வேள் வணிகர் என்றும், நாட்டுகோட்டை நகரத்தார் என்றும், நானாதேசிக வணிகர் என்றும், ஆயிரத்தைநூற்றுவர் என்றும் அறியப்படும் தமிழர்குடிமரபு நகரத்தார்கள், நிலத்தால் ஒரு காலத்தில் ஒன்றுபட்ட, இன்று நீரிணையால் பிரிக்கப்பட்ட இன்றைய தமிகத்தின் அருகில் இருக்கும், ஈழத்தின் நாக நாட்டில் வாழ்ந்த தமிழ் வணிகர் குடியினர். நாக நாட்டு வணிகர் என்றும், மன்னர் பின்னோர் என்றும் பெருமைகளைத் தங்கள் மரபு வழிப் பண்பாட்டின் விருதுகளாய்க் கொண்ட “நாக நீள் நகரொடு அதனொடு போக நீள் புகழ் மண்ணும் புகார் நகர்......” ( சிலம்பு.. ) என்ற வரிகளைச் சான்றாகக் கொண்டவர்கள். மிகப் பழமையான பண்பாட்டு எச்சங்களைத் தங்கள் வாழ்வியலிலும், சொல் வழக்கிலும் கொண்டிருக்கும் ஒரு இனக்குழுவாக இன்றளவும் தமிழர் பெருமைகளைக் கடைபிடிக்கும் மரபாகவும் இருப்பவர்கள், காலத்தால் மிக முந்தைய கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஈழத்து நாகநாட்டில் வணிகக் குடியாகவும், பொருள் வணிகத்தையும், ஈழத்து மலைப்பகுதிகளின் ரத்தினப் படிவங்களை எடுத்து தெற்காசியா, சீனா முதலிய நாட்டினருடன் வணிகத் தொடர்பும் கொண்டிருந்தனர். இதற்கான தொல்லியல், புவியியல் தரவுகள் மிகத் தெளிவாகவே கிடைத்து வருகின்றன. அதனையும் மீறிய நகரத்தார்களின் சொல் வழக்கு (Anthropology), மரபு வழியில் இன்றுவரை கடைபிடிக்கும் பண்பாட்டுப் பதிவுகளே இவர்களின் தொன்மைக்கும், கிடைத்து வரும் தொல்லியல் – புவியியல் சான்றிற்கும், ஐயமின்றி ஒப்புமை கூறும் தரவுகளாகும்.
நாக நாட்டிலிருந்து சோழர்குடிக்குட்பட்ட தொண்டை மண்டலத்திற்கு குடிபெயர்ந்த காரணமும், பின்னர் புகார் நகர் வந்த காரணமும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால் புகார் நகரம், தங்களின் நெடிய மரபுவழிக் கடல் வாணிபத்திற்கு உகந்ததாக இருப்பதனாலும், தேர்ந்த துறைமுகமாக இருப்பதனாலும் இடம் பெயர்ந்தனர் என்பது உறுதி. கண்ணகி-கோவலன் காலத்திற்குப் பிந்தைய காலங்களிலும் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வாக்கில்இவர்களின் பாண்டி மண்டல இடப் பெயர்வும் பல காரணங்களைக் கொண்டதாகக் கூறப்படுவதில் ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் ராஜேந்திர சோழனது மறைவிற்குப் பின் வந்த சோழர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பல சோழர்குடிகள் குறிப்பாக நகரத்தார்கள், முத்தரையர், தஞ்சை ஆ-நிரைக்கள்வர் ஆகியோர் பாண்டிய நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். இந்த வருகைக்குப் பின்னர் பிற் கால பாண்டியர்களின் எழுச்சியும், குலோத்துங்க சோழனின் வீழ்ச்சியும் தொடங்கியது. கம்பர், நாட்டரசன் கோட்டை வந்தடைந்ததும் நகரத்தார் எனும் சோழர்குடி மக்களின் அணுக்கத்தை நாடியதேயாகும். # ( மூன்றாம் இராஜராஜனின் படுதோல்வியும், பின்னர் அமராண்டான் நகரில் {பொன்னமராவதி} இளைப்பாறிய சடையவர்மன் சுந்தர பாண்டியனிடம் கப்பம் கட்டியதோடு சோழர் வரலாறு தேக்கம் காண்கின்றது.)
நகரத்தார்களின் இடப்பெயர்ச்சி பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவும், ஆழிப் பேரலையின் சீற்றம் கண்டும் நிகழ்ந்துள்ளன. ஆகவே தான் தங்களது வள மனைகளை, நீர் பெருக்கால் அழிந்துபடாத கோட்டைகளாகவே அமைத்தனர். வளம் மிக்க குடிமனைகளைக் கொண்டதனால் நகரம் என்ற நகரத்தார்களாகவும், வளம் கொழிக்க சீர்மையுடன் வாழ்ந்த குடிமக்கள் வளவினர் – (வளவு) என்றும் குறிக்கப்பெற்றனர். எத்தனை இடப்பெயர்வுகள் வந்தாலும் தங்கள் மரபு வழிப்பட்ட தமிழர் தாய் நிலப்பகுதிகளிலேயே நடத்தினர். மரபு வழி வந்த வழிபாடுகளையும் விட்டுக் கொடுப்பதில்லாமல், வீடு, வணிகம்,பண்பாடு என அனைத்திலும் தங்களின் தொன்றுதொட்ட மரபினைத் தேக்கி, சடங்குகளாகவும், வாழ்க்கை முறைகளாகவும் கடைபிடிப்பது, எந்த ஒரு நிகழ்வினையும் ஒற்றுமையுடன் சேர்ந்து முடிவெடுப்பது, புதிய கருத்து / மாற்றம் ஆகியவற்றினை நீண்ட ஆய்விற்குட்படுத்தி ஒரு மனதாய் முடிவெடுப்பது என்பவையே இவர்களின் பாரிய வெற்றிக்கும், பண்பாட்டு நெறிக்கும் மன்னர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அறமும்கொண்டிருந்த பெருமைக்குரியவர்களாக வரலாறு இன்று வரை பதிவு செய்கின்றது. பாண்டிய நாட்டின் இடப்பெயர்விற்குப் பின் நகரத்தார்களின் முடிவுகளை, சுண்டைக் காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம், அவர்களின் தொன்றுதொட்ட இனக்குழு முடிவுகள் எடுக்கும் வழக்கத்தையும், எந்த எந்த காலங்களில் என்ன வகையான வணிகம் செய்வதென்பதனையும், கொண்டி விற்கும் தொழில் என்றால் அதில் நியாயமான வட்டி விதிப்பது குறித்தும் பதிவாகி உள்ளன. வேலங்குடிக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும், ஏனைய எட்டி (செட்டி) என்று வணிகர்களைக் குறிக்கும் கல்வெட்டு சங்க காலத்திற்கு (இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ) முந்தியதாகவும், அது திருச்சியை அடுத்த புகளூர் கல்வெட்டு சான்று சொல்கின்றது.
நகரத்தார்களில் கடலாடிக் கடல் கடந்து செய்யும் வணிகமும், அதன்பால் ஈட்டிய பொருட்களை வணிகச் சாத்துகள் வைத்து ( குழுக்களாக வண்டிகளில் ஏற்றி ) பாதுகாப்புடன் செய்யப்படும் உள் நாட்டு வணிகம். இவையே முந்நீர் கடத்தல் என்பதாகவும் அதற்கு காவற்படை கொண்டிருக்க அரசுரிமையும் பெற்றனர். வணிகச் சாத்துகளாக வண்டிகளில் செய்யப்படும் வாணிபத்திற்கும் காவற்படை அமைத்துக்கொள்ள உரிமை பெற்றனர். இவைகளை சோழப் பேரரசர்கள் நகரத்தார்களுக்கு வழங்கிய பல கல்வெட்டுகள் சோழ மணடலம் மட்டுமின்றி சங்க இலக்கியங்கள், கடல் கடந்த தெற்காசிய நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகளும் சான்று சொல்கின்றன.
கலம் கொண்டு செய்யும் வணிகர்களை நாயகன் என்றும் தரை வழியாகச் செய்யப்படும் பெரு வணிகத்தை சாத்து-சாத்தான் என்றும் குறித்தனர். இது போன்ற சொல்லாட்சிகளை நகரத்தார் இனக்குழுவினர் சிலபதிகாரம் காலம்தொட்டு இன்றுவரை வழக்கில் கொண்டுள்ளது தெளிவு. மாநாய்கன் மகள் மாணிக்க கண்ணகி, மாசாத்துவன் மகன் கோவலன், கண்ணகி ஆத்தாள் கண்ணாத்தாள், சாத்தப்பன், என்று இன்றும் வழக்கில் இருந்து வருகின்றது.
பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின், அந்நியர் ஆட்சிகாலங்களில் நகரத்தார்களின் காவற்படையினை விஜய நகர அரசர்கள் முடக்கினர். பாண்டியர்கள் அனுமதித்த ஏழகப்பெரு வீடு என்ற தனிப்படை, பாண்டியர்களுக்காய் மிகப்பெரும் போர் நடத்தியது. அதில் மாலிகபூர் படையுடன் நடந்த உக்கிரப் போரில், நகரத்தார்களின் ஒன்பது கோவில் புள்ளிகளுக்காகவும் வயிரவன் கோவில் நகரத்தார்களால் பரிபாலனம் செய்யப்பட்ட ஏழகப்பெரு வீடு என்ற தனிப்படை உக்கிரமாய் போர் புரிந்து தோல்வியைத் தழுவியது. வயிரவன் கோவில் முற்றாக அழிந்தது. பின்னர் அந்தக் கோவில் அதே ஊரில் பல காலம் கழித்து புணரமைக்கப்பட்டது. இடிந்த பழைய கோவில் கல்வெட்டுகள் நமக்கு மேற்படி வரலாற்றை தாங்கி நின்றது. இதனைக் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களின் ஆய்வுகள் வெளிக் கொணர்ந்தன.
பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட தொடர்ச்சியான அயலார் ஆட்சிக் காலங்களில் நகரத்தார்கள் சைவ மடங்களுடன் இணைந்து தமிழ் கோவில்களைக் காப்பதில் முனைப்பு காட்டினர். தங்கள் குழந்தைகளுக்கு தமிழர் பண்பாடு, சைவாகம நெறி, தமிழ்ப் பெருந்தச்சர்களைக் கொண்டு கோவில்களைப் பராமரிப்பது என்று மிகபெரும் பண்பாட்டு அரண் அமைத்தனர். இதுவே இன்றுவரை தமிழர் பண்பாடு அயலார் தாக்கத்திலிருந்து நமது தனித்துவத்தைக் தற்காத்து நிற்க உதவியது. அதன் தொடர்ச்சியே இன்றைய கல்விக்கொடை, கோவில், குளம் வெட்டுதல், நீர் நிலை பெருக்குதல் என்ற தொடர்ச்சியுமாகும்.
வெள்ளையர் ஆட்சியும் நகரத்தார் மீட்சியும்.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் தேக்க நிலை கண்ட நகரத்தார்கள் தங்களின் திறமையாலேயே, வெள்ளையனை மாமன்னர் மருதிருவருக்காக, ஒக்கூர் நகரில் படை நடத்திகொடுத்து கடும் போர் புரிய உதவினர். அந்தத் தோல் விக்குப் பின்னரும், வெள்ளையர்கள் நகரத்தார்களின் கடலாடும் திறன் கண்டு தங்களின் ஆளுகைக்குட்பட்ட தெற்காசிய பகுதிகளான பர்மா, மலேயா உள்ளிட்ட நாடுகளுக்கு வழமையான கொண்டி விற்கும் தொழிலான சிறு வணிகக் கடன் முதலீட்டிற்கு இசைவும் ஆதரவும் தந்தனர். மீண்டும் ஏரகத்து முருகன் துணை கொண்டு செட்டிக் கப்பல் நாட்டார், மறவர், பெருந்தச்சர் ஆகியோரின் குழுக்களுடன் வட்டித் தொழில் சிறக்க, முல்லை நிலங்கள் திருத்தி மருத நிலம் சமைத்து, தொழில் வளம் பெருக்கி, தங்களின் குடிவகையான கோட்டைகள் கட்டி வாழ்ந்தனர். சென்ற இடங்களில் வெள்ளையர்களின் அனுமதியும், அதனைத் தொடர்ந்து கி.பி 1826 ஆம் ஆண்டு தொடங்கியதும் இன்றளவும் லண்டன் ஆவணக் காப்பகம் சொல்லும் உண்மை.
அதுபோலவே நாக நாட்டு தொடர்பு என்பதை நமது பண்பாட்டின் தொடர்ச்சியாக பிள்ளையார் நோன்பு என்ற வழக்கில் இன்றும் கைவிடாமல் எடுத்து வருவதும், அதே போல் ஈழத்து மக்கள் இன்றும் இந்த பண்பாட்டு நிகழ்வினைத் தொடர்வதும் நமது வழித்தடத்தின் சான்றுகளாகும்.
சான்று நூற் பட்டியல் :
1. சோமலே – செட்டிநாடும் செந்தமிழும்
2. தேவகோட்டை சின்நயந் செட்டியார் எழுதிய நகரத்தார் வரலாறு
3. டாக்டர் தமிழண்ணல் எழுதிய பத்துப்பாட்டு ஆய்வுரைகள்
4. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுத் தொகுதி
5. டாக்டர் மா.ராசமாணிக்கனார் ஆய்வுப் பேரவை புதுகோட்டை கல்வெட்டுகள்
6. ஆய்வாளர்கள் நடன காசிநாதன், ஐராவதம் மகாதேவன்.7. கம்பனடிப்பொடி சா.கணேசன் வயிரவன் கோவில் கல்வெட்டுகள்8. காரைக்குடி சேவு.கதிர்.இராம.நாகப்பன் அவர்களின் நாகநாட்டு ஆய்வுக்கட்டுரைகள்.
9. பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் எழுதிய சுண்டைக்காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம்.
10. வெற்றியூர் அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பண்பாடு.
11. Ancient Jaffna – By C.RASA NAYAGAM ( 1910. A.D PUBLISHED).
12. நகரத்தார் மரபும் பண்பாடும் – மா.சந்திரமூர்த்தி.
2. தேவகோட்டை சின்நயந் செட்டியார் எழுதிய நகரத்தார் வரலாறு
3. டாக்டர் தமிழண்ணல் எழுதிய பத்துப்பாட்டு ஆய்வுரைகள்
4. தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுத் தொகுதி
5. டாக்டர் மா.ராசமாணிக்கனார் ஆய்வுப் பேரவை புதுகோட்டை கல்வெட்டுகள்
6. ஆய்வாளர்கள் நடன காசிநாதன், ஐராவதம் மகாதேவன்.7. கம்பனடிப்பொடி சா.கணேசன் வயிரவன் கோவில் கல்வெட்டுகள்8. காரைக்குடி சேவு.கதிர்.இராம.நாகப்பன் அவர்களின் நாகநாட்டு ஆய்வுக்கட்டுரைகள்.
9. பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் எழுதிய சுண்டைக்காட்டு வேலங்குடிக் கல்வெட்டு சாசனம்.
10. வெற்றியூர் அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பண்பாடு.
11. Ancient Jaffna – By C.RASA NAYAGAM ( 1910. A.D PUBLISHED).
12. நகரத்தார் மரபும் பண்பாடும் – மா.சந்திரமூர்த்தி.
குறிப்பு:- நாக நாடும் அதனைத் தொடர்ந்த நகரத்தார்களின் இடப்பெயர்வு குறித்த ஆய்வுகளும், தரவுகளும் காரைக்குடி அண்ணன், சேவு.கதிர்.இராம. நாகப்பண்ணன் அவர்களின் தரவுகளையும், ஆலோசனையினையும் ஏற்று, அனுமானங்களற்ற ஒரு ஆய்வாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் அளவு கருதி உள்ளடக்கம் பலவற்றைத் தொடாமல் விடுபட்டுள்ளது. நன்றி.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன். நாள் : 25-09-2015
---- நெற்குப்பை காசிவிசுவநாதன். நாள் : 25-09-2015
No comments:
Post a Comment