Friday 29 August 2014

லயன் சித்தி விநாயகர்` கோயில் (விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு )

சிங்கப்பூர் நகரில் நகரத்தார்கள் பராமரிப்பில் உள்ள ஆலயங்கள் என்றால் இரண்டு உள்ளன .
 ஒன்று அண்ணன் கணபதியின் ஆலயமும்
 இரண்டாவது தம்பி சுப்பையன் ஆலயம் .

இந்த இரண்டு ஆலங்களுமே மிகவும் பிரசித்தம் . அண்ணன் கணபதிக்கோ சைனா டவுன் என்னும் இடத்தில லயன் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்கின்றார் .

 லயன் சித்தி விநாயகர் இந்த பெயர் விளக்கம் இதோ சித்தி விநாயகர் சித்தி என்னும் சொல்லுக்குக் கைகூடுதல்வெற்றிவீடுபேறுஅற்புத ஆற்றல் எனப் பல பொருள்உண்டு. இவற்றை எல்லாம் வழிபடும் அடியார்களுக்கு விநாயகப் பெருமான் வழங்குவதால் அவர் சித்தி விநாயகர் என அழைக்கப் படுகிறார்.லயன் என்பது ஆங்கில சொல் தமிழ் வரியில் குறிப்பிடபட்டுள்ளது . வரலாற்று அடிப்படையில் முதலில் இந்தக் கோயில் சிப்பாய் லைனில் (Sipay Line) இருந்து வந்ததால் `லயன்என்னும் அடைமொழி வந்தது எனலாம்.

செட்டிமக்கள் வேல் வைத்து பூசை போட்டும் சுப்பையனுக்கே கோயில் கட்டி வழிபடுவதுதானே வழக்கம் . இங்கு எப்படிஇந்த சித்தி விநாயகர் கோயில் வந்தது . இந்த கோயில் உருவான வரலாற்றை இங்கு பார்போம் .

ஆலயத்தின் தற்போதைய தோற்றம் 

ஆலயத்தின் 193௦ களில் இருந்த தோற்றம் .தைபூசத்தின்போது அண்ணனை
காண தம்பி வெள்ளித் தேரில் வந்த காட்சி . ஆலயத்தின் முன் வெள்ளித் தேர் .


தல வரலாறு : 

சிதம்பரத்தில் சிவாநுபூதி பெற்ற திரு. பொன்னம்பல சுவாமிகளால் இங்குள்ள சித்தி விநாயகர் உருவம் நிறுவப்பெற்றது. சுவாமிகள் இல்வாழ்க்கையில் இருந்தவர். பட்டாளத்தைச் சேர்ந்தவர்.  சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பட்டாளத்தில் இவரும் ஒருவராக வந்தார் அப்போது அவர் வருகையில் தம்மோடு கையில் ஒரு விநாயகரையும் கொண்டு வந்தார் . தாம் பூசை செய்வதற்காக  அந்த விநாயகர் சிலையை ஒரு அரச மரத்தடியில் வைத்து பூசை செய்து வந்தார் . கோவிலை அடையச் சிப்பாய் லைனிலிருந்து ஒரு நடைபாதை உருவாக்கப்பட்டது. கோயிலுக்கு அருகில் ஒரு மருத்துவமனையும் இருந்தது இந்த கோயிலுக்கு அருகில் அருகில் ஒரு சிறைச்சாலையும் இருந்தது . முதலாம் உலகப்போரின் இறுதியில் கோயிலுக்கு தகரக்கொட்டகையும் ஒரு நாகர் சிலையும் நாமமும் (திருமண் ) அமைக்கபட்டது  இந்த கோயிலுக்கு அன்றாட வந்து வழிபட்டோர் மருத்துவமனை ஊழியர்களளும் சிறைச்சாலை பணியாளர்களும் ஆவர் .இப்படியாக தினம் பூசை செய்து வழிபட்டு வந்த பொன்னம்பல சாமிகளுக்குஅவர் உத்தியோக மாறுதலில் இந்தியா செல்ல நேர்ந்தது. அப்போது அவர்  விநாயகர் உருவத்தை எடுத்துச் செல்லாமல் தான் வழிபட்ட விநாயகரை நகரத்தார்களிடம் ஒப்படைத்துச் செல்ல விரும்பினார். முதலில் நகரத்தார்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தை அணுகுமாறு  பொன்னம்பல சுவாமிகளிடம்  கூறினர். இந்து அறக்கட்டளை ஆர்வம் காட்டாததாலும், சுவாமிகளின்  விடாப்பிடியாக இருந்ததாலும் கோவிலை நகரத்தார்கள் ஏற்று அங்குப் பூசை நடத்த ஒரு பண்டாரத்தை நியமித்தனர்
மூலவர் லயன் சித்தி விநாயகர்  


1920களின் தொடக்க காலத்தில் மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் தேவைப்பட்டதால் அரசாங்கம் இக்கோயில் நிலத்தை எடுத்துக்கொண்டு ஒரு சிறு தொகை கொடுத்தது.இந்த தொகை கொண்டு  நகரத்தார்கள் இப்போதைய இடத்தில் நிலத்தை வாங்கிக் கோயிலைப் பெரும்பொருட் செலவில் கட்டி முடித்தனர்.

வாங்கிய இடத்தில கோவில் கட்டத் தொடங்கியதும் மருத்துவ மனை நிலத்தில் இருந்த கோவிலில் உள்ள விநாயகரின் திருவுருவம்  சற்று  சிதைந்தும் காணப்பட்டது. குறையுள்ள சிலையைக் கருவறையில் வைப்பது ஆகமத்திற்கு ஏற்புடையதல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே முறையாகக் கருங்கல்லில் செய்த விநாயகர் சிலையை இந்தியாவிலிருந்து கொண்டு வர அவர்கள் ஏற்பாடு செய்தனர். இருப்பினும் குரோதன ஆண்டு  வைகாசித் திங்கள் 19ஆம் நாள் (1-6-1925)இல் நடைபெற்ற திருக்குட நீராட்டுக்கு முன்னர்ஆகமத்தில் கூறியதைப் போலப் பழைய சிலையைக் கடலில் இடக்கூடாது எனச் சிலர் கருத்துரைத்தனர்.  அவ்வாறு செய்தால் சன்னியாசிக்குக் கொடுத்த வாக்கை மீறுவதாக அமையும் என அவர்கள் கருதினர்.

புதிய சிலையை மூலவராகப் பிரதிஷ்டை செய்யும் அதே வேளையில்அதற்கு முன்னால் கர்ப்பகிரகத்தில் பழைய சிலையை வைத்து வழிபடுவது என ஒரு சமரச முடிவு காணப்பட்டது. அதுகமட்டுமல்லகோவிலின் பழைய இடத்தில் இருந்த நாகமும் ``ராம நாமமும்`` கருவறைக்குள்ளேயே வைக்கப்பட்டன. முருகப்பெருமானைக் குறிக்கும் வகையில் ஒரு வேலும் அதனுடன் வைக்கப்பட்டது. சிப்பாய் லைன்சில் கோவில் அமைந்திருந்ததால் அதனை லைன் சித்தி விநாயகர் என்று அழைத்து வரலாயினர்.
உற்சவ மூர்த்தி வெள்ளி முஷிக வாகனத்தில் 

1. விநாயகர் கிட்டங்கியில் இருந்து இங்கு வந்தவர் .
2. உள்ள விநாயகர் பொன்னம்பல சுவாமிகளால்கொடுத்த விநாயகர் இந்த சிலை சற்று பின்னப்பட்டதால் இவர் நித்திய வெள்ளிக் கவசதாரி.
3. பெரிய மூர்த்தி மாற்றாக கோயில் கட்டியபோது 
1925ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மூர்த்தி .

வெள்ளி முகம் சார்த்தப்பட்டு கந்தனாகவே காட்சி தரும் வேல் 

நாகார் 
தைபூச நாளில் டாங்க் ரோடு தண்டபாணி கோயிலில்நின்று
 பூசையை ஏற்கும் வேல் இதுவே

ராம நாமம் 



1824ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூருக்கு வர்த்தகம் செய்ய வந்த நகரத்தார்கள் தங்கள் வட்டித் தொழிலை நகரத்தின் மத்தியாக விளங்கிய மார்க்கெட் ஸ்திரிட்டில் நடத்தி வந்தார்கள். `கிட்டங்கிகள்`` என்னும் அந்தத் தொழில் மனைகளில் வட்டித் தொழிலை நடத்திய செட்டியார்களில் சிலர் தாயகத்திலிருந்து கொண்டு வந்த சுவாமிகளின் சிறு சிலைகளை வைத்து வழிபட்டு வருவது வழக்கமாக இருந்துவந்தது.. அதற்கேற்ப மார்க்கெட் ஸ்திரிட் 38ஆம் எண் கிட்டங்கியில் விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு செய்யப்பட்டுவந்தது. மார்க்கெட் தெரு கிட்டங்கிகளை அரசாங்கம் பற்றுமானம் செய்தபோது (1979-80) இந்தச் சிலை தேங் ரோடு 15ஆம் எண் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த வீடும் தெண்டாயுதபாணி கோயில் திருப்பணிக்காக எடுக்கப்பட்டபோது  அந்தச் சிலையை லயன் சித்தி விநாயகர் கோயிலில் கொண்டுவந்து வைப்பதென நகரத்தார்களால் முடிவுசெய்யப்பட்டது. அதற்கேற்ப அச்சிலை மூன்றாவது பிள்ளையாராகக்  கருவறையில் 1980ஆம் ஆண்டில் வைக்கப்பட்டது. 

      சிறப்புமிகு விநாயகர்:


      இங்கு   விநாயகர் திருவுருவம் மூன்று ஒன்றன் பின் ஒன்றாக உள்ளது  முருகப்பெருமான் உருவாக  வேல் ஒன்றுநாகர் மற்றும் இராமர் நாமம் ஒன்று ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. மேலும் விநாயகர் திருமுன்னர் பெருச்சாளி உருவமும் பலிபீடமும் உள்ளன. அனுமன் கற்சிலை ஒன்று (சிறியது)  இராமநாமம் அருகில் உள்ளது.  
கும்பாபிஷேகம் பற்றிய தகவல்களை கூறும் கல்வெட்டு 

விநாயகர் திருவுருவம் மூன்றில் பெரியதாகவும் சுவற்றோரமாகவும் இருக்கும் கல் திருமேனி நகரத்தார்கள் இக்கோயில் எழுப்பிய காலத்தில் ஏற்படுத்திய ஒன்றாகும். அடுத்து இருக்கும் விநாயகர் உருவம் தான் பழைய கோயிலில் இருந்து வந்த உருவமாகும். இதனை அடுத்து இருக்கும் விநாயகர் உருவம்தான் மார்க்கெட் ஸ்திரிட்   38ஆம் எண் கிட்டங்கியில் இருந்து கொண்டு வந்து வைக்கப்பட்டதாகும். இப்போது இந்தக் கோயிலில்  வழிபடுவோர் மூன்று விநாயகப் பெருமானை ஒரே நேரத்தில் வழிபடும் பெரும் பேற்றினைப் பெறமுடியும். அறம்பொருள்,இன்பம் ஆகிய மூன்றினையும் சங்கத் தமிழ்  மூன்றினையும் (இயல்இசை,நாடகம்) தரும் வகையில்  மும்மூர்த்திகள் உருவில் இம்மூர்த்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

 நகரத்தார்கள் கடல் கடந்து சென்ற இடமெங்கும்  தண்டாயுதபாணி கோயிலை எழுப்பி வேல் வழிபாடு செய்து வந்தனர். வேல் என்பது வெற்றியின் அடையாளம். ஞானத்தின் அறிகுறி. ஆழ்ந்து அகன்று நுட்மாக விளங்கும் அறிவின் அடையாளச் சின்னம் முருகனின் வேல் .இங்கு செம்பு உலோகத்தில் முருகனின் வடிவான வேல் வைத்து பூசைகள் செய்யப்படுகின்றது .

மேலும் இந்த வேல் தான் தைப்பூசத்தில் வெள்ளி ரதத்தில் தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்று தைப்பூச நாளன்று ஆயிரக்கணக்கான பாற்குட நீராட்டுக்குரியதாக விளங்கும் சிறப்புடையதாகும்.  தைப்பூசத்திற்கு முதல் நாளிரவு வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் திருவுருவத்துடன் பிள்ளையார் கோயில் பண்டாரம் இந்த வேலைத் தாங்கி வரும் காட்சி ஓர் அற்புதக் காட்சியாகவே அமையும். இந்த வேலுக்குச் சிறப்பு நாட்களில் வெள்ளி முகத்துடன் கூடிய அலங்காரமும் செய்யப்பட்டு முருகனாகவே காட்சி அளிக்கும் மாட்சியும் போற்றத் தக்கதாகும்.

பிள்ளையாருக்கு அருகில் நாகர் திருவுருவம் வைப்பது தமிழகத்தில் மரத்தடிக் கோயில்களில் இருக்கும் ஒரு மரபாகும்.
இங்கு ஒரு இராமனின் திருநாமம் உள்ளது இதில் வெண்பகுதி இராமனின் திருவடிகளையும் சிவப்புப்பகுதி சீதையையும் குறிப்பதாக இங்கே உள்ள திருநாமத்தைக் கருதி வழிபடப்படுகிறது 

லயன் சித்தி விநாயகர்


கோயிலின் சிற்பச் சிறப்பு :

மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு இணங்க இந்த கோயில் சிறிது என்றாலும் அமைப்பும் வேலைப்பாடுகள் அதிகம் .கோயில் இராஜகோபுரம் இப்போது ஐந்துநிலை அடுக்குக் கொண்டதாகும்.  40 அடி உயரத்தில் பெரிய நுழைவாயிலுடன் உள்ளது. கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் விநாயகர் திருவுருவங்களும்மேற்குப் பகுதியில் விஷ்ணு தொடர்பான உருவங்களும்தெற்குப் பகுதியில் தெட்சிணாமூர்த்தி முதலிய சிவன் தொடர்பான திருவுருவங்களும் வடக்குப் பகுதியில் முருகன் தொடர்பான உருவங்களும் வண்ணம் தீட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரம் கிழக்கு முகம்  கும்பாபிஷேகதின் போது 

கோபுரத்தின் தெற்கு முகம் 


மேலும் கோயிலுள்ளே இருக்கும் 16 தூண்களில் 16 கணபதி திருவுருவங்கள் வண்ணக் கோலத்துடன் வைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி அமைப்பிலுள்ள கோயில் கட்டடத்தைத் தாங்கி நிற்கும்  இத்தூண்களிலுள்ள16 கணபதிகளும் வழிபடும் பக்தர்களுக்கு 16 பேறுகளையும் தருவர் எனக் கருதலாம்.  1. பாலகணபதி .2.தருண கணபதி 3. பக்தகணபதி 4. வீரகணபதி 5. சக்திகணபதி, 6.துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிஷ்ட கணபதி 9.விக்னகணபதி 10. க்ஷிப்ரகணபதி 11. ஹேரம்ப கணபதி 12. லக்ஷ்மிகணபதி 13. மஹாகணபதி 14. விஜய கணபதி 15.நிருத்த கணபதி 16. ஊர்த்துவ கணபதி என்பவை இந்த 16 கணபதி உருவங்கள் கோயிலைச்சுற்றுப் புறகாரம் வருவார் கண்களில்தென்படும் .




தினசரி பூசை :

இங்கு சித்தி விநாயகருக்கு நான்கு கால பூசைகள் நிகழ்த்தப்படுகிறது .காலையில் 7.30 மணிக்குக் காலசந்தி பூசையும்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூசையும்,மாலை 5.30 மணிக்கு சாயரக்ஷை பூசையும் நடைபெறுகிறது இந்த காலங்களுக்கு முன்பு அபிசேகம் அலங்காரம் உண்டு . இரவு 8.30 மணிக்குஅர்த்தசாம பூசையோடு  நடை சாத்தப்படும்.
இங்கு பூசை வைபவர்கள் பண்டாரர்களே இது தவிர சகஸ்ரநாம அருச்சனைகணபதிஹோமம் முதலியவற்றைச் செய்ய இரண்டு சிவாச்சாரியார்களும் உள்ளனர் . வெள்ளிகிழமை , சதுர்த்தி , பௌர்ணமி தமிழ் மாதப்பிறப்பு , வருடப்பிறப்பு போன்ற தினங்களில் விநாயகருக்கு சந்தனகாப்பு , வெள்ளி அங்கி சாத்தப்பட்டு . சிறப்பு பூசைகள் நிகழ்கின்றது இந்த கோயிலுக்கு என்று இரண்டு நாதஸ்வரக்காரர்கள் உள்ளனர் . 

தங்க கவசத்தில் சித்தி விநாயகர் 



விழாச் சிறப்பு 
      ஆவணி மாதத்தில் வரும் விநாயக சதுர்த்தியே இந்தக் கோயிலில் பெருவிழாவாக உள்ளது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உற்சவ மூர்த்தி என ஒன்று இங்கு இல்லாததால் மூல மூர்த்திக்கே எல்லாச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படும். அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி அன்று நாள் முழுதும் சிறப்புப் பூசைகள் இடம்பெறும். வருடப்பிறப்புதீபாவளிபொங்கல்சிங்கப்பூர் தேசியநாள் முதலிய நாட்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு.  மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி பூசை நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி உண்டு.
தைப்பூசத்தின் போது தைப்பூசத்திற்கு முதல்நாள் தேங்ரோடு கோயிலில் இருந்து ரதத்தில் முருகப்பெருமான் காலையில் புறப்பட்டு இங்கு வந்து சேர்வார். மாலை வரை இங்கிருந்து வழிபாடுகள் நடத்தப்பட்ட பின்னர் இந்தக் கோயிலில் உள்ள வேலை இந்தக் கோயில் பண்டாரம் தாங்கி எடுத்துவர இரதத்தில் தேங்ரோடு கோயிலுக்கு நகரத்தார் காவடிகள்பக்தர்கள் புடைசூழ  நகர் வலமாக வந்து சேர்வார். நகரத்தார்கள் காவடிகள் கட்டி இங்கே வைத்துக் காவடிப் பூசை செய்து இரதத்துடன் காவடி எடுத்துச் செல்வார்கள். இது இந்தக் கோயிலில் நடைபெறும் ஒரு முக்கியமான விழா நிகழ்ச்சியாகும்
.


நகரத்தார் போற்றும் சிறப்பு


நகரத்தார்கள் பொதுவாக விநாயகரை வணங்காமல் எந்த நற்காரியமும் செய்யமாட்டார்கள். பிள்ளையார் சுழி போடாமல் எதனையும் எழுத மாட்டார்கள்.பிள்ளையார்பட்டி என்னும் கோயில் பிரிவு என ஒன்றே நகரத்தார் கோயில் பிரிவுகளில் உள்ளது. சிங்கப்பூரிலுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள் லயன் சித்தி விநாயகரிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பது அவர்களின் கணக்குப் புத்தகங்களில் முதல் வரியைப் பார்த்தாலே தெரியும். லயன்சித்தி விநாயகர் வரவு என்று தான் கணக்கு ஆரம்பமாகும். புதிய தொழில்கள் தொடங்கும் போதும்சிறப்பு நாட்களில் கணக்கு எழுதும் போதும் இறைவன் பெயரால் கணக்கில் வரவு வைப்பது செட்டியார்களின் தொன்று தொட்டு வரும் மரபாகும். சிங்கப்பூரிலுள்ள நகரத்தார்கள் லயன் சித்தி விநாயகர் பெயரால் வரவு வைத்த பிறகுதான் அவரவர் வழிபடும் தெய்வங்களின் பெயரால் வரவு வைப்பார்கள்.
மேலும் வெளிநாட்டுக்குப் போகும் போதும்திரும்ப வரும்போதும் முதலில் லயன் சித்தி விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற பணிகளை மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். சிங்கப்பூர் நகரத்தார் மன்றம் தொடங்கிய! பின்னர் (1980) சில ஆண்டுகள் நகரத்தார்களுக்கே உரிய பிள்ளையார் நோன்பு விழா இக்கோயிலில் தான் நடைபெற்று வந்தது. மேலும் சில ஆண்டுகள் வார வழிபாடும் ஞாயிறு தோறும் நடைபெற்றது.
தெண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் எந்தச் சிறப்பு நிகழ்ச்சியும்  முதலில் லயன் சித்தி விநாயகர் கோயில் வழிபாட்டிற்குப் பின்னரே நடக்கும்.  வருடப்பிறப்புதிருக்கார்த்திகைபொங்கல்தீபாவளி முதலிய நாட்களில் முதல்வழிபாடு லயன் சித்தி விநாயகருக்குத் தான்.


சிறப்பு பிரார்த்தனை:

இகோயிலில் வேலைக்குச் செல்லும் அன்பர்கள் நாள்தோறும் அல்லது திங்கட்கிழமை தோறும்இக்கோயிலில் வந்து வழிபாடு செய்கின்றனர். வாரந்தோறும் வருவதை வழக்கமாகக் கொண்டோர் பலர் உள்ளனர். பக்தர்கள் பலர் 108 சுற்று(புறகாரம்) வழிபாடியற்றி வேண்டும் வரங்களைப் பெற்றுள்ளனர். இவ்வாறே 16, 51, 108 என்று சிதறுகாய் உடைப்போரும்  பலர் உள்ளனர். மாதந்தோறும் கூட்டாகச் சேர்ந்து கணபதி ஹோமம் செய்தலும்அன்னதானம் வழங்கலும் சந்தனக்காப்பு வழிபாடு செய்தலும் வரவர அதிகமாகவே நடைபெற்று வருகின்றன. அன்பர்கள் பலர் இவ்விநாயகப் பெருமான்அருளால் வழக்குகளில் வெற்றிபெற்றது பற்றியும் வணிகம்தொழில்வேலை ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டது பற்றியும் குடும்ப வாழ்வு வளம் பல உடையதாய் விளங்கியது பற்றியும் சொல்லுகின்றனர் .சீனர்கள் பலர் வந்து வழிபாடு செய்து பலன் பெற்றும் வருகின்றனர்  வியாழன்வெள்ளி,ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் காலை மாலை இருவேளையும் மிகுதியாக இருக்கும்.


கோயிலின் தோற்றம் :

ஆலயத் தோற்றம் 

ஆலயத்தின் முழு தோற்றம் 

ஆலயத்தின் உட்புற தோற்றம் மற்றும் வேலைப்பாடுகள் 

லயன் சித்தி விநாயகர் சந்நிதி 

சித்தி விநாயகர் கருவறை கோபுரம் 

ஆலய  வெளிப்புற தோற்றம் 
ஆலய கோபுரம் அருகில் உள்ள கோயில் விழா மண்டபத்தின் மேல் இருந்து எடுத்த காட்சி 


கோயிலின் முக்கியத்துவம் :

சௌத்பிரிட்ஜ் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோயில்தான் சிங்கப்பூரில் மிகப் பழமையான கோயில் இக்கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தீமிதித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது தீ மிதிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிக்கும் முதல் நாள் இரவு இந்தக் கோயிலில் வந்து விநாயகரை வழிபட்டு விரதம் நன்கு இடையூறின்றி நிறைவேறப் பிரார்த்திப்பார்கள்.  மேலும் தீ மிதியை ஒட்டி மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்படும் திரௌபதி அம்மன் வெள்ளி ரதம் முதலில் இந்த விநாயகர் கோயிலுக்கு வந்து சிறப்புச் செய்யப்படுவது சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிராங்கூன் ரோட்டிலுள்ள வடபத்திர காளியம்மன் கோயிலிலுள்ள இராமர் இராம நவமி அன்று இரதத்தில் இந்தக் கோயிலுக்கு வருவது சென்ற இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது










Thursday 28 August 2014

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

வந்துவிட்டார் நம் கவலைகள் சோகங்களை போக்க

ஒரு சிறிய கவிதை உயிர்மெய் வரிசையில் 


               அண்ட சராசரதிற்கு முழுமுதற் பொருளே 
               ஆற்றங்கரை ஓரத்திலும் இருப்போனே 
               இன்னல்களை போக்க வல்லவனே 
               ஈடு இணை இல்ல முதற்பொருளே 
               உலகிற்கு திருமுறைகளை தந்தவனே 
               ஊழ்வினை போக்க வல்லவனே 
               எலியையும் வாகனமாய் கொண்டோனே 
               ஏழைமை போக்கும் எளியோனே 
               ஐம்புலன்களையும் அடக்கி வாழ்த்திட அருள்போனே 
               ஒன்பது கோள்களையும் அடக்கி அல்பவனே
               ஓம் கார பிரணவத்தின் வடிவானவனே  
               ஒளவையை தும்பிக்கையால் கயிலையில் விட்டோனே 

                                                                              - ஆ.தெக்கூர் இராம

கவலைகள் போக்க கணபதி வந்துவிட்டான் 







விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 




Wednesday 27 August 2014

விநாயகர் சதுர்த்தி பிறந்த கதையும் விரத முறையும்


விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை  சதுர்த்தி திதியன்று இந்துக்களால் கொண்டாடப்படுகிறது .
விநாயகர் பார்வதிக்கும் சிவபெருமானுக்கும் முத்த மகனாக கொள்ளபடுகிறார்

காய் கனி அலங்காரம்
.

ஒருமுறை பார்வதி தேவி  நீராட செல்லும் போது தமக்கு ஒருஅழாகான பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டார் . அப்போது அவர் தாம் குளிக்க வைத்திருந்த மங்கலப்பொருட்களான சந்தனம் , மஞ்சள் , பன்னீர் போன்ற பொருட்களின் கலவையால் ஒரு அழகிய பாலகனின் உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தார் அதுவே பிள்ளையார் . (குறிப்பு : பிள்ளையாரை பார்வதி தம் உடலில் உள்ள அழுக்குகளை திரட்டு செய்யவில்லை ) பின் தனது மகனை காவலுக்கு வைத்து விட்டு நீராட சென்றார் .
 அந்த சமயத்தியில் சிவபெருமான் உள்ளே பிரவேசிக்க முற்படும்போது தம் தாயின் அணையை  ஏற்று அவரை விநாயகர் தடுக்கிறார் . அப்போது இருவருக்கும் கடும் போர் நடைபெறுகிறது .போரில் விநாயகர் தலையை சிவன் கொய்துவிடுகிறார் .
குளித்து விட்டு வெளியில் வந்த அம்மை இந்த காட்சியை கண்டு நடந்தவற்றை கூறி அழுகிறார் .உடனே நந்தி தேவரை அழைத்து வடக்கு நோக்கி செல்லச்செல்ல உன் வழியில் எந்த உயிரினம் தென்படுகிறதோ அவற்றின் தலையை கொய்து வரும்படி கட்டளையிடுகிறார் . அவ்வாரே நந்தியும் செல்லுகையில்  வழியில் ஒரு யானை தென்பட அதன் தலையை கொய்து வந்து சிவன் முன் வைக்க அவர் அந்த தலையை உடலுடன் இணைத்து உயிர் கொடுத்தார். அன்றில் இருந்து கஜானனர் என்று பெயர் பெற்றார் . பிள்ளையாருக்கு `கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என `நாரதபுராணத்தில்' தெரி விக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகிவிட்டது. 


அப்போது எல்லா தேவர்களும் விநாயகரின்   அழகு கண்டு வியந்தனர் .இதைப்பற்றி தேவலோகம் முழுவது பேசப்பட்டது அப்போது சந்திரன் தம்மைவிட  அந்த பாலகன் அழகா என்று காண கைலாயம் சென்றான் . அப்போது விநாயகர் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து அழகற்று போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” 

 எனவும் நீ மாதத்தில் சதுர்த்தசி முதல் அமாவசை வரை தேய்ந்தும் அமாவசை முதல் பௌர்ணமி வரை வளர்ந்தும் காணப்படுவாய் என்று சொன்னார்.  இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். 



விநாயகர் சதுர்த்தி விரதம் :

இந்த விரதம் மிகவும் எளிமையான விரதம் . மஞ்சள் , பசுஞ்சாணம் , மண் , மாவு இவைகளை கையால் பிடித்து சந்தனம் குங்குமம் இட்டு சிறிது புஸ்பம் சார்த்தி நமக்கும் தெறித்த கணபதி மந்திரத்தை சொல்லி வழிபடலாம் . 

சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விநாயகர் படத்திற்கோ , செப்பு அல்லது வெள்ளித் திருமேனி விநாயகருக்ககோ அல்லது மன்னால் செய்த கணபதிகோ  நம்மால் முயன்ற பூக்களையும் அருகம்புல் மாலை சார்த்தியும் எளிய நிவதேனம் செய்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றியோ அல்லது வீட்டில் விளகேற்றி மாலையில் சந்திரனை கண்டபின் விரதத்தை நிறைவு செய்யவேண்டும் . 

  வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.


Sunday 24 August 2014

பாடுவார் முத்தப்பச் செட்டியார் வரலாறு



காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்- வீடுகட்கு
அன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமி நீ
என்றைக்கும் நீங்கா திரு

இந்தப் பாடல் உலகின் பல பகுதிகளிலும் இப்போது வாழும் நகரத்தார்கள் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும்.
இதைப் பாடியவர் பாடுவார் முத்தப்பச்செட்டியார் என்பவர். அவருடைய பெயரும் பரிச்சயமானதுதான். னால் அவருடைய வரலாறு அதிகம் அறியப்படாததொன்று.


கீழைசிவல்பட்டி என்னும் ஊர் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைக்கருகில் இருக்கிறது. நாட்டுக்கோட்டை தனவணிகர்களின் தொண்ணூற்றாறு ஊர்களில் அதுவும் ஒன்று.
1760-ம் ஆண்டில் அந்த ஊரில் அந்தக் குடியில் பிறந்தவர். அவர் பிறந்து வாழ்ந்திருந்த காலம் தமிழகத்தின் மிகக் கொடுமையான காலம். அதுதான் உண்மையான இருண்டகாலம்.
பள்ளிப்படிப்பு மட்டுமே சில ஆண்டுகள் படித்தார்.
குன்றக்குடி முருகனின் தீவிர அடியாராக விளங்கினார்.
முருகனின் அருளால் அவருக்குக் கவிபாடும் ற்றலும் ஏற்பட்டது. அத்துடன் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது.
அதனால் அவருக்குப் 'பாடுவார் முத்தப்பச் செட்டியார்' என்ற பெயரும் ஏற்பட்டது.
அவருடைய இளமைக்காலத்தில் மிக வறுமை நிலையில் அவருடைய குடும்பம் இருந்தது.
சிறுவணிகம் புரிந்துவந்த முத்தப்பர் அதன் நிமித்தமாக ஒருமுறை அயலூர்ச் சந்தைக்குச்சென்றார். வியாபாரம் அன்று சரியாகவும் நடக்கவில்லை. பசி வேறு. முகமெல்லாம் வாடிப்போய், சோர்ந்து அமர்ந்திருந்தார்.
அப்போது அப்பாலிருந்த ஒரு வீட்டு வாசலிலிருந்து ஒரு நகரத்தார் இவரைப் பார்த்தார். சுணங்கிப்போய் அமர்ந்திருப்பதைக் கண்டவர், விரைவாக வந்து விசாரித்துவிட்டு, பொருள்களைப் பார்த்துக்கொள்ள இன்னொரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டு, முத்தப்பரை உடன் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னார்.
திருப்தியாக உண்டபின்னர் முத்தப்பர் அந்த வீட்டுக்காரரைப் பார்த்து,

"அன்போடு அறுசுவையோடு அன்னமளித்து தரவாய்
என்பசியைத் தீர்த்துவிட்ட தென்னினமே - பின்பிந்
நகரத்தார் தங்களிடம் நண்ணிக் குபேரன்
பகருகடன் கேட்கவரும் பார்"

அவருடைய வாக்குப் பலித்து, வெகுவிரைவில் நகரத்தார் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேறஆரம்பித்து, ஒரு காலகட்டத்தில் தென்கிழக்காசியாவின் அரச மரபினர் முதற்கொண்டு கடன்கேட்டு வாங்கும் அளவுக்கு வளர்ச்சியுற்றது.

நவநிதிக்கும் அதிபதியாகிய குபேரனே கடன்கேட்டு வருவான் என்று அவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தை முத்தப்பச் செட்டியார் வாழ்த்திப் பாடிய பாடல் பலித்துவிட்டது.
அவர் மிகவும் கோபக்காரரும்கூட.

ஒருமுறை செவ்வூர் என்னும் ஊருக்குச் சென்றார்.
அங்கு ஒரு வீட்டின் திண்ணையில் பசியுடன் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த அத்தனை பேரும் பார்த்துக்கொண்டே சென்றார்களேயொழிய யாரும் உணவு கொடுக்கவில்லை.
பசித்துக்களைத்துப்போன முத்தப்பர் அந்த வீட்டுத் திண்ணையில் இருந்தவாறே பாடினார் -

"எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்லமனம் செல்லாதே - அவ்வூரார்
பார்த்திருக்க உண்பார், பசித்தோர் முகம் பாரார்,
கோத்திரத்துக் கேற்ற குணம்"

இதைக் கேள்வியுற்ற செவ்வூர்க்காரர்கள் பயந்து பதறிப்போய் முத்தப்பச் செட்டியார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள்.
உடனேயே அவர் அதனை மாற்றிப் பாடினார்.

"எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லுமே - அவ்வூரார்
பார்த்திருக்க உண்ணார், பசித்தோர் முகம் பார்ப்பார்,
கோத்திரத்துக் கேற்ற குணம்"

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் சிவகங்கை வட்டாரத்தில் சிறிதும் அமைதியில்லாமல் பஞ்சமும் பட்டினியும் போரும் குழப்பமுமாக விளங்கியது.
1880-க்குப் பின்னர் மருதுபாண்டியர்கள் தலைமைத்துவத்தில் நாடு செழிப்பாக மாறியது. குன்றக்குடி கோயிலும் இன்னும் பல கோயில்களும் அவர்களால் செப்பனிடப்பட்டு உன்னத நிலைக்கு வந்தன. குன்றக்குடியில் மருது பாண்டியர்கள் வெட்டுவித்த மருதாபுரி என்னும் வற்றாத தெப்பக்குளம் அவர்களின் பெயரை விளங்க வைத்துக்கொண்டிருந்தது. மருதுபாண்டியர்களின் ஆஸ்தானத்தில் இருபத்தேழு புலவர்கள் இருந்தனர். இன்னும் பலரும் வந்து பாடிப் பரிசில் பெற்றுச்சென்றனர்.

குன்றக்குடி கோயிலைப் புதுப்பித்து விரிவாக்கிக் கும்பாபிஷேகம் செய்ததை முன்னிட்டு, அவர்களுடைய தலைமைப் புலவராக இருந்த சாந்துப் புலவர் ஒரே நாளில் 'மயூரகிரிக்கோவை' என்னும் நூலை குன்றக்குடி முருகன்பேரில் இயற்றி அரங்கேற்றம் செய்தார்.

முத்தப்பர் ஓராண்டு குன்றக்குடித் திருவிழாவுக்குச் சென்றிருந்தார்.
அப்போது கடுமையான கோடை காலம். பயங்கர வரட்சி. குளம் குட்டையெல்லாம் வற்றிப் போய்க் காய்ந்து பாளம் பாளமாகக் காட்சியளித்தன.
குன்றக்குடி ஊரார் முத்தப்பரிடம் வந்து மழை பெய்யுமாறு பாடச் சொல்லி கேட்டனர்.

"சுவாமி தெற்கு ரத வீதிக்கு வரட்டும். பாடுவோம்" என்றார்.
திருவண்ணாமலை ஆதீனத்தின் அருகில் தேர் நெருங்கியது.
அப்போது முத்தப்பர் பாடினார்,

"அள்ளிக் கொடுக்கும் புனல்வயற் சே
னாபதிஎன் ஐயன் குன்றை
வள்ளி மணவாளனுக்கு வெள்ளிமயில்
செய்துவைத்த மகிமை பாரீர்!
வெள்ளியறியாமல் மழைபெய்கிறதே
என்றமொழி மெய்தான் வெள்ளிப்
புள்ளிமயிலேறி முருகன் பவனி
வரக்கண்டு பொழிந்தவாறே!"

சிறிதுநேரத்தில் எங்கிருந்தோ மேகங்கள் வந்து கூடின. பெருமழை பெய்யாலானது. சுவாமியை மடத்தின் முன்னிருந்த கொட்டகையில் நிறுத்தி வைத்தார்கள். குளம்குட்டை, ஊருணியிலேல்லாம் நீர் நிறைந்து விட்டது.
ஊர் பெரியவர்கள் மழையை நிறுத்துமாறு வேண்டினர்.
முத்தப்பர் பாடினார்.

"வந்து மழை பொழியும் வானே, வெஞ்சூர் தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்
நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல, மாற்றிவிடு
கீர்த்திவரும் நாட்டென்மொழி கேள்!"

மழையும் நின்றது. பூமியும் குளிர்ச்சி பெற்று வளமுண்டாயிற்று.

'பாடுவார் முத்தப்பச் செட்டியார்' என்றே அவரை மக்கள் அழைத்தனர்.

அவரும் சேனாபதி அடிகளார் என்பவரும் கோவிலூர் ஆண்டவர் என்பவரும் பழனிக்கு ஒருமுறை சென்றனர்.
பழனியில் அப்போது வயிற்றுப்போக்கு நோய் பரவியிருந்தது.
சேனாபதி அடிகளையும் அது பீடித்துவிட்டது. கூட வந்திருந்த அடியார்கள்
எல்லாருமே துடித்துப்போய்விட்டனர். சேனாபதி அடிகளாரோ செயலற்றுப் படுக்கையில் இருந்தார்.
அப்போது பாடுவார் முத்தப்ப செட்டியார் திருக்குன்றக்குடி முருகன்பேரில் பத்துப் பாடல்கள் கொண்டதொரு தோத்திரமும் பழனி முருகனின்பெரில் இன்னொரு பத்துப் பாடல்கள் கொண்ட தோத்திரமும் பாடினார். அத்துடன் முருகனை வேண்டி சேனாபதி அடிகளாருக்குத் திருநீறு இட்டார்.
அத்துடன் சேனாபதி அடிகளார் உடனடியாக நோய் நீங்கி எழுந்தார்.

திருக்குன்றக்குடி தோத்திரத்தின் முதல் பாடல் இதோ.
இதில் முருகனின் மாமன், ராமனாக அவதரித்துப் புரிந்த விக்கிரம வீரச் செயல்களைக் குறிப்பிட்டு அவனுடைய மருமகனே என்று புகழ்கிறார்.
இதில் வரும் 'சிகண்டிமலை' திருக்குன்றக்குடியாகும். அதற்கு மயில்மலை, மயூரகிரி, சிகண்டிமலை என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
சிகண்டி என்பது மயிலையும் குறிக்கும்.

ஏரிலகு தாடகையை மாரீசனைக் கரனை
இனியதிரி சிரனைவிண்மீ(து)
இருந்திடு கவந்தனை விராதனை அயோமுகியை
எதிராத ஜெயவாலியைக்
கூரிலகு வச்சிர எயிற்றனை நிகும்பனைக்
கும்பனோடு அதிகாயனைக்
கும்பகர்ணனைவிகட ஜம்புமாலியைவிருது
கொண்ட இந்திரஜெயித்தைத்
தாரிலகுபுயன் இராவணனைக் கடிந்துகோ
தண்டமொரு கையிலேந்தும்
தசரத குமார ரகு ராகவன் எனஅவ
தரித்திடு முகுந்தன் மருகா!
சீரிலகு சங்கநிதி சேனா பதிக்குரு
சிகாமணிக்(கு) அருள் புரிகுவாய்
திரண்டமணி முகில்மேல் அடர்ந்தகொடு முடிசூழ்
சிகண்டிமலை முருகேசனே!

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் புரட்சி நடந்து 1801-இல் ஓய்ந்தது. அதுவரைக்கும் தமிழகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஜமீன்தார்கள், சிற்றரசர்கள், சுல்த்தான்கள், படைத்தலைவர்கள், பாளையக்காரர்கள், நவாபுகள், தீவட்டிக்கொள்ளைக்காரர்கள், கூலிப்பட்டாளத்தினர், முரடர்கள் முதலியோரின் கைகளில் மக்கள் சிக்கித் திணறிக்கொண்டிருந்தனர்.
முதன்முறையாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகம் முழுவதையும் தனக்குக்கீழ் கொண்டுவந்துவிட்டது.
முன்னூறு ஆண்டுகளாக விளங்கிய போர்களும் பூசல்களும் அறவே இல்லாமல் போய் எங்கும் நிம்மதியும் அமைதியும் ஏற்பட்டது. போலீஸ் போன்ற ஊர்க்காவற்காரர்களை பிரிட்டிஷ்காரர்கள்ஆங்காங்கு நிறுவினர். அவர்கள் ஊர்க்காவல் சாவடிகளில் இருந்தனர். ஒழுங்கான அஞ்சல் முறையும் வழக்கத்திற்கு வந்தது.
ஒருமுறை சந்தைக்குச் சென்றுவிட்டு இளயாற்றங்குடி என்னும் ஊருக்கு அருகில் முத்தப்பர் வந்துகொண்டிருந்தார். நகரத்தாரில் ஒன்பது கோயில் பிரிவுகள் உண்டு. அவற்றில் தலைமையானது இளையாற்றங்குடி பிரிவு. இரவில் அவர் பொருள்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, பலமாக சந்தடி கேட்டது. கள்ளர் கூட்டம் ஒன்று வந்து முத்தப்பரின் பொருள்களைப் பிடுங்கிக்கொண்டது.
அப்போது இன்னொரு சந்தடி கேட்டது. மூட்டைகளைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு கள்ளர் கூட்டம் ஓடிப்போய்விட்டது. ஆயுதம் ஏந்திய சிலர் அங்கு வந்தார்கள்.
முத்தப்பர் அவர்களிடம் "நீங்களெல்லாம் யார்?" என்று கேட்டார்.
அவர்கள் தங்களைப் ‘போலீஸ்’ என்று கூறிக்கொண்டனர்.
"உங்களுக்குச் சம்பளம் கொடுப்பவர் யார்?"
"இப்போது நம் நாட்டை ஆண்டுவரும் இங்கிலீஷ்காரர்கள்" என்று பதிலளித்தனர்.
மனமகிழ்ச்சியுற்ற முத்தப்பர் சொன்னார்-

நேமம் நகர சிவன்கோவில் அருகில் உள்ள பாடுவார் முத்தப்பர் சிலை




"இங்கிலீஷ்கொடி பறக்கவே இளையாற்றங்குடி சிறக்கவே!"

அதன்பின் கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு இங்கிலீஷ் கொடி பறக்குமளவுக்கும் இளையாற்றங்குடி செல்வம் மிகுந்த செழிப்பான நகரமாகவே விளங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராங்கியம் என்றொரு ஊர் இருக்கிறது. அது உண்மையிலேயே இரண்டு ஊர்கள் சேர்ந்தது. தமிழகத்தில் இந்த மாதிரியான இரட்டை ஊர்கள் இருக்கின்றன. மேலைச்சிவபுரி என்னும் ஊரும் வேந்தன்பட்டி என்னும் ஊரும் ஒட்டி விளங்குபவை. 
ராங்கியத்தின் இரட்டையாக விளங்குவது மிதிலைப்பட்டி என்னும் ஊர். இங்குதான் அழகிய திருச்சிற்றம்பலக்கவிராயர் என்னும் புலவர் பரம்பரை வாழ்ந்துவந்தது. அந்தப் புலவரின் வீட்டிலிருந்துதான் தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் பல சுவடிகளைக் கண்டடைந்தார்.

ராங்கியத்தில் ஒரு சிவன் கோயில். அங்கு மிகவும் அரிதாகிய கல்வெட்டுக்கள் காணப்படும். அந்த ஊரில் மிகவும் வரதையானவராகவும் பிரத்யட்ச தெய்வமாகவும் விளங்குபவர் 'ராங்கியம் கருப்பர்' என்று அழைக்கப் படும் கருப்பண்ணசாமி. முத்தப்பச் செட்டியாருக்கு ராங்கியம் கருப்பரின் மீது ஆழ்ந்த பக்தியும் ஈடுபாடும் அதிகம்.
ஒருநாள் இரவில் வெகு நேரமாகிவிட்டது. கும்மிருட்டு. முத்தப்பச்செட்டியார் கட்டாயம் வீடு திரும்பவேண்டும். இருட்டில் பாதை அறவே தெரியவில்லை.
அப்போது ராங்கியம் கருப்பர் அங்கு தோன்றி லாந்தர் விளக்குப் பிடித்துக்கொண்டு
வீட்டிற்குக் கூட்டிச் சென்று விட்டார்.
கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்கள் இந்த மாதிரியெல்லாம் தோன்றிச் செய்வதுண்டு.