Friday 18 December 2015

நான் கண்ட ஆச்சிகள்-4


நான் கண்ட ஆச்சிகள்-4
தேனம்மை ஆச்சி
என்பது வயதில் கணவர் சிவபதவி அடைந்தபின் குழந்தைகள் இல்லாததால் எடுத்து வளர்த்த கொழுந்தன் பிள்ளை, அயித்தியாண்டி ,ஆச்சி மக்கள் ஆதரவோடு 70வயதை கடந்தாச்சு

கட்டிக்கொண்ட கணவருக்கு இறப்பர் தோட்ட நிர்வாக வேலை இளவயதில் மகிழ்வான வாழ்கை வரும் உறவினர் நண்பர்களுக்கு ருசியான நல்லுணவோடு விருந்தோம்பல்
கொழுந்தன் மணைவி இழந்து இரண்டாம் திருமணம் செய்கிறார் அவருக்கு அப்போது 5வயது பையனும் கைக்குழந்தையாய் ஒரு பையனும் பெரியவனை விடுதியில் சேர்த்து கைகுழந்தையை வளர்க்கும்படி அண்ணன் காலில் விழுந்து அழுகிறார்
கொழுந்தன் சுயநலம் இளம் மனைவியோடு சுகமாகவாழ குழந்தையை இடைஞ்சலாக கருத, இந்த ஆச்சி கணவனிடம் குழந்தையை நாம் வளர்ப்போம் என்று கணவனை ஏற்க சொல்லுகிறார் எந்தவித ஒப்பந்தமும் எதிர்பார்ப்பும் இல்லாமல்
பையன் வளர்ந்து 6ம் வகுப்பு படிக்கையில் ஓரகத்தி கொழுந்தன் மூலம் பையனை இவர்களிடமிருந்து பிரித்து கூட்டி செல்கிறார் பின் அவனை காண அனுமதிக்கவும் இல்லை
இந்நிலையில் கணவரின் உடலில் மாற்றங்கள் பரிசோதித்ததில் தொழுநோய் என தெரியவருகிறது கணவனின் நல் வேலை போய் சொற்ப சம்பளத்தில் வேலை
தான் பிறந்த வீட்டில் இருந்து கொண்டுவந்த சாமான்களை விற்று பற்றாக்குறையை சரி செய்து வாழ்க்கை ஓட்டம் ஆச்சிக்கு அப்போதும் தன்னல எண்ணம் வரவில்லை எப்போதும் போல் உறவு நண்பர்களுக்கு விருந்தோம்பல்
கல்கி சாண்டில்யன் கதைகள் படிப்பார் வார இதழ்கள் குமுதம் கல்கியில் வரும் தொடர்கதைகளை படித்து அவைகளை தைத்து வைப்பார் திரைப்படம் ஒன்று விடாமல் பார்ப்பார் புதிய சேலைகள் பூ இவைகளில் சராசரி பெண்டிரைவிட அதிக நாட்டம் உள்ளவர் இவைகள்தான் அவரது மன அழுத்த வடிகால்களாக இருந்திருக்கும்
நோயுள்ள கணவரை வெறுப்பு ஏதுமின்றி நேசித்து உடன் வாழ்ந்தார் அவரின் வாழ்வின் மகிழ்வு இறுதி காலத்தில் தான் வளர்த்த கொழுந்தன் மகன் தன்னை தாயக ஏற்று கொண்டதே
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைத்த வாழ்வை பிறழாமல் வாழும் இவர்களே நம் பண்பாட்டின் காவல் தெய்வங்கள்

----------தெய்வானை சந்திரசேகரன் 

Wednesday 16 December 2015

நான் கண்ட ஆச்சிகள் -3

நான் கண்ட ஆச்சிகள் -3
ஞானம்பாள் ஆச்சி
திருமணம் முடிந்து புகுந்தவீட்டிற்கு சென்றவர்கள் கனவுகளோடு சென்றவர்கள் குடும்பவாழ்க்கை கனவாகவே போனது
கணவன் புத்தி சுவாதீனமில்லை அவருடனே வாழ்க்கை வாழ்ந்து முடித்தார் இளமை முழுதும் வீண் என்று நினைக்கவில்லை
காட்டு கத்தல் கத்தும் கணவனை உள்வீட்டில் பூட்டிவைத்து முகப்பின் வெளியே முற்றத்தில் ஓரமாய் அடுப்படி அமைத்து சமையல்
புத்தி சுவாதீனமில்லாத கணவனுக்கு நேரத்திற்கு உணவளித்து நியமங்கள் எல்லாம் பயமின்றி தனி ஆளாய் உடனிருந்து செய்தார்கள்
வெண்மை வண்ணம் வெற்றிலை மென்ற வாய் உறவினரை குழந்தைகளை காணும்போது முகம் முழுதும் புன்னகை கண்கள் சுருக்கி பார்வை எப்போதும் எதிர் நிற்பவர் மனதை ஆராய்வதுபோல்
ஒரு கட்டத்தில் கணவன் நிலை கொள்ளாது ஆட்டமிட சங்கிலியால் வளவில் பிணைத்து வைத்து பார்த்தார் ஊர் ஆயிரம் பேசியது உறம் மிகுந்த நெஞ்சம் கலங்கவில்லை களங்கமில்லை

உறவுகள் வீட்டிற்கு வந்து போய் உறவாய் இருந்ததை பலமாக மனதில் கொண்டு காலம் சென்றது முதுமை காலத்தில் கணவர் இயற்கை அடைந்தார்
அதன் பின் உறவுகள் பங்காளிகளை வைத்து பிள்ளை கூட்டினார் பேரன் பேத்திகள் கண்டார் வாழ்வில் மகிழ்ச்சியின் முகம் காலம் கடந்து கண்டார்
அவரின் கிடைத்தவாழ்வை ஏற்று கடமை செய்து இறுதியில் மன இன்பம் பேரன் பேத்திகள் மூலம் அடைந்த பூமா தேவி பொறுமை
பண்பாட்டினுள் வாழ்ந்திருந்த தன்மை பகர விளக்க முடியாத அதிசயம் உண்மை ஒருவர் தன் விருப்பமின்றி கட்டாயத்தில் இப்படி வாழ முடியாது
என்னால் இயன்றவரை எழுதி அப் பண்பாட்டு தெய்வத்தை வணங்குகிறேன்

--------- தெய்வானை சந்திரசேகரன் 

Tuesday 15 December 2015

நான் கண்ட ஆச்சிகள் -2

நான் கண்ட ஆச்சிகள் -2
பரிபூரணாச்சி இளமையில் கணவரை இழந்தவர்கள் கருத்த வண்ணம் கடுத்த முகம் வெள்ளை சேலை நகை ஒன்றும் அணியாத ஆச்சி
சிடுசிடுப்பான பேச்சே பிறர் அவரிடம் பேசினால் வரும் அவராக வந்து பேசும்போது அமைதியாக பேசுவார்கள் பெரும்பாலும் பேசமாட்டார்கள்

அடுத்த அடுப்படியில் பிள்ளைக்கு சாப்பாடு போட்டு கொண்டிருக்கும் சற்று எதவான ஆச்சியிடம் அடி இவளே கத்திரிக்காய் குழம்பு இருக்குடி பிள்ளைக்கு ஊத்தி சோறு போடுடி ரசம் வேண்டாண்டி என்று கொடுக்கும் குணம்
கொழுதுனாமிண்டி வெளியூரில் வாழ்பவள் வாவரசி ஊருக்கு கணவனுடன் வந்து இவர் முன்னாள் சிலுப்புவார் ஒரே அடுப்படியில் சமைக்கும் போது ஆச்சி மன அடுப்பில் ஆற்றாமை வெடித்து வார்த்தையாய் சிதறும்
அவள் சென்றபின் பாத்தியாடி இவளே என்று பக்கத்து அடுப்படியில் கொட்டி பழைய நிலைக்கு வருவார்கள் இரு பெண் ஒரு ஆண் பிள்ளைகளை பெற்றவர்
அடுத்த வீட்டு அதிகம் பிள்ளையுள்ள ஆச்சிக்கு பொருள் கடன் கொடுப்பார் தன் பிள்ளைகளை படிக்கவைத்து திருமணம் செய்துவைத்து பேரன் பேத்திகள் கண்டார்
முதுமையடைந்து நோய்வாய்பட்டு சென்றார் இளமையில் இச்சமூக பண்பாட்டை காத்து வாழத்தான் சிடு சிடு கடுத்த முகம் காட்டி வாழ்ந்தாரோ என்ரெண்ணத்தொன்றுகிறது
இப் பண்பாடு காப்பதற்கு இப்படி எத்தனை தியாகங்கள் நினைத்து காப்போம்
------------தெய்வானை சந்திரசேகரன்

நான் கண்ட ஆச்சிகள்



நான் கண்ட ஆச்சிகள்
நாச்சம்மை ஆச்சி
 மூக்குத்தி மின்ன மஞ்சள் பூசிய மகாலக்சுமி சிரிப்போடு வாழ்ந்தவர்கள் ஆண் பெண் பிள்ளைகள் பெற்ற வாஞ்சைஉள்ள மகராசி
கொண்டுவிற்க சென்ற கணவன் வெளிநாடு சென்று ஆண்டுகள் பல ஆகியும் ஊர்வரவில்லை பணங்காசு வந்தாலும் கணவன் பசித்த முகம் பார்த்து பரிமாற வாய்ப்பில்லை என ஏங்கும் மனத்தோடு வாழ்ந்தார்கள்

பிள்ளைகள் கல்யாணங்கள் பேசி முடித்து பெற்றவர் வராமலே நடத்த வேண்டிய நிலை வந்த போதும் வாழ்வை எளிதாக எதிர் கொண்ட வாழ்வரசி
சம்மந்தங்கள் அனைத்தையும் சரிசெய்து கொண்டு பிள்ளைகளின் பிள்ளை பேறு பார்த்து பேரன்பேத்தி கண்டார் நல்லதும் கெட்டதும் தனித்து நின்றே கண்டார்
சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து வந்தார் கணவர், முகம் மலர்ந்தார் ஆச்சி வயதுகள் போனபின்பும் வருத்தமில்லா வரவேற்பு, மனதில் ஆழமாய் கண்ட கனம் முதல் வரித்த காரணத்தால் இருக்குமோ?
வயதான காலத்தில் கணவரோடு சிலகாலம் வாழும் பேரே கிடைத்தாலும் பண்பாடு காத்து பாசத்தோடு குடும்பம் காத்த மாதரசி இப்படி எத்தனை மாதரசிகள் எம் குலத்தில் இருந்து சென்றார் அறியேன்
நானும் இக்குலத்தின் பண்பாட்டை காப்பதே அவர்களுக்கு நானளிக்கும் மரியாதை

----------தெய்வானை சந்திரசேகரன் 

Saturday 12 December 2015

‪#‎புள்ளி___மாறிய‬ (அலங்) கோலங்கள்

‪#‎புள்ளி___மாறிய‬ (அலங்) கோலங்கள் :
***************************************************
புள்ளி வைத்துக் கோலமிடுபவர்கள், வைக்கின்ற புள்ளிகளை சரியான வரிசையில், முறையாக வைத்து நிறைவாகக் கோலமிடுவார்கள். நடுவீட்டுக் கோலமும் சரி மணவறைக் கோலமும் சரி, மாகோலம்மிட்டாலும், நீர்கோலமிட்டாலும் புள்ளி பிசகாமல், அள்ளித் தெளிக்காமல் பாண்டி முத்துப் பரவியது போல், தொட்ட கோலம் தொடர்ந்திடவே அவர்கள் அன்று இட்ட கோலங்கள் புள்ளி மாறாமல் சீர்குலையாமல் மரபாக வந்துள்ளது.
எத்தனை படையெடுப்பு ? எத்தனை அரசியல் மாற்றங்கள் ? எத்தனை எத்தனை வாழ்வியல் சிக்கல்கள் ? சோழர் குடி, வடுகர்வசமாகும் போதும், தமிழர் அறம் மாறாமல் பாண்டி மணடலம் அடைந்த நகரத்தார்கள், இன்று எடுத்து வைக்கும் கோலங்கள் எல்லாம் ஏன் இப்படி புள்ளி மாறிய அலங்கோலங்களாக இருக்கின்றன ??


பதினாறாம் நூற்றாண்டில் ‪#‎ஏழகப்___பெரு____வீடு‬ முடக்கப்பட்ட போதும், தங்கள் தமிழர் மரபுமாறாமல் வாழ்ந்த நகரத்தார்கள் (வேள்வணிகர் என்ற நாட்டுகோட்டை நகரத்தார்கள் ) இன்று வடுக மலையாள நாயர்கள் வீட்டில் பெண் தேடுவது, மராட்டியர் படையுடன் வந்தேறிய சௌராஷ்டிரர்கள் வீட்டில் பெண் தேடுவது, நாயுடுக்கள் வீட்டில் பெண் எடுப்பது என்று வெள்ளைத் தோல் தேடி இன அடையாளம் தொலைக்கும் விடலைகளும், எங்கோ எப்படியோ பணத்தோடும், நிறத்தோடும் வாழ்ந்தால் போதும் என்ற நிற மோகம், பண மோகம் என்ற ரெட்டை மோக வலையில் வீழ்ந்தவர்கள் இன்று என்ன செய்கின்றனர் ?????

கையில் உள்ள பணத்தைக் கட்டாகக் கட்டி வைத்து, ஊர் நகரப் புள்ளியில் நாயுடு மருமகளை சேர்க்கின்றேன், நாயர் மருமகளை சேர்க்கின்றேன், கழுத்துருவில் திருப்பூட்டுகின்றேன், படைப்பு வீட்டில் புள்ளி வரி கட்டுகின்றேன் என்று தமிழர் மரபுகளை வடுகர்களுடன் கைகோர்த்து விலைபேசும் பண முதலைகளே....!!!! ஒரு இனக்குழு வானது ஒரு போதும் பண பலத்தை வைத்து வாழ்ந்து விடுவதில்லை. வரலாறு தோறும் கடந்து வந்த பாதைகளில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதனை நம் ஐயாக்கள் வாழ்ந்து உணர்ந்து அதற்கான வழி வகைகளைச் செய்துள்ளனர். அவர்கள் ஒரு போதும் வேற்று இனத்தில் பெண் தேடி நடுவளவு கொண்டு வந்து சேர்த்ததில்லை. அப்படி சேர்த்தால் குடியழியும் என்பதனையும் உணர்ந்தே இருந்தனர். கேடுற வேண்டும் என்றால், தமிழர் குடி அழிக்காமல், மாற்றார் பெண்டுகளைச் சேர்ந்தவர்கள் அப்படியே போய்ச் சேரவும். உள்ளே வந்து கோடாரி வேலைகள் செய்ய வேண்டாம்.
புள்ளிக் கணக்கில் சேர்ப்பதற்கு உங்களிடம் பணம் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு மரபு வழியாகப் பிறந்துவர வேண்டும். அது மட்டுமே போதுமானது.
வடுகப் பதர்களை ஊர் வந்து சேர்த்து, நிறம் காட்டி, பலம் காட்டும் வந்தேறிகள் இன்று அரசியல் பலம் கொண்டும், பண பலம் கொண்டும் படைப்பு வீட்டையும், பங்காளிப் புள்ளிப் பட்டியலையும் சூரையாடினால் மரபு வழி தெய்வங்கள், துணை போகும் துரோகிகளையும் சேர்த்தே ‪#‎தீர்ப்பெழுதும்‬. மறவாதீர்...!!!!
படைப்பு வீடுகளும், படைப்பு தெய்வங்களும் மரபு வழி தெய்வங்கள். அவைகள் வடுகப் பீடைகளுக்காக திறக்கபடுவதில்லை. இனம்- இனக்குழு மரபு என்பவற்றை மீறும் பணப்பேய்கள் எதன் காரணத்திற்காய் அங்கே சென்றார்களோ, பிறகு இங்கே வந்து கலப்புற நினைப்பது அற்பம். கயமை.
பணம் வைத்திருந்தால் எதையும் வாங்கலாம், ஆனால் குடி மரபு என்பதனை அல்ல. இன்று ஊரில் வடுகர்களுக்குப் பிறந்தவர்கள் வடுகக்காவலர் சகிதமாய் படைப்பு வீடுகளை ஆளலாம் என்று நினைப்பதும், அதற்கு மரபுவழி நகரத்தார்கள் துணை போவதும் தவறு. ஊரில் பொருளாதார பலமற்றவர்கள் நகரப் பங்காளிகள், கோவில் பங்காளிகள் என்று படிப்படியாய் ஒர்மையடைய வேண்டும். அதனை விட்டுவிட்டு அரசியல்பலம், பணபலம் என்பதெல்லாம் கவைக்குதவாது. விரைவில் காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.அப்போது தமிழர் குடியின் ஊடுருவல் செய்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். படைப்பு வீடுகள் மஞ்சள் நீர்தெளித்து (கிருமி நாசினி) புதுப்பொலிவு பெறும்.
‪#‎பணம்‬ தின்னும் பேய்கள் உண்டு. ஆனால் ஒரு போதும்‪#‎பிணங்கள்‬ பணம் திண்பதில்லை. இது ‪#‎இயற்கையின்‬ நியதி.

---வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---நெற்குப்பை காசிவிசுவநாதன். 12-11-2015.

மெய்கீர்த்தி





‪#‎ஐயா‬ அவர்களுக்கு எழுதப்பட்ட ‪#‎மெய்கீர்த்தி‬ :-

அண்ணாமலையரசன் மடி தவழ்ந்து
முத்தைய வேள் மார் புரண்டு – சிலம்பு
நெறிச் செல்வர் தனக்கே மைந்தன் என,
தன்னை வரித்துக் கொண்டு ஆதரவாய்
அண்ணவரின் தோள் சேர்ந்த வரலாறு..
ஆகட்டும் உனக்கு மெய்கீர்த்திஎன..!!!
ராணி சீதையவள் செய்வித்த அரண் வளர்ந்து,
மெய்யம்மை மகனாக எங்கள் ஐயா ராமசாமி
வேழத்தின் முடியமர்ந்து, இசைக் காவலர் அரண்
காத்து, கொற்றத்தின் கொடி பறக்க – முற்றத்தின்
முன் வந்த, கூற்றத்தை எதிர்கொண்டு, நாளும்
சோராத வாழ்வதனை வாழ்வாங்கு வாழுகின்ற
நெஞ்சுரத்தின் உறைவிடம், தேற்றத்தால் தேடியதை
நாட்டத்தால் நற்கதிக்கு மனமுவந்து கொடுத்தானை,
பாசமென்ற சொல்லிற்கு பாங்குடனே தேடியவன்,
பணமென்று ஒன்றிற்காய் வேடிக்கை பார்த்திருக்கும்
விந்தை மனிதர்களையும் தான் பார்க்க, செய் திருவின்
நோக்கத்தால், நோகவில்லை, முட்டா(த) காழ்புணர்ச்சி,
மிகு வஞ்சம் கொண்டலையும், பித்தர்கள் முன் நிற்கும்
உலகினையும் பார்த்திடுவாய் மகனே...!!!!
என்று, நாளும் நீ வணங்கிச் செய்வித்த
பூசையினை ஏற்று, தில்லை
அம்பலத்தான் மனமுவந்து,

நன்றி கொன்று வாழுகின்றோர்,

உன்னிடம் நத்திப் பிழைத்த,
பிழைபட்ட மனிதர்களாய்வாழ்ந்து

வரும் பிணங்களையும் பார்த்திடுவாய்

என்றே பணித்திட்டார்.
செத்தாரை போலே நடைப் பிணங்கள் உலவுகின்ற
மானிடர்க்கு நன்றி உண்டோ....!!!???

கேள்...!!!!! ஐயா...


பட்டத்து யானை உனக்காக... பரிவட்டக் குதிரையும்
உனக்காக... கைகட்டி வேடிக்கை பார்த்த குருடருக்கெல்லாம்
மீண்டெழுந்த கதை கேட்க...
செவிட்டுப் பறை கிழிந்தனவே..
தெரு முட்டும் சந்தியிலே, முதுகுரசும் கழுதைக்கு தெரிந்திடுமோ..??!!!
யானையது படுத்தால் குதிரையது மட்டம்....
பட்டத்து யானைக்கும், பரிவட்டக் குதிரைக்கும் கழுதைகளா குஞ்சம்..???!!!
இசைத்தமிழ் ஒலித்திருக்க, சிலம்பின் ஓசையினால் முத்தைய வேள்
மகனுக்கு, சிதம்பரனார் மகன் முத்தையா துணை நிற்கும் கோலத்தில்,
கொற்றத்து முற்றத்தில், தேற்றத்தால் தேடியவை உன் நாட்டத்தே
இருக்கட்டும்....!!! வரலாற்றில் முழுமை பெற்றாய், வஞ்சகத்தை
உணர்வதற்கு சிற்றம்பலத்தான் சொல்வதெல்லாம் நடக்கட்டும்

நல்லவிதமாய், வாழிய வாழ்வாங்கு....!!!!


----வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.

---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
21-06-2015 ‪#‎தந்தையர்__தினம்‬. அன்று எழுதப்பட்ட ஒரு கவிதை

தமிழ்நாடு ஆவணக்காப்பகம்

தமிழ் நாடு ஆவணக் காப்பகம் என்று அறியப்படும், MADRAS RECORD OFFICE என்று முதலில் தொடங்கப்பட்ட சென்னை ஆவணக் காப்பகம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலை பேரிடருக்குப் பின்னர் இடமாற்றம் செய்யும்படி பல வரலாற்று ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்.


 இதுவரை திராவிட அரசுகள் இது குறித்து சிந்திக்கவும் செவிசாய்க்கவும் இல்லை என்பது வருந்தத் தக்கது. தற்போதைய சென்னை, கடலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருமழையும் அதனைத் தொடர்ந்த பேரிடர் நெருக்கடியும் இயல்பு வாழ்க்கையினையும் அளவில்லாத பொருள்,உடமைகள் சேதத்தையும் விளைவித்துள்ளது. இந்த நேரத்தில் தமிழர்களின் ஆவணங்கள் நிறைந்த சென்னை எழும்பூர், தமிழ் நாடு ஆவணக் காப்பகத்தை முழுமையாக,‪#‎புதுகோட்டை‬ நகருக்கு விரிவான பாதுகாப்பான கட்டிடம் ஏற்படுத்தி, மாற்ற வேண்டுமாய் தமிழ் நாடு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மக்களின் துயர் துடைத்து, இயல்பு வாழ்க்கை வந்த பின்னர் தமிழக அரசு இது குறித்து முனைப்புடனும், முதன்மையாகவும் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதையும், வரலாற்றைத் தொலைத்து, அடையாளத்தை இழந்து ஒரு தேசிய இனம் இருக்க முடியாது என்பதனையும் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகாறும் திராவிட அற நிலையம் என்ற பெயரில் தமிழர் வழிபாட்டுத் தலங்கள், கல்வெட்டுகள் கேட்பாரின்றி துடைத்தெறியப்படுவதையும் கருத்தில் கொண்டு இந்த அவசியமான வேண்டுகோள்‪#‎நகரத்தார்___வரலாற்று____நடுவத்தால்‬ முன் வைக்கப்படுகின்றது. தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் கைகோர்த்து இந்தக் கோரிக்கையின் இன்றியமையா தன்மையினை உணர்ந்து இதனை அடுத்த செயல் கட்டத்திற்கு நகர்த்தும்படியும் வேண்டுகிறேன். நன்றி.

--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன். 12-12-2015.