Sunday, 24 August 2014

பாடுவார் முத்தப்பச் செட்டியார் வரலாறுகாடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்- வீடுகட்கு
அன்றைக்கு வந்திட்ட அம்மா இலக்குமி நீ
என்றைக்கும் நீங்கா திரு

இந்தப் பாடல் உலகின் பல பகுதிகளிலும் இப்போது வாழும் நகரத்தார்கள் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும்.
இதைப் பாடியவர் பாடுவார் முத்தப்பச்செட்டியார் என்பவர். அவருடைய பெயரும் பரிச்சயமானதுதான். னால் அவருடைய வரலாறு அதிகம் அறியப்படாததொன்று.


கீழைசிவல்பட்டி என்னும் ஊர் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லைக்கருகில் இருக்கிறது. நாட்டுக்கோட்டை தனவணிகர்களின் தொண்ணூற்றாறு ஊர்களில் அதுவும் ஒன்று.
1760-ம் ஆண்டில் அந்த ஊரில் அந்தக் குடியில் பிறந்தவர். அவர் பிறந்து வாழ்ந்திருந்த காலம் தமிழகத்தின் மிகக் கொடுமையான காலம். அதுதான் உண்மையான இருண்டகாலம்.
பள்ளிப்படிப்பு மட்டுமே சில ஆண்டுகள் படித்தார்.
குன்றக்குடி முருகனின் தீவிர அடியாராக விளங்கினார்.
முருகனின் அருளால் அவருக்குக் கவிபாடும் ற்றலும் ஏற்பட்டது. அத்துடன் சொல்பலிதமும் ஏற்பட்டது. பாடிய மாத்திரத்தில் ஏதும் நடந்துவிடும் அளவுக்கு அவருடைய சொல்லாற்றல் விளங்கியது.
அதனால் அவருக்குப் 'பாடுவார் முத்தப்பச் செட்டியார்' என்ற பெயரும் ஏற்பட்டது.
அவருடைய இளமைக்காலத்தில் மிக வறுமை நிலையில் அவருடைய குடும்பம் இருந்தது.
சிறுவணிகம் புரிந்துவந்த முத்தப்பர் அதன் நிமித்தமாக ஒருமுறை அயலூர்ச் சந்தைக்குச்சென்றார். வியாபாரம் அன்று சரியாகவும் நடக்கவில்லை. பசி வேறு. முகமெல்லாம் வாடிப்போய், சோர்ந்து அமர்ந்திருந்தார்.
அப்போது அப்பாலிருந்த ஒரு வீட்டு வாசலிலிருந்து ஒரு நகரத்தார் இவரைப் பார்த்தார். சுணங்கிப்போய் அமர்ந்திருப்பதைக் கண்டவர், விரைவாக வந்து விசாரித்துவிட்டு, பொருள்களைப் பார்த்துக்கொள்ள இன்னொரு ஆளை ஏற்பாடு செய்துவிட்டு, முத்தப்பரை உடன் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னார்.
திருப்தியாக உண்டபின்னர் முத்தப்பர் அந்த வீட்டுக்காரரைப் பார்த்து,

"அன்போடு அறுசுவையோடு அன்னமளித்து தரவாய்
என்பசியைத் தீர்த்துவிட்ட தென்னினமே - பின்பிந்
நகரத்தார் தங்களிடம் நண்ணிக் குபேரன்
பகருகடன் கேட்கவரும் பார்"

அவருடைய வாக்குப் பலித்து, வெகுவிரைவில் நகரத்தார் சமூகம் பொருளாதாரத்தில் முன்னேறஆரம்பித்து, ஒரு காலகட்டத்தில் தென்கிழக்காசியாவின் அரச மரபினர் முதற்கொண்டு கடன்கேட்டு வாங்கும் அளவுக்கு வளர்ச்சியுற்றது.

நவநிதிக்கும் அதிபதியாகிய குபேரனே கடன்கேட்டு வருவான் என்று அவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தை முத்தப்பச் செட்டியார் வாழ்த்திப் பாடிய பாடல் பலித்துவிட்டது.
அவர் மிகவும் கோபக்காரரும்கூட.

ஒருமுறை செவ்வூர் என்னும் ஊருக்குச் சென்றார்.
அங்கு ஒரு வீட்டின் திண்ணையில் பசியுடன் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த அத்தனை பேரும் பார்த்துக்கொண்டே சென்றார்களேயொழிய யாரும் உணவு கொடுக்கவில்லை.
பசித்துக்களைத்துப்போன முத்தப்பர் அந்த வீட்டுத் திண்ணையில் இருந்தவாறே பாடினார் -

"எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்லமனம் செல்லாதே - அவ்வூரார்
பார்த்திருக்க உண்பார், பசித்தோர் முகம் பாரார்,
கோத்திரத்துக் கேற்ற குணம்"

இதைக் கேள்வியுற்ற செவ்வூர்க்காரர்கள் பயந்து பதறிப்போய் முத்தப்பச் செட்டியார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள்.
உடனேயே அவர் அதனை மாற்றிப் பாடினார்.

"எவ்வூர்க்குப் போனாலும் எவ்வுலகம் சென்றாலும்
செவ்வூர்க்குச் செல்ல மனம் செல்லுமே - அவ்வூரார்
பார்த்திருக்க உண்ணார், பசித்தோர் முகம் பார்ப்பார்,
கோத்திரத்துக் கேற்ற குணம்"

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் சிவகங்கை வட்டாரத்தில் சிறிதும் அமைதியில்லாமல் பஞ்சமும் பட்டினியும் போரும் குழப்பமுமாக விளங்கியது.
1880-க்குப் பின்னர் மருதுபாண்டியர்கள் தலைமைத்துவத்தில் நாடு செழிப்பாக மாறியது. குன்றக்குடி கோயிலும் இன்னும் பல கோயில்களும் அவர்களால் செப்பனிடப்பட்டு உன்னத நிலைக்கு வந்தன. குன்றக்குடியில் மருது பாண்டியர்கள் வெட்டுவித்த மருதாபுரி என்னும் வற்றாத தெப்பக்குளம் அவர்களின் பெயரை விளங்க வைத்துக்கொண்டிருந்தது. மருதுபாண்டியர்களின் ஆஸ்தானத்தில் இருபத்தேழு புலவர்கள் இருந்தனர். இன்னும் பலரும் வந்து பாடிப் பரிசில் பெற்றுச்சென்றனர்.

குன்றக்குடி கோயிலைப் புதுப்பித்து விரிவாக்கிக் கும்பாபிஷேகம் செய்ததை முன்னிட்டு, அவர்களுடைய தலைமைப் புலவராக இருந்த சாந்துப் புலவர் ஒரே நாளில் 'மயூரகிரிக்கோவை' என்னும் நூலை குன்றக்குடி முருகன்பேரில் இயற்றி அரங்கேற்றம் செய்தார்.

முத்தப்பர் ஓராண்டு குன்றக்குடித் திருவிழாவுக்குச் சென்றிருந்தார்.
அப்போது கடுமையான கோடை காலம். பயங்கர வரட்சி. குளம் குட்டையெல்லாம் வற்றிப் போய்க் காய்ந்து பாளம் பாளமாகக் காட்சியளித்தன.
குன்றக்குடி ஊரார் முத்தப்பரிடம் வந்து மழை பெய்யுமாறு பாடச் சொல்லி கேட்டனர்.

"சுவாமி தெற்கு ரத வீதிக்கு வரட்டும். பாடுவோம்" என்றார்.
திருவண்ணாமலை ஆதீனத்தின் அருகில் தேர் நெருங்கியது.
அப்போது முத்தப்பர் பாடினார்,

"அள்ளிக் கொடுக்கும் புனல்வயற் சே
னாபதிஎன் ஐயன் குன்றை
வள்ளி மணவாளனுக்கு வெள்ளிமயில்
செய்துவைத்த மகிமை பாரீர்!
வெள்ளியறியாமல் மழைபெய்கிறதே
என்றமொழி மெய்தான் வெள்ளிப்
புள்ளிமயிலேறி முருகன் பவனி
வரக்கண்டு பொழிந்தவாறே!"

சிறிதுநேரத்தில் எங்கிருந்தோ மேகங்கள் வந்து கூடின. பெருமழை பெய்யாலானது. சுவாமியை மடத்தின் முன்னிருந்த கொட்டகையில் நிறுத்தி வைத்தார்கள். குளம்குட்டை, ஊருணியிலேல்லாம் நீர் நிறைந்து விட்டது.
ஊர் பெரியவர்கள் மழையை நிறுத்துமாறு வேண்டினர்.
முத்தப்பர் பாடினார்.

"வந்து மழை பொழியும் வானே, வெஞ்சூர் தடிந்த
கந்தர் திருவிழாக் காலத்தில் - தொந்தரையாய்
நீர்த்துளியை ஊற்றிவிடல் நேர்த்தியல, மாற்றிவிடு
கீர்த்திவரும் நாட்டென்மொழி கேள்!"

மழையும் நின்றது. பூமியும் குளிர்ச்சி பெற்று வளமுண்டாயிற்று.

'பாடுவார் முத்தப்பச் செட்டியார்' என்றே அவரை மக்கள் அழைத்தனர்.

அவரும் சேனாபதி அடிகளார் என்பவரும் கோவிலூர் ஆண்டவர் என்பவரும் பழனிக்கு ஒருமுறை சென்றனர்.
பழனியில் அப்போது வயிற்றுப்போக்கு நோய் பரவியிருந்தது.
சேனாபதி அடிகளையும் அது பீடித்துவிட்டது. கூட வந்திருந்த அடியார்கள்
எல்லாருமே துடித்துப்போய்விட்டனர். சேனாபதி அடிகளாரோ செயலற்றுப் படுக்கையில் இருந்தார்.
அப்போது பாடுவார் முத்தப்ப செட்டியார் திருக்குன்றக்குடி முருகன்பேரில் பத்துப் பாடல்கள் கொண்டதொரு தோத்திரமும் பழனி முருகனின்பெரில் இன்னொரு பத்துப் பாடல்கள் கொண்ட தோத்திரமும் பாடினார். அத்துடன் முருகனை வேண்டி சேனாபதி அடிகளாருக்குத் திருநீறு இட்டார்.
அத்துடன் சேனாபதி அடிகளார் உடனடியாக நோய் நீங்கி எழுந்தார்.

திருக்குன்றக்குடி தோத்திரத்தின் முதல் பாடல் இதோ.
இதில் முருகனின் மாமன், ராமனாக அவதரித்துப் புரிந்த விக்கிரம வீரச் செயல்களைக் குறிப்பிட்டு அவனுடைய மருமகனே என்று புகழ்கிறார்.
இதில் வரும் 'சிகண்டிமலை' திருக்குன்றக்குடியாகும். அதற்கு மயில்மலை, மயூரகிரி, சிகண்டிமலை என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
சிகண்டி என்பது மயிலையும் குறிக்கும்.

ஏரிலகு தாடகையை மாரீசனைக் கரனை
இனியதிரி சிரனைவிண்மீ(து)
இருந்திடு கவந்தனை விராதனை அயோமுகியை
எதிராத ஜெயவாலியைக்
கூரிலகு வச்சிர எயிற்றனை நிகும்பனைக்
கும்பனோடு அதிகாயனைக்
கும்பகர்ணனைவிகட ஜம்புமாலியைவிருது
கொண்ட இந்திரஜெயித்தைத்
தாரிலகுபுயன் இராவணனைக் கடிந்துகோ
தண்டமொரு கையிலேந்தும்
தசரத குமார ரகு ராகவன் எனஅவ
தரித்திடு முகுந்தன் மருகா!
சீரிலகு சங்கநிதி சேனா பதிக்குரு
சிகாமணிக்(கு) அருள் புரிகுவாய்
திரண்டமணி முகில்மேல் அடர்ந்தகொடு முடிசூழ்
சிகண்டிமலை முருகேசனே!

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் புரட்சி நடந்து 1801-இல் ஓய்ந்தது. அதுவரைக்கும் தமிழகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஜமீன்தார்கள், சிற்றரசர்கள், சுல்த்தான்கள், படைத்தலைவர்கள், பாளையக்காரர்கள், நவாபுகள், தீவட்டிக்கொள்ளைக்காரர்கள், கூலிப்பட்டாளத்தினர், முரடர்கள் முதலியோரின் கைகளில் மக்கள் சிக்கித் திணறிக்கொண்டிருந்தனர்.
முதன்முறையாக பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகம் முழுவதையும் தனக்குக்கீழ் கொண்டுவந்துவிட்டது.
முன்னூறு ஆண்டுகளாக விளங்கிய போர்களும் பூசல்களும் அறவே இல்லாமல் போய் எங்கும் நிம்மதியும் அமைதியும் ஏற்பட்டது. போலீஸ் போன்ற ஊர்க்காவற்காரர்களை பிரிட்டிஷ்காரர்கள்ஆங்காங்கு நிறுவினர். அவர்கள் ஊர்க்காவல் சாவடிகளில் இருந்தனர். ஒழுங்கான அஞ்சல் முறையும் வழக்கத்திற்கு வந்தது.
ஒருமுறை சந்தைக்குச் சென்றுவிட்டு இளயாற்றங்குடி என்னும் ஊருக்கு அருகில் முத்தப்பர் வந்துகொண்டிருந்தார். நகரத்தாரில் ஒன்பது கோயில் பிரிவுகள் உண்டு. அவற்றில் தலைமையானது இளையாற்றங்குடி பிரிவு. இரவில் அவர் பொருள்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, பலமாக சந்தடி கேட்டது. கள்ளர் கூட்டம் ஒன்று வந்து முத்தப்பரின் பொருள்களைப் பிடுங்கிக்கொண்டது.
அப்போது இன்னொரு சந்தடி கேட்டது. மூட்டைகளைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு கள்ளர் கூட்டம் ஓடிப்போய்விட்டது. ஆயுதம் ஏந்திய சிலர் அங்கு வந்தார்கள்.
முத்தப்பர் அவர்களிடம் "நீங்களெல்லாம் யார்?" என்று கேட்டார்.
அவர்கள் தங்களைப் ‘போலீஸ்’ என்று கூறிக்கொண்டனர்.
"உங்களுக்குச் சம்பளம் கொடுப்பவர் யார்?"
"இப்போது நம் நாட்டை ஆண்டுவரும் இங்கிலீஷ்காரர்கள்" என்று பதிலளித்தனர்.
மனமகிழ்ச்சியுற்ற முத்தப்பர் சொன்னார்-

நேமம் நகர சிவன்கோவில் அருகில் உள்ள பாடுவார் முத்தப்பர் சிலை
"இங்கிலீஷ்கொடி பறக்கவே இளையாற்றங்குடி சிறக்கவே!"

அதன்பின் கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு இங்கிலீஷ் கொடி பறக்குமளவுக்கும் இளையாற்றங்குடி செல்வம் மிகுந்த செழிப்பான நகரமாகவே விளங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராங்கியம் என்றொரு ஊர் இருக்கிறது. அது உண்மையிலேயே இரண்டு ஊர்கள் சேர்ந்தது. தமிழகத்தில் இந்த மாதிரியான இரட்டை ஊர்கள் இருக்கின்றன. மேலைச்சிவபுரி என்னும் ஊரும் வேந்தன்பட்டி என்னும் ஊரும் ஒட்டி விளங்குபவை. 
ராங்கியத்தின் இரட்டையாக விளங்குவது மிதிலைப்பட்டி என்னும் ஊர். இங்குதான் அழகிய திருச்சிற்றம்பலக்கவிராயர் என்னும் புலவர் பரம்பரை வாழ்ந்துவந்தது. அந்தப் புலவரின் வீட்டிலிருந்துதான் தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் பல சுவடிகளைக் கண்டடைந்தார்.

ராங்கியத்தில் ஒரு சிவன் கோயில். அங்கு மிகவும் அரிதாகிய கல்வெட்டுக்கள் காணப்படும். அந்த ஊரில் மிகவும் வரதையானவராகவும் பிரத்யட்ச தெய்வமாகவும் விளங்குபவர் 'ராங்கியம் கருப்பர்' என்று அழைக்கப் படும் கருப்பண்ணசாமி. முத்தப்பச் செட்டியாருக்கு ராங்கியம் கருப்பரின் மீது ஆழ்ந்த பக்தியும் ஈடுபாடும் அதிகம்.
ஒருநாள் இரவில் வெகு நேரமாகிவிட்டது. கும்மிருட்டு. முத்தப்பச்செட்டியார் கட்டாயம் வீடு திரும்பவேண்டும். இருட்டில் பாதை அறவே தெரியவில்லை.
அப்போது ராங்கியம் கருப்பர் அங்கு தோன்றி லாந்தர் விளக்குப் பிடித்துக்கொண்டு
வீட்டிற்குக் கூட்டிச் சென்று விட்டார்.
கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்கள் இந்த மாதிரியெல்லாம் தோன்றிச் செய்வதுண்டு.


3 comments:

  1. பாடுவார் முத்தப்பச் செட்டியார் வரலாற்றை
    பாங்குடனே கொடுத்தீர் நன்று.

    ReplyDelete
  2. நன்றி ஐயா.

    ReplyDelete