Saturday 9 August 2014

வாழ்வாங்கு வாழ்ந்த குலம் நம் செட்டிகுலம் .



சிந்துவெளி புகழ்காத்து
சீர்காத்து திறம்காத்து
தென்னாடு வந்தகுலமே

திருவுடைய சோழனவன்
செம்மாண் புகார்நகரில்
திருக்கோவில் கொண்டகுலமே

வந்தவழி மறவாது
வாய்மைநெறி தவறாது
வாழ்வாங்கு வாழ்ந்தகுலமே

வாணிபமும் மதநெறியும்
வளர்ந்தோங்கி நாள்தோறும்
வளமாக நின்றகுலமே

எந்தமிழர் நாடெங்கும்
இறைபணியே பெரிதென்று
எந்நாளும் செய்தகுலமே

என்னுடைய குலமென்பேன்
எல்லாமும் நீயறிவாய்
ஏற்றுக்கொள் தமிழர்நிலமே

காவிரியின் பெருமாட்டி
கவின்மதுரை நகர்தன்னைக்
கனல்சூழ வைத்தகதையும்

கண்ணகி என்றால் இந்த
மண்ணே அடிபணிய
கற்போடு வாழ்ந்தநிலையும்

நாவசையும் போதெல்லாம்
நாடசையும்படி நின்ற
நல்வளையா பதியின்கதையும்

நாடியவர்ப் பணியாது
மணிமேகலை என்ற
நன்மங்கை வாழ்ந்தகதையும்

காவியங்கள் ஐந்தினினும்
மூன்றினிலே தலைதூக்கிக்
காட்டுவதும் எங்கள்குலமே

கடுகளவுதான் சொன்னேன்
மலையளவு புகழுண்டு
காண்பாய்நீ தமிழர்நிலமே

கடலோடி மலைநாடும்
பிறநாடும் சென்றார்கள்
கப்பல் வராதபோதே

காற்றினிலே பாய்போட்டு
கடவுளையே துணைவைத்து
கலங்களெல்லாம் சென்றபோதே

நடமாடும் சிவமாக
திருநீறும் சந்தனமும்
நதிபோலப் பூசும்உடலே

‘நமசிவாயம்’ என்று
நாள்தோறும் சொல்லுமவர்
நயமான சிவந்தஇதழே

தடம்பார்த்து நடைபோடும்
தனிப்பண்பு மாறாத
தகைமிக்க தெங்கள்குலமே

தந்தகரம் அவராகப்
பெற்றவளும் நீதானே
சாட்சிசொல் தமிழர்நிலமே

ஆறாயிரம் பேர்கள்
கற்கின்ற கழகத்தை
அண்ணாமலை நாட்டினான்

அவனோடு போட்டியிட
அத்தனையையும் தான்தந்து
அழகப்பன் முடிசூட்டினான்

ஒராயிரம் தடவை
செட்டிமகன் நானென்று
உலகெங்கும் மார்தட்டினான்

உலகாளும் விஞ்ஞான
மருத்துவமும் கற்றவர்கள்
உண்டென்று பேர்காட்டினான்.

சேராத செல்வத்தைச்
சேர்த்தாலும் நல்லவழி
செலவாகும் எங்கள்குலமே

செந்திருவை சரஸ்வதியை
கேட்டேனும் உண்மைநிலை
தெரிந்துகொள் தமிழர்நிலமே

சாதிவெறி கொண்டேன்போல்
கவிதையிதை எழுதினேன்
தவறல்ல உண்மைசொன்னேன்

தர்மத்தைப் பாடுவது
சாதிவெறி யாகாது
தமிழுக்கே நன்மைஎன்பேன்

ஓதியொரு மொழிசொன்ன
ஒக்கூர்மா சாத்தியுமென்
உன்னதப் பாட்டிஆவாள்

உயர்ந்தசீத் தலைச்சாத்தன்
ஒருவகையில் வணிகனென்
உத்தமப் பாட்டனாவான்

ஆதிமுதல் தமிழிலே
அவர்வந்த வழியிலே
அடியேனைப் பெற்றகுலமே

அளவிலே சிறிதேனும்
செயலிலே பெரிதாக
அறிவாய்நீ தமிழர்நிலமே ...

கவியரசர் கண்ணதாசன் ...




ஒவ்வொருவருக்கும், தாங்கள் பிறந்த மண்ணின் மேல் ஒரு தீராத காதல் இருக்கும். சாதாரண மனிதனுக்கே அது இருக்கும் எனும்போது
கவியரசர் கண்ணதாசனுக்கு இருக்காதா தான் பிறந்த செட்டிநாடு மண்ணைப் பற்றி அவர் பாடிய பாடல்..

1 comment: