Wednesday 28 September 2016

கற்புக்கரசி " கண்ணகி " --- நகரத்தார் குலக்கொழுந்தே...!!! [ ஆய்வுக்கட்டுரை ]

கற்புக்கரசி " கண்ணகி " --- நகரத்தார் குலக்கொழுந்தே...!!! 

ஆய்வுக்கட்டுரை


சமீப காலங்களில் தூய தமிழ் இனக்கூறுகளில் ஒன்றான, "நகரத்தார் " அல்லது நாட்டுக்கோட்டை நகரத்தார்களை சிறுமைப்படுத்த அல்லது அவர்களின் சிறப்பியல்புகளில், தாங்களும் பங்குபெற வேண்டும் என்ற உள் நோக்கில் - தங்களையும் தூய தமிழர்கள் எனக் கூறிக்கொள்ளும் ( தமிழை வீட்டில் பேசும் தாய்மொழியாகக் கொண்டிராத / தமிழினம் சாராத ) சிலர் , நகரத்தார்களின் தூய தமிழ் கூறுகளை கேள்விக்குறியாக்கி சிதைக்கும் கேடுள்ளத்துடன் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு முயற்சியே வலைத்தளங்களில், சிலப்பதிகார நாயகியும் , நகரத்தார்கள் குலக்கொழுந்து -  காவல் தெய்வம் -- கண்ணகி நல்லாள் நகரத்தார் சமூகத்தை சார்ந்தவரில்லை எனும் பரப்புரைகள்.

இப்பரப்புரைகளில் அவர்கள் குறிப்பிடுவது ஐயா சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் கட்டுரைகளில் இருந்து ஒரு பகுதியை வெளியிட்டு 

 " நகரத்தார்களை நோக்கி ம.பொ.சி எழுப்பும் வினா " எனும் தலைப்பிட்ட செய்திக்குறிப்பு.

இக்கட்டுரையை ஊடாய்ந்து தகுந்த தரவுகளைக் கொண்டு  " கண்ணகி நல்லாள் -- நகரத்தார் குலக்கொழுந்தே " என நிறுவுவதே எம் நோக்கம். அதுவல்லாது,  ஐயா சிலம்புச் செல்வரை குறைத்து மதிப்பிடுவது அல்ல எம் குறிக்கோள்.

முதற்கண் இக்கட்டுரை எந்த ஆண்டு எழுதப்பெற்றது என அறிய வேண்டும். ஏனெனில் ஆய்வுகள் என்பவை ஒருவரின் / ஆய்வாளரின் காலத்துக்கு காலம் ஆழமாக மாறக்கூடியவை. இக்கட்டுரையை எழுதும் போழ்து,  ஐயா ம.பொ.சி.அவர்கள் நகரத்தார் சமூகத்துடனோ அல்லது சிவகங்கை-புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழும் ஏனைய தூய தமிழ்ச் சமூகங்களுடனோ அத்துணை அறிமுகம் கொண்டிருக்கவில்லை எனத்  தோன்றுகின்றது.

ஏனெனில் ஐயா ம.பொ.சி அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் அவர்களின் "தமிழரசுக்கழகத்தை"  பரப்பிய அக்கட்சியின் முக்கிய பிரமுகரான நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த காரைக்குடி "முத்து விலாஸ்"  திருமிகு. மா.முத்தையா,  அவர்களின் தங்கை திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது , நகரத்தார் திருமணச் சடங்குகளை, சிலப்பதிகாரத்தில் நடந்த கண்ணகியின் சடங்குகளோடு  ஒப்பிட்டு , கண்ணகி நகரத்தார் குலப்பெண் எனப் பேசியதை அடியவன் சிறியவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன்.

 

சரி, கட்டுரைக்கு வருவோம்.

" நகரத்தார்களை நோக்கி ம.பொ.சி எழுப்பும் வினா " வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் முதல் பத்தியிலேயே ....

" பூம்புகாரில் வணிக சாதியினர் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்தனர் என்பது சிலப்பதிகாரத்தில் அறியக்கிடைக்கின்றது. அவர்கள் பிற்காலத்தில் கடற்கோளுக்கு அஞ்சி , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலைவனப்பிரதேசத்தில் குடியேறியிருக்க கூடும் என்று கருத வேண்டியிருக்கின்றது. அவர்கள் தாங்கள் வாழும் பகுதிக்குச் " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர். "நாட்டார்",  "  நகரத்தார்" எனும் சிறப்பு பெயர்களையும் பெற்றுள்ளனர்.

 
இந்த முதல் பத்தியிலேயே சிலம்புச் செல்வர், கண்ணகி ஆத்தாளை நகரத்தாரிலிருந்து பிரிக்க விரும்பும் கேடர்களுக்கு, வேறு எந்த சமூகத்தையே, இடத்தையோ குறிப்பிடாமல், இங்கு குடியேறியிருக்க கூடும் என்று கருதவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டு அப்பகுதிக்கு " செட்டி நாடு " என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளனர் என ஐயந்திரிபற கூறுகின்றார். (ஆனால் நாட்டார் என்பது இப்பகுதியில் வாழ்ந்த முக்குலத்தோர் எனப்படும் சமூகப் பிரிவுகளையே குறிக்கும் சொல் என்பது கட்டுரை எழுதிய காலத்தில் ஐயாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும் )  அடுத்த வரியிலேயே கண்ணகி இந்த நகரத்தார் சமூகத்தில் பிறந்தவள் என்பது ஆராய்ச்சியால் அனுமானிக்கப்படுகின்றது என முடிவும் சொல்கின்றார்.

இதனையடுத்து வருகின்ற வரிகளிலும், இப்படி நகரத்தார் தங்கள் சமூகத்தில் பிறந்த பத்தினி தெய்வத்தை கொண்டாடும் வகையில் நகரத்தார்களிடம் கூறுகள் இல்லையே எனும் ஆதங்கம்தான் தெரிகின்றதே தவிர, கண்ணகி நகரத்தார் இல்லை எனும் கூற்று ஐயாவின் கட்டுரையில் எவ்விடத்திலும் காணப்படவில்லை.

சரி ஐயா  ம.பொ.சியின் ஆதங்கம் சரிதானா ??

கண்ணகி அம்மை நகரத்தார்தான் என்பதை ஐயந்திரிபற சிலப்பதிகாரத்தைக் கொண்டே நிறுவும் தரவுகளை / சான்றுகளைக் காண்போம்.


I . புறச்சான்றுகள்


II . அகச் சான்றுகள்


I . புறச்சான்றுகள் :-

பட்டினப்பாக்கம் எனும் புகார் அந்நாளில் "நகரம்" என்றும் அழைக்கப்பட்டது. நகரத்திலிருந்து தென்பாண்டி நாட்டிற்கு குடியேறியவர்கள் "நகரத்தார்" ஆனார்கள். அதேபோல் அற்றை சோழ  மன்னர் காலத்தில் சிறப்புற வாழ்ந்த வணிகக்  குடிமக்கள் "எட்டி " எனும் சிறப்பு பட்டம், மன்னர்களால் சூட்டப்பட்டு பெருமை எய்தினர். எட்டி எனும் சொல்லே பின்னாளில் செட்டி என மருவி, செட்டியிலிருந்து வடமொழி  சேட்டு என ஆயிற்று. இதனை மொழியியல் அறிஞர்களும் ( Anthropologist ), வரலாற்று ஆய்வாளர்களும் நன்கறிவர்.



நகரமாகிய புகாரிலிருந்து புலம்பெயர்ந்த செட்டி மக்களாகிய நகரத்தார் பெருமக்கள் தென்பாண்டி நாட்டில் முதலில் தங்கி இளைப்பாறிய இடம்  " இளையாற்றங்குடி ". ஆனாலும் முதலில் ஊர் ஆக உருவாக்கி குடியேறிய இடம் " நாட்டரசன் கோட்டை" ஆகும். இவ்வூரை அவர்கள் புகார் நகரின் அமைப்பிலேயே வடிவமைத்தனர். பூம்புகாரின் " சதுக்க பூதம்" அமைந்த அமைப்பை ஒட்டியே சதுக்கம் அமைத்து நாட்டரசன் கோட்டையை வடிவமைத்தனர். இன்றைக்கும் அவ்விடம் நாட்டரசன் கோட்டையில் " சதுக்கம் " என்றே அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நாட்டரசன் கோட்டையில் குடியேறிய நகரத்தார் பெருமக்கள் , தாங்கள் புலம்பெயர்ந்த ஊரில் தங்களின் குலத்துதித்த பத்தினி தெய்வமாம் கண்ணகிக்கு வனப்புமிகு கோவில் எழுப்பினர். அக்கோவில் நகரத்தார்கள் பயபக்தியுடன் வணங்கும்  " கண்ணாத்தாள்" கோவிலாகும்.

நகரத்தார்கள் தங்கள் தாயை  " ஆத்தாள்" என்றே அழைப்பது வழக்கம்.
( நகரத்தார் குலத்துதித்த ஞானி பட்டினத்தார் எனும் பட்டினத்தடிகள் தனது தாய் மறைந்த பொழுது  " அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
" எனும் அவரது பாடலே பட்டினத்தார் நகரத்தார் குலத்துதித்த பெருமகனார் என்பதை நிறுவும் மறுக்க இயலாத சான்றுகளில் ஒன்றாய் இருக்கின்றது ) அவ்வண்ணமே தங்கள் குலத்துதித்த கற்புத் தெய்வத்தை  " கண்ணகி"  "ஆத்தாள் " என்று அழைத்தனர். கண்ணகி ஆத்தாள் என்பதே நாளடைவில் மருவி கண்ணாத்தாள் ஆகியது.

ஆகவே ஐயா சிலம்புச் செல்வரின் " நகரத்தார் சமூகத்தின் பழக்க வழக்கங்களில் கண்ணகி வழிபாட்டின் அடையாளத்தைக் காணமுடியவில்லை " எனும் கூற்று மேலோட்டமான, ஆதாரமற்ற ஒன்று. இன்றளவும் கண்ணாத்தாள் கோவில், நகரத்தார்களின் தலையாய கோவில் மட்டுமின்றி, அவர்கள் பயபக்தியுடன் வழிபடும் செல்வாக்கு மிக்க தலங்களில் ஒன்றாகும்.

கண்ணகி தெய்வத்தை, அம்மையாகவும், அம்பாளாகவும் (இறைவி) வழிபட்டவர்கள், வழிபடுகின்றவர்கள் நகரத்தார்கள். இக்கட்டுரை வரையும் அடியவனின் தாய்வழிப் பாட்டியின் பெயர் "கண்ணம்மை " (கண்ணகி+அம்மை) , சொந்த சகோதரியின் பெயர் (கண்ணகி+அம்பாள்) கண்ணம்பாள். பெரியத்தாளின் (பெரிய தாயார், தாயின் மூத்த சகோதரி ) மகள் பெயரும் கண்ணம்பாள்.

செட்டி நாட்டிலே "கண்ணாத்தாள்", "கண்ணம்மை", "கண்ணம்பாள் " என்கின்ற பெயர்கள் பரவலாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன / சூட்டப்படுகின்றன.

அற்றைக் காலகட்டத்தில் வணிகக்குழுக்களுக்கு "சாத்து" என்று பெயர். பெரிய வணிகக்குழு அல்லது கூட்டம், "மா சாத்து" என்று அழைக்கப்பட்டுள்ளது.   "மாசாத்து" உடையவர் "மாசாத்துவான்". கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான். மாசாத்துவான் என்பதே நாளடைவில் மருவி "சாத்தப்பன்" ஆயிற்று.

அதே போல கப்பல் கொண்டு கடல் வணிகம் செய்வோர் "நாய்க்கன்" என்றும், பெரும் கடல் வணிகம் செய்வோர் "மாநாய்க்கன்" என்றும் அழைக்கப்பட்டனர்.  சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை பெயர் "மாநாய்க்கன் ".

 "மாநாய்க்கன் " எனும்பெயர் காலப்போக்கில் " மாணிக்கம் " என மருவியது. இன்றைக்கும் நகரத்தார் சமூகத்தில் மாணிக்கம் - சாத்தப்பன் என்கிற பெயர்கள் ஏராளம், ஏராளம். மிகவும் பொதுப்படையான பெயர்களாகும். (சாத்தப்பன் என்கிற பெயர் வேறு சமூகத்திலே காணப்படுகின்றதா என்பது சந்தேகமே.)

மேலே சொன்ன சான்றுகளால், சிலம்புச் செல்வர் அவர்கள், " நகரத்தார்களின் குடும்ப பழக்க வழக்கங்களிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் வைப்பதிலேயும் சிலப்பதிகாரத்தின் சாயலைக்கூட காண முடியவில்லை " எனும் அவருடைய அடுத்த கூற்று, கிஞ்சித்தும் அடிப்படையற்ற, சாரமற்ற ஒன்றாகும் என நிறுவப்படுகின்றது.

II . அகச் சான்றுகள் :-


மேலும் சற்று நுண்மான் நுழைபுலத்தோடு சிலப்பதிகாரத்தை ஆழமாக ஆராய்வோம்.

அகச்சான்று  - 1


நகரத்தார் சமூகத்தின் தனிப்பட்ட, இன்றளவும் வேறு எந்த தமிழ் குமுகத்திடமும் காணப்படாத சிறப்பு பண்பாடு, மணமுடித்து இனிய இல்வாழ்வை தொடங்கும் இளம் தம்பதிகளை, அவர்களும் வாழ்வின் இன்பத்துன்பங்களை நுகர்ந்து, எதிர் கொண்டு வேர்விட்டு வளர்ந்து வெற்றி பெற  வேண்டும் என்கிற நோக்கில் " வேறு வைத்தல் " எனும் பழக்கம்.                  ( பெற்றோரிடம் மாற்றுக்  கருத்துக்கொண்டு இன்று தம்பதிகள் போகும் ' தனிக்குடித்தனம்" இதிலிருந்து மாறுபட்டது ). இந்த வேறு வைத்தல் என்பது  பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒத்த கருத்துடன், பெற்றோர் தங்களுக்கு உள்ள அனைத்து வசதிகளையும் அதே போல் செய்து கொடுத்து , உற்றார், உறவினர்களை அழைத்து அனைவரும் மகிழ்வோடு கொண்டாடி பிள்ளைகளை வேறு வைப்பார்கள்.

 

இவ்வாறு கோவலன் கண்ணகியை அவர்தம் பெற்றோர் வேறு வைக்கும் வைபவம் சிலப்பதிகாரம் - புகார்க்  காண்டம்  மங்கல வாழ்த்துப்பாடல் வரிகள் 84-90 ல், கீழ்கண்ட வாறு விவரிக்கப் படுகின்றது.

"வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி        84..
மறப்பு -- யாரும் கேண்மையொடு, அறப்பரி சாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் ,
வேறுபடு திருவின் திருவின் வீறுபெறக் காண
உரிமைச்சுற்றமொடு ஒரு தணி புனற்க,
யாண்டு சில கழிந்தன , இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி  தனக்கு - என் 
     90.....


மேற்குறிப்பிட்ட ஒன்றே கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்து என்பதற்கு அசைக்க முடியாத சான்றாகும். ( ஆங்கிலத்தில் சொல்வதானால்  a concrete evidence to prove).

அகச்சான்று  - 2

மேலும் சிலப்பதிகாரத்தைக்கொண்டே கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்து என்பதற்கான சான்றுகள் சிலவற்றைக் காண்போம்.

நகரத்தார் குமுகத்தில் மணமகன் மணமகளுக்கு அணிவிக்கும் திருமங்கலநாணை "கழுத்துரு" என்று அழைப்பதோடு, அச்சடங்கை இன்றளவும் " திருப்பூட்டு திருமங்கலம்" என்றும் " திருப்பூட்டுதல்" என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பிடப்படும் "கழுத்துரு " என்கிற திருமங்கல நாணை நகர்வலமாகக் கொண்டுவரும் பழக்கம் இன்றளவும் நகரத்தார் பெருமக்களிடம் காணப்பெறுகின்றது.  ஆம் பெண் வீடு அமைந்துள்ள ஊரின்கண் உள்ள கோவிலில் அல்லது ஒரே ஊரில் உள்ளவர்களாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் -- மாப்பிள்ளை வீட்டார் முதல் நாளே பெண் வீட்டார் கொடுத்தனுப்பிய " கழுத்துரு" அல்லது மங்கல  நாணை, நகர்வலமாக "பொன் தட்டில்"  மாப்பிள்ளை வீட்டார் மண மாலையுடன் ஏந்தி நகர்வலமாக வரும் பழக்கம் நகரத்தார்களிடம் மட்டுமே இன்றுவரை கடைபிடிக்கப்படுகின்றது.



அத்துடன் திருமண நிகழ்வில் இன்றளவும்  சங்கொலி எழுப்பி  திருமண அழைப்பு, திருமணச் சடங்குகளை வழுவாது செய்து வரும் சமூகம்  நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. இன்றளவும் பிறப்பு, திருப்பூட்டுதல் (திருமணம்), இறப்பு எனும் மூன்று பண்பாட்டு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட  அனைத்து சடங்குகளிலும் வெண் சங்கு தொட்டுத் தொடர்வது, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் மட்டுமே.

 
பட்டினத்தார் இதனையே :-


முதற்சங்கு அமுதூட்டும்,  
மொய்குழலார் ஆசை
நடுச்சங்க  நல்விலங்கு  பூட்டும்,

 கடைச்சங்கம் ஆம் போதது ஊதும்,
அம்மட்டோ..? இம்மட்டோ ..? 

நாம் பூமி வாழ்ந்த நலம்.  
---- பட்டினத்தார்

இதனையே சிலம்பில்  புகார்க்  காண்டம்  மங்கல வாழ்த்துப்பாடல் வரிகள் 46 மற்றும் 47 ல், கீழ்கண்ட வாறு விவரிக்கப் படுகின்றது.

"முரசு இயம்பின: முருடு அதிந்தன : முறை எழுந்தன பணிலம் : வெண்குடை
அரசு எழுந்தோர் படி எழுந்தன: அகலுள் மங்கல அணி எழுந்தது...."


------- சிலம்பு. மங்கலவாழ்த்துக் காதை.-- வரிகள் 46/47

மேற்கண்ட ஒன்றும் கண்ணகி நகரத்தார்கள் கண்மணி என்பதற்கு மற்றுமோர் அசைக்கமுடியாத சான்று.


அகச்சான்று  - 3


அடுத்து நகரத்தார் குமுகம், ஏனைய தமிழ் சமூகத்தினரை வேறுபடுத்தாமல், தங்கள் வாழ்வியலுடன் ஒத்திசைந்து அவர்களைப்  பெருமைப்படுத்தி, உதவிகள் செய்து, ஊருடன் ஒத்து வாழ்ந்து உயரும் மரபினர். அவ்வண்ணமே நகரத்தார் வாழ்வியலில் நடக்கும் அனைத்து மங்கள/அமங்கள  நிகழ்வுகளில், துணி வெளுக்கும் குடியினரான சலவைத் தொழில் செய்யும் மக்களையும், அந்நாளில் நல்ல மருத்துவராக இருந்த நாவிதர் குலத்தாரையும் அழைத்து முதல்மரியாதை செய்து, அவர்களை சில சடங்குகளை செய்யச் சொல்லும் மரபாகும்.




அதனை ஒட்டி நகரத்தார் மரபுகளில் இன்றளவும்  அவர்தம் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு மங்கல நாண் அணிவிக்கும் (திருப்பூட்டும்) மணவறையின் விதானத்தில், வண்ணார் குலத்தினரைக்கொண்டு அவரிடமிருந்து பெற்ற தூய்மையான ஆடையை இடும் "நித்திலப் பூப்பந்தல்" நிகழ்வாகும்.இதனை வண்ணார் விரிப்பு எனக்குறிப்பிடுவர். இது வேறு தமிழ் சமூகங்களில் இல்லை. இப்பழக்கம் மிகத் தெளிவாக  மங்கல நாண் காதையில் இயம்பப்படுகின்றது. அவ்வரிகள் வருமாறு :

மங்கல நாண் காதை :- வரிகள் -- 47-48.

" மாலை தாழ் சென்னி வயிரமணித் தூண் அகத்து,
நீல விதானத்து நித்திலப்பூம்  பந்தர்க் கீழ்  "
 ------ வரிகள் -- 47-48.

மேற்குறிப்பிட்ட சான்றும் கண்ணகி தெய்வம் நகரத்தார் குலத்துதித்த பத்தினியே என்பதை நிரூபிக்கும் ஒன்றாகும்.

அகச்சான்று  - 4

மேலும் காண்போம், கோவலன்,  கண்ணகி - கவுந்தியடிகளுடன் மதுரை நகர் சென்றடைகின்றான். ஆயர்குலப் பெண்மணி மாதரி கவுந்தியடிகளிடம் இருந்து, கண்ணகி கோவலன் இருவரையும்  ஏற்றுக்கொண்டு பெரிதும் மகிழ்ந்து, மதுரைக்கோட்டையைக் கடந்து, மாதரி இடைக்குல மாதர் பலரும் தன்னுடன் கூடிவர,  கோவலன் கண்ணகியுடன் தன்னுடைய வீட்டிற்கு சென்று சேர்கின்றாள். கோவலன் கண்ணகி இருவருக்கும் ஒரு புது மனையில் இடம் தந்து தன்மகள் ஐயையை கண்ணகிக்கு தோழியாக்கி துணையாக்குகின்றாள். கண்ணகி மாதரியிடம் நன்றி பாராட்டி அவளை மாமி முறையாக்கி,  ஐயையின் துணையுடன்  தன் கணவனுக்கு சோறாக்கி தன் கணவனை உண்பிக்க அழைக்கின்றாள். அது கேட்ட கோவலன், பனையின் வெண்மையான குருத்தோலையில்  தடுக்கு பின்னுவதில் கைதேர்ந்தவள் ஒருத்தி அழகாகப் புனைந்திருந்த, வேலைப்பாடமைந்த தடுக்கின் மேல் அமர்ந்தான். தன் மலர்போன்ற  அங்கையினால், சுட்ட மண் பாத்திரத்தினாலே நீர் சொரிந்து, அவன் பாதங்களைத் துடைத்தாள் கண்ணகி. 




மேற்கண்ட  வர்ணனை மதுரைக் காண்டம்  - கொலைகளக் காதையில் 35 முதல் 39 வரை உள்ள  வரிகளில் இளங்கோவடிகளால் விவரிக்கப்படுகிறது. இன்றுவரை உணவருந்தும் போது  'பழமைபோற்றும் 'நகரத்தார்கள்  பனை  ஓலையில் செய்யப்பட்டு வேலைப்பாடோடு அமைந்த  'தடுக்கு'களில்  அமர்ந்துஉண்ணும்  பழக்கத்தை பின்பற்றி வரும் பெருமக்கள் ஆவர். ஏனைய பிற சமுகத்தினரிடையே உணவருந்த அமரும்போது, ஆசனப்பலகையில் அமரும் பழக்கமே காணப்படுகிறது.

"தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக்  கவின் பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற்  செல்வன் இருந்தபின் ,
கடிமலர் அங்கையிற் காதலன் அடிநீர்
சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி :

                                                                                                                                                              ------ சிலம்பு - மதுரை காண்டம்  - கொலைக்களக் காதையில்,  35 முதல் 39 வரை

பனை ஓலைத்தடுக்கில் அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் நகரத்தார்களிடம் தான் செறிந்து காணப்படுகிறது என்பதாலும் கண்ணகி நல்லாள் நகரத்தார் குல நங்கையே என்பது நன்கு  புலப்படும்.

மேலும் இத்துடன்  நகரத்தார்  திருமணம்  குறித்த  ஒரு  காணொளிப்பதிவு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=7A1Gcj1xfaYhttps://www.youtube.com/watch?v=7A1Gcj1xfaY

இதுகாறும் ஊடாயிந்த மேற்கூறிய பல்வேறு சான்றுகளும் தரவுகளும், கற்புத்தெய்வம் கண்ணகி நகரத்தார் குலக்கொழுந்தே என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனியாய் எவ்வித  சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக்குகின்றன.

வழிபாடு, பெயர் சாயல் குறித்த  ஐயா  சிலம்பு செல்வரின் ஆதங்கம், ஆதாரமற்ற ஒன்று என்பதனையும், செட்டிநாட்டில் இன்றளவும் கண்ணகி ஆத்தாள்கோவில் உள்ளதையும், மற்றும் ஏனைய நகரத்தார்களின் சிலப்பதிகாரம் பெயர் பழக்கங்கள் ஐயந்திரிபற கண்ணகி நல்லாள் " நகரத்தார்
குலக்கொழுந்ததே" என்பதனை நிலைநிறுத்துகின்றன  என்பதனை தக்க சான்றுகளுடன் நிருபித்துள்ளேன்.

எனவே கண்ணகி   --  நகரத்தார் குலமகளா  ?? எனும் குழப்பவாதிகளின் வினா - பரப்புரை ஒன்று , உள்நோக்கத்துடனோ , அல்லது அறியாமையையின் வெளிப்பாடாகவோ செய்யப்படும்
ஒன்றே.
அஃது ஆராய்ச்சியாளர்கள் ஏற்கத்தக்கதல்ல.


என்றும் அன்புடன்
காரைக்குடி சேவு.க.ராம.நாகப்பன்
முகாம் ---துபாய்.


குறிப்பு :- இக்கட்டுரையின் ஆக்கத்திலும், அதற்கு தகுந்த புகைப்படங்கள் தொகுப்பதிலும்  எனக்கு துணைபுரிந்தது, மேலும் இதனை அழகுற தமிழில், தட்டச்சு செய்து தந்த தம்பிகள், நெற்குப்பை காசிவிசுவநாதன், கருப்பையா இராமநாதன் இருவருக்கும் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக.  

                                                                       நிறைவு.

6 comments:

  1. Very interesting to know.... Thanks for sharing

    ReplyDelete
  2. Great documentation, needed of the hour for Our upcoming generations, thanks for your effort and wish this get populated among Nagarathars..!!! :-) Great wishes for your efforts and upcoming as well. :-)

    ReplyDelete
  3. 😊😊😊😊😊நாடார்களே வாணிகர்கள்....
    இளங்கோவடிகள்...கண்ணகி கோவலன் மானாய்க்கன்... மாசாத்துவன் சேரன் செங்குட்டுவன்... சாத்தனார்....
    மபொசி ... என அனைவரும் நாடார் இன மக்களே....
    பனை ஓலை நாடார்களுக்கு உரியது...
    நாடார்கள் நாட்டார் வழிபாடு கொண்டவர்கள்....
    கேரளா கொடுங்கல்லூரில் கண்ணகிக்கு 10 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்ட கோவில் உள்ளது....
    பழுவேட்டரையன் நாடாரே...
    பனை மரக் கொடி கட்டி கலம் செலுத்தியவன்..
    சேரர்கள் நாடார்களே....
    பனம்பூ மாலை.... பனை ஓலைத் தாலி...அடையாளம்....
    பலராமனின் கொடி பனை மரக் கொடியே

    ReplyDelete
  4. செட்டியார்கள் வந்தேரிகள் ...

    ReplyDelete
  5. கண்ணகி என்ற பெயர் இருக்கும் போது கண்ணாத்தாள் எதற்கு....?
    சாத்தப்பன் என்பது காஞ்சியிலிருந்து சாத்து வாங்கி விரட்டப் பட்ட பின்பு திட்டமிட்டு வைக்கப் பட்ட பெயர்

    ReplyDelete
  6. கருத்தில் கொள்ளத்தக்க பதிவு.

    ReplyDelete