட்டு வாயிலில் மாவிலை தோரணம் மற்றும் வீட்டின் வாயிலில் கண்ணுபில்லை பூ , மாவிலை , நெற்கதிர் , ஆவாரம்பூ போன்றவைகளை ஒன்றாக இணைத்து ஒரு கொத்தை வீட்டின் முகப்பிலும் படைகின்ற வீட்டின் வாயில் மற்றும் கட்டுதரையிலும் சொருகிவைபர்.
பின் பெரிய வீட்டில் அவரவர் அறையின் வாசலில் வளவில் செட்டிநாட்டுப் பொங்கக் கோலம் இடுவர் மற்றும் படைக்கும் வீட்டில் நடுவீட்டுக் கோலம் இடுவர் . பின் வளவில் அல்லது அவரவர் அறையின் முன் பொங்கல் வைப்பர் . பொங்கலிடும் போங்கர்பானையில் கோலம் இட்டு, விளக்குசட்டியிலும் அதன் மூடியிலும் பொங்கலிடும் அடுப்பிலும் கொலமிட்டுவர். நகரக் கோயிலில் நல்ல நேரம் பார்த்து பொங்கப் பானை ஏற்றிய பின் அவரவர் வீட்டில் ஆச்சிகள் அடுப்பில் தீமூட்டுவர். பின் ஆண்கள் வீட்டின் பெரியவர் செட்டியார்கள் தலையில் விருமாப்பு கட்டி அடுப்பை பொங்கப்பானையால் சுற்றி அடுப்பில் ஏற்றுவர் அப்போது மங்கல் சங்கு ஒலிக்கச்செய்து அடுப்பில் ஏற்றுவர் . மகனுக்கும் திருமணம் செய்து ஒன்றாக இருந்தால் தன் மகன் வீட்டுக்கு சேர்த்து மூன்று பொங்கல் வைப்பர் இரண்டு சர்க்கரைப் பொங்கல் ஒரு வெண்பொங்கல் வைப்பர் . பால் பொங்கும் பொது மங்கள் சங்கு ஒலிக்கச்செய்து வீட்டின் பெரிய ஆச்சி புத்தருசியை பொங்கப்பானையின் வாயை சுற்றி பொங்கல் பானையில் இடுவர்.
அனைத்து காய்களையும் கலந்து ஒரு குழம்பு செய்தும் பலாக்காய் ,பரங்கிக்காய் அல்லது வல்லிக்கிழங்கு பொரித்து மொச்சைகாய் கூட்டு சமைத்து பருப்பு மசித்து வைத்து வைப்பர்.அடுப்பின் முன்பு பொங்கர்பானைகள் சமைத்த பொருட்களை வைத்தும் உடன் சிறிது துண்டு கருப்பு , வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு தேங்காய் , சிறிது பூ , விளக்கு சட்டி விளக்கு இரண்டை ஏற்றி வைத்து நெற்கதிர்கள் , பனங்கிழங்கு சிறிது பூக்கள் வைத்து வாழை இலையில் சமைத்த காய்கள் பொங்கல் போன்றவைகள் வைத்து வழிபடுவர். சில வீடுகளில் மூன்று இலை ஐந்து இலை எழு இலை என்று அவரவர் வீட்டின் முறைக்கும் ஏற்ப இலையில் படைத்தது வழிபடுவர் .பின் சாமி வீட்டில் வீட்டின் பெரிய ஆச்சி விளக்கு வைத்து பின் வீட்டின் ஆண்மகன்கள் இணைந்து சுலகின் மீது இலையை ஒன்றன் மீது ஒன்று வைத்து சாமிவீட்டுக்குள் கொண்டு சென்று வைத்து பின் மீண்டும் வீட்டின் ஆண்கள் ஒன்றிணைந்து விளக்கு சட்டிக்குள் மாவிலை, கண்ணுபில்லைபூ,ஆவாரம்பூ,நெற்கதிர் வைத்து பின் ஒரு விளக்கு சட்டி பிள்ளையாரை வைத்து உடன் தேங்காய் பூ , பழம், பனங்கிழங்கு , கரும்புத் துண்டு வைத்து அதில் இரண்டு விளக்குசட்டி விளக்கையும் வைத்து அதை விளக்குசட்டியின் மூடியை பாதி மூடியபடி வீட்டின் ஆண்மக்கள் சேர்ந்து சட்டியை படைக்கும் வீட்டில் கொண்டு சென்று வைத்து வழிபாடுகள் செய்வர்.பின் ஒரு இலையில் இட்டதை காக்கைக்கு இட்டபின் அனைவரும் உண்ணுவர்.
மாட்டுப்பொங்கலும் கொப்புகொட்டு பழக்கமும் :
மாட்டுப்பொங்கல் அன்று கட்டுதரையை சுத்தம் செய்து சில நாட்கள் முன்பு சுவற்றில் வண்ணம் தீட்டியும் மாடுகளுக்கும் கொம்பு சீவி வண்ணம் தீட்டியும் மாட்டுப்பொங்கல் அன்று கட்டுதரையில் மாடுகளை குழுப்பாட்டி மஞ்சள் குங்குமம் இட்டு கழுத்தில் சலங்கைகள் மற்றும் குஞ்சங்கள் கட்டுயும் விவசாயத்திற்கும் பயன்படுத்திய கதிரரிவாள் , ஏர் , கலப்பை போன்றவைகளையும் வைத்து நல்ல நேரம் பார்த்து காலை அல்லது மாலையில் வெண்பொங்கல் வைத்து தேங்காய் வெற்றிலை பாக்கு கரும்பு துண்டுகள் வைத்து மூன்று ஐந்து இலை போட்டு வெண்பொங்கல் வைத்து அதில் சிறிது நெய்யும் வெள்ளமும் வைத்து இலைக்கு ஒரு கரும்பு துண்டு வைத்து வழிபடுவர் பின் சமைத்த பொங்கல் மற்றும் கரும்பு துண்டு நெற்கதிர்களையும் பழங்களையும் மாடுகளுக்கு உண்ணக்கொடுப்பர்.
தைப்பொங்கல் அன்று விளக்கு சட்டியில் வைத்த பொருட்களை மாலையில் பெண்கள் கோயிலுக்கு கொண்டு சென்று ஒன்று கூடி அவரவர் வீட்டில் இருந்து கொண்டுவந்த விளக்கு சட்டியில் இருந்த பொருட்களை ஒரு இடமாக வைத்து ஒன்றினைந்து கோப்புகொட்டுவர் . கும்மி கொட்டுதல் என்பதையே கோப்பு கொட்டுதல் என்று செட்டிநாட்டில் அழைப்படும். இந்த கொப்புகொட்டுதல் என்பது செட்டிநாட்டில் தேவகோட்டை , காரைக்குடி , பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் நிகழும் . முன்பு கோப்பு கொட்ட பெண்ணின் திருமணத்தின் பொது வெள்ளியில் தேங்காய் , சக்கரவல்லிகிழங்கு , கத்தரிக்காய் , அவரைக்காய் ,வெற்றிலை பாக்கு கரும்புத் துண்டு போன்ற பொருட்களை செய்து கொடுப்பர்.இவற்றை முன்பு பெண்கள் கோயிலுக்கு கொண்டு சென்று வைத்து கொப்புகொட்டிவிட்டு வீட்டுக் திரும்புவர். இன்று இந்த கொப்புகொட்டும் வழக்கம் அருகிப்போய்விட்டது. கொப்புகொட்டும் பொது சிறுபெண்கள் முதல் பெரிய ஆச்சிகள் வரை வந்து ஒன்று சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்வர்.
நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் நிகழும் பொங்கல் போன்ற சுப நிகழ்சிகளுக்கு இந்த கோலத்தை இடுவர். நடுவீட்டுக்கோலம் பொங்கர்கோலம் போன்றவைகளை இட்ட பின் நகரத்தார்கள் அசுபநிகழ்வுகள் மற்றும் நீண்ட பயணம் போன்றவைகளை நகரத்தார்கள் செய்வது இல்லை அப்படி செல்லுவதற்கு முன் அருசிமாவால் இட்ட நடுவீட்டுக் கோலத்தை கலைத்து விட்டு அசுபநிகழ்வுவுக்கோ அல்லது நீண்ட பயணத்தையோ மேற்கொள்வர். இந்த நடுவீட்டுக் கோலத்தை 3 அல்லது 5 நாட்கள் என்று ஒற்றை படையாக எண்ணிகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கணக்கு இருக்கும் அதன்படி கோலத்தை கலைப்பார்கள்.
- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு