Monday, 4 August 2014

மருதவாணர் தாலாட்டு பாடல்


”முருகன் திருவடியை முன்வணங்கி அவனண்ணன்
பெருகு மதவேழப் பெரியமுகம் உடன்வணங்கி
உருகு தமிழாலே உறக்கம்வரும் வேளையிலே
மருதீசர் தாலாட்டாம் வணக்கமலர் தூவுகிறேன்

தூவுபவன் யாரென்று சொல்லுவதென் மரபாகும்
சேவுகனார் கல்லூரிச் சிங்கார வடிவேலன்
பூவனைய சோறாக்கிப் போடுகண்ட னூரான்யான்
யாவருக்கும் தலைவணங்கி ஆராரோப் பாடுகிறேன்

வட்டகைகள் தோறும் வந்திருக்கும் நாமெல்லாம்
செட்டிக் குலத்தார்கள், திருப்பணிக்கே பிறந்தவர்கள்
பட்டினத்தார் நம்முடைய பாட்டையா: அவரிட்ட
தொட்டிலிலே துரைமகனைத் தொடர்ந்தாட்ட வந்துள்ளேன்

கடலலையே தாலாட்டும்; காவிரியும் சீராட்டும்
உடனசையும் தென்னை மடல்விரித்து சோறூட்டும்
இடையிலென் பாட்டெதற்கா? இடைமருதூர்ப் பிள்ளையவன்
கடைவிழியாற் கேட்கின்றான் கண்வளரப் பாடுகிறேன்

என்னூரார் முன்னோராம் இராமநாதப் பெரியாராம்
மின்வயிரப் பாட்டாம் மேலான தொட்டிலிட்டுக்
கண்மணியாம் மருதீசர் கண்வளரப் பார்த்திருந்தார்
அன்னாரின் அடிபற்றி அவரூரேன் பாடுகிறேன்

ஆறு குழந்தைகளை அடுத்தடுத்துப் பெற்றதனால்
மாறாமல் தாலாட்டை மனையில் பழகியதால்
நூறுமைல் தாண்டிவந்து நோன்பிருந்து பெற்றவனை
ஆராரோப் பாடிவிழி அயர்விக்க வந்துள்ளேன்.

பேச்சும் கவியாகப் பேசுகிற நம்குலத்தின்
ஆச்சிகளின் தாலாட்டை அடுத்திருந்து கேட்டதனால்
பூச்சூடி முடிக்காமல் புடவையிடை கட்டாமல்
பாச்சூடி மருதீசர் பரம்பரைநான் பாடுகிறேன்

ஆத்தா மீனாட்சி அடியேனைத் தொட்டிலிட்டுக்
கோத்தமலர்த் தாலாட்டின் குரலின்னும் கேட்பதனால்
நாத்தடமாம் நரம்பாலே நல்லிதய வீணையிலே
பூத்த இசைமீட்டிப் பொன்மகனைப் பாடுகிறேன்

சீரங்கம் ஆடித் திருப்பாற் கடலாடி
வாரங்கா எனவேண்ட வந்துதித்த அப்பச்சி
ஈரங் காணாமல் என்விழியை வளர்த்ததனால்
ஓரம் ஒதுங்காமல் உள்வளவில் பாடுகிறேன்

பண்ணெடுத்து நானிங்கே பாட முயல்வேனேல்
கண்ணெடுத்து மருதீசர் காலெடுத்து நடந்திடுவார்
பொன்னெடுத்துத் தந்திடுவார் போதுமெனக் கெஞ்சிடுவார்
என்னடுத்து மகன்வருவான் இசையோடு பாடிடுவான்

என்மைந்தன் பாடுவதை எல்லாரும் உறங்காமல்
கண்விழித்துக் கேளுங்கள் கைதட்டிப் போற்றுங்கள்
பொன்னி நதிபோலப் பொங்கு கடல்போலப்
பொன்கொழித்தே எல்லோரும் புகழ்கொழித்து வாழியரோ!”

(கவிஞரின் குமாரர் திரு.அர.சி.பழநியப்பன் அவர்கள் தன்
தந்தையார் அவர்கள் இயற்றிய பாடலை அந்த பட்டினத்தார்
திருவிழாவில் இசைப்படப் பாடினார். அதைத்தான்
கவிஞர் சென்ற நான்கு வரிகளில் குறிபிட்டுள்ளார்)

மருதவாணர் ( சிவன் )

பட்டினத்தார்  

No comments:

Post a Comment