Monday 4 August 2014

பிள்ளையார் நோன்பு / இளை எடுத்தல்

வழிவழியாக, வாழையடி வாழையாக முன்னோர் செய்த செயல்களைத் தொன்று தொட்டுச் செய்து வருவதை மரபு என்கிறோம். மரபுகளைப் பேணிக்காப்பதில் இந்தியர் அதிலும் குறிப்பாகத் தமிழர் தனியிடம் பெறுகின்றனர். தமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர்.


இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“. இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.

பிள்ளையார் நோன்பின் போது வழிபடுவதற்கு என உள்ளங்கைக்குள் அடங்கும் அளவிற்கு ஒரு வெள்ளியில் ஆனா பிள்ளையாரையோ அல்லது தங்கத்தினாலான பிள்ளையாரையோ பிறந்தவீட்டுச் சீராகக் கொடுக்கின்றனர். அந்தப் பிள்ளையாரின் பின்புறத்தில் தங்களது பெயர் முகவரியையும் (initials) பொறித்து வைத்திருக்கின்றனர்.

பெரிய கார்த்திகை என்றழைக்கப்படும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் மறுநாளிலிருந்து பிள்ளையார் நோன்பு விரதத்தை ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாள் முழுதும் விரதமிருந்து மாலைப் பொழுது சாய்ந்ததும் பிள்ளையாரை வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு நாள் வழிபாட்டின்போதும் புதுத்துண்டு அல்லது புதுவேட்டி யிலிருந்து ஒரு சிறிய நூல் இழையை எடுத்து வைக்கின்றனர். இதனை “இழையெடுத்தல்“ என்கின்றனர். இவ்வாறு 21 நாட்கள் இழையை எடுத்து வைத்து வழிபடுகின்றனர். இதனால் 21 சிறிய நூலிழைகள் சேர்ந்து விடுகின்றன. இந்த இழைகளை ஒன்றாக்கி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி பல இழைகளாக நறுக்கி வைத்துக் கொள்கின்றனர். கருவுற்ற பெண்ணிற்கு ஒன்று என்றும் அவளது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஒன்று என்றும் கணக்குப் போட்டுக் கொள்கின்றனர். கைம்பெண்களை மட்டும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளவதில்லை. எண்ணிக்கையை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ இழையை நறுக்குவது இல்லை.

21ஆவது நாள் முடியும் போது சதயநட்சத்திரமும் சஷ்டி திதியும் ஒன்றாக வரும் நாள் இரவு பிள்ளையாரை வழிபட்டு நோன்பினைப் பூர்த்தி செய்கின்றனர். 21 நாட்களும் வழிபடாவிட்டாலும் கடைசிநாள் அன்று நகரத்தார் அனைவரும் எங்கிருந்தாலும் தவறாது பிள்ளையாரை வழிபட்டு இழையெடுத்துக் கொள்கின்றனர். வெளிநாட்டில் உள்ளோரும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி இழையெடுத்துக் கொள்கின்றனர்.

வாக்கப்பட்டுச் (வாழ்க்கைப்படுதல்) சென்ற மகள் வீட்டிற்குப் பொங்கல் தீபாவளி முதலான பண்டிகைகளுக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் அனுப்புவர். அதுபோல இந்தப் பிள்ளையார் நோன்பிற்கும் பிறந்த வீட்டிலிருந்து இந்த பிள்ளையார் நோன்பினை மேற்கொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் வைத்துச் சீர் அனுப்புகின்றனர்.

குடும்பத்தலைவன் (கணவன்), குடும்பத் தலைவி (மனைவி) மற்றும் பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி வழிபாட்டிற்கான வேலைகளைச் செய்கின்றனர். பிள்ளையார் நோன்பு அன்று, மாலை நேரம் வீட்டினைக் கழுவித் துடைத்துச் சுத்தம் செய்து பூசையறையில் ஒரு பெரிய கோலம் போடுகின்றனர். அதன் பின்னர் பூசைக்குத் தேவையான கருப்பட்டி அப்பம், பொரி, அவல், எள்ளுப் பொரி முதலான 21வகை உணவுப் பொருட்களைப் பிள்ளையாருக்குப் படைக்க எடுத்து வைத்துக் கொள்கின்றனர். இதில் ‘எள்ளுப் பொரி‘ விசேடம்.

பொங்கலன்று சக்கரைப் பொங்கலும், தீபாவளியன்று எண்ணைப் பலகாரங்களும் சிறப்புடையன. பிள்ளையார் நோன்பில் கருப்பட்டியப்பம் சிறப்புடையது. கருப்படியைக் காய்ச்சிப் பாகு எடுத்து அதில் அரிசிமாவையும் சேர்த்து மாவுபிசைந்து அப்பம் சுட்டு வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு அப்பம் சுடுவதற்குச் எண்ணைய்ச் சட்டியில் மாவை ஊற்றுவதற்கு முன்பு சங்கு ஊதுகின்றனர். பொங்கல் விழாவின் போது, பால் பொங்கி வரும்போது சங்கு ஊதுவோம், பிள்ளையார் நோன்பின்போது சங்கு ஊதிய பின்னரே அப்பம் சுடுகின்றனர்.

வீட்டில் உள்ள பழமையான ஏடுகளை எடுத்து, அதில் சுற்றியிருக்கும் நூல்கயிற்றைப் பிரித்து, அந்த நூல்கயிற்றை பச்சரிசியை அறைத்து எடுத்த மாவில் முக்கி எடுக்கின்றனர். அந்த கயிற்றை (தும்பு) ஆளுக்கு ஒருபக்கமாகப் பிடித்துக் கொண்டு சுவற்றில் ஒட்டினார் போல் வைத்துக் கொண்டு, ஒரு கையினால் சுண்டி விடுகின்றனர். இவ்வாறாக பூசையறையில் உள்ள சுவற்றில் இரண்டு இடங்களில் வீடு போன்று மாக்கோலம் போடுகின்றனர். இதனைத் “தும்பு பிடித்தல்“ என்று குறிப்பிடுகின்றனர். தும்பு பிடித்தல் மூலமாகச் சுற்றில் வீடுபோன்றதொரு மாவுக்கோலம் போட்டுவிடுகின்றனர்.


ஆவரம்பூ, கண்ணுப்பிள்ளைப்பூ (கண்ணுப்பூளைப்பூ), நெற்கதிர் இவைகளைச் சேர்த்து ஒரு சிறிய ஆவாரங் குச்சியில் கட்டி இரண்டு பூச்செண்டு தயார் செய்து வைத்துக் கொள்கின்றனர். இந்த ஆவாரம்பூவில் மொத்தம் 21 உறுப்புகள் உள்ளன.அதைக் குறித்த பாடல் ஒன்று. “ஏற்ற இறக்கம் இல்லாதஒக்கப் பிறந்தவர் இருவர்உடன் பிறந்தவர் மூவர்செக்கச் சிவந்தவர் ஐவர்செவ்வாழைப்பழம் மூன்றுநமரி வாழைப்பழம் நான்குபச்சைப் பாம்புக்குட்டி ஒன்றுபடமெடுத்த பாம்புக்குட்டி மூன்று“ என்று மொத்தம் 21 உறுப்புகள் ஆவாரம்பூவில் உள்ளன.

குடும்பத்தின் மூத்த செட்டியார் தலைப்பாகை கட்டிக் கொண்டு கையில் ஆவாரம்பூச் செண்டைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வருகிறார். அவரைப் பின்தொடர்ந்து வீட்டில் உள்ள ஆண்களும் வீட்டிற்குள் வருகின்றனர். மூத்த செட்டியார் பூசையறைக்குள் வந்து பிள்ளையார் அருகில் போடப்பட்டிருக்கும் தடுக்கின் மீது அமர்ந்து கொள்கிறார். பிள்ளையார் கிழக்குப் பார்த்தபடி இருக்கிறார். பிள்ளையாரைப் (மேற்குப்) பார்த்தபடி, வயது மூப்பு அடிப்படையில் எல்லா ஆண்களும் வரிசையாக தடுக்கில் அமர்ந்து கொள்கின்றனர். பெண்கள் உட்கார்வது இல்லை. 



வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கு ஏற்றபடி கருப்பட்டிப் பாகையும் அரிசிமாவையும் பிசைந்து செய்த மாவினால் கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து வைக்கின்றனர். இந்தப் பிள்ளையார் பூசையைச் செய்யும் தலைவன் (பெண்கள் இதைச் செய்யக்கூடாது) இந்தக் கருப்பட்டிப் பிள்ளையாரின் மீது 21 நூல்இழைகள் கொண்ட திரியைப் போட்டு நெய் ஊற்றி நுனி வாழையிலையை விரித்து வைத்து அதன் நுனியில் வெள்ளி அகல் விளக்கு வைத்து மலர்ச்செண்டு சாற்றி, தீபம் ஏற்றி வைக்கின்றனர். பிள்ளையாருக்குப் பொரியினால் அபிஷேகம் செய்கின்றர். அபிஷேகம் செய்யும் போது சங்கு ஊதுகின்றனர். கருப்பட்டி அப்பம், பொரி, முதலான 21வகைப் பலகாரங்களை நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்கு வைத்துப் படைத்துத் தீபம் காட்டி வழிபடுகின்றனர்.

வழிபாட்டின் நிறைவாக, இந்த வழிபாட்டினை முன்னின்று செய்யும் குடும்பத் தலைவன், கூம்பு வடிவான பிள்ளையாரின் உச்சியில் தீபம் எறிந்து கொண்டிருக்கும் போது சோதியுடன் சுடரோடு பிள்ளையாரை எடுத்து அப்படியே தனது வாயினுள் போட்டுக் கொள்கிறார். அவர் ஒவ்வொரு பிள்ளையாராக எடுத்துக் கொடுக்க, வீட்டில் உள்ளோர் அனைவரும் வரிசையாக வந்து பிள்ளையாரைப் பெற்றுக் கொண்டு தீபத்துடன் தங்களது வாயில் போட்டுக் கொள்கின்றனர். நிறைவாக, பிள்ளையாருக்கு என ஏற்றிவைக்கப்பட்ட பிள்ளையாரையும் குடும்பத் தலைவன் எடுத்து தனது வாயில் போட்டுக் கொள்கிறார். வழிபாடு நிறைவடையும் போதும் சங்கு ஊதுகின்றனர். இந்த நிகழ்ச்சியை “இழையெடுத்தல்“ என்கின்றனர். இவ்வாறு இழை எடுக்கும் போது குடும்பத்தினர் விநாயகர் அகவல் படிக்கின்றனர்.



இவ்வாறாக இழையெடுத்தல் என்றழைக்கப்படும் இந்தப் பிள்ளையார் நோன்பு விழா இனிதே முடிவடைகிறது. நோன்பு முடிவடைந்தவுடன், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பட்சனங்களை உண்டு மகிழ்க்கின்றனர். 

பூம்புகாரில் தங்களது மூதாதையர்கள் செய்து வந்த வழிபாட்டை அப்படியே இன்றளவும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர். பிராமண சமூகத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூல் போட்டுக் கொள்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பது போல், நகரத்தார் சமூகத்தினர் இழையெடுத்தலைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

“வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்வெற்றி முகத்து விநாயகனைத் தொழ வேண்டிய புத்தி மிகுந்து வரும்வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத் துள்ளியோடும் தொடர்ந்த வினைகளேஅப்பம் முப்பழம் அமுதுசெய் தருளிய தொப்பை யப்பனைத் தொழவினை யறுமே“



No comments:

Post a Comment