பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.
- மகா கவி பாரதியார்
1950ல் தமிழ் நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய ஸ்தாபனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப் பயிற்சியாகும்.
No comments:
Post a Comment