Wednesday, 6 August 2014

நம்ம அய்யா ...



கிட்டங்கி பெட்டியடிகளில் “கை” பழகுவதற்காக அப்பச்சியுடன் வந்தீர்கள்.
உடையிலே எளிமை
மனதினில் வலிமை
உள்ளத்தில் நேர்மை
எனக்கு மட்டுமல்ல – அனேகமாக இங்குள்ளவர்கள் அனைவருக்கும்
இப்படித்தான் தெரியும் அய்யாவை.

ஏட்டுக்கல்வியை அதிகம் படிக்கவில்லை நீங்கள்,
வாழ்க்கைக்கல்வியை கசடற கற்று உயர்ந்தீர்கள்.



காலேஅரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால்
காசுக்கு எத்தனை வாழைக்காய்? என்ற கேள்விக்கு
கண்களை மூடிக்கொண்டு மனக்கணக்கு செய்து விடை சொல்வீர்கள்.
எங்களுக்கு இரண்டு ஆச்சரியம்...!

முதலாவது ஆச்சரியம்:
குறைந்த பட்சம் ஒரு மடி கணினி இல்லாமல் எங்களால் இந்த கணக்கைப் போட முடியாது...!

இரண்டாவது ஆச்சரியம்:
ஒரு காசுக்கே இத்தனை வாழைக்காய் என்றால்
ஒரு ரூபாய்க்கு வாழக்காய் வாங்கினால் ஊருக்கே சமைக்கலாமோ..?
“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற சொல்லுக்கேற்ப
சிங்கப்பூர், மலேயா, பர்மா, இந்தோனேசியா, இலங்கை என்று திக்கட்டும்
சென்று திரவியம் தேடினீர்.
சென்ற தேசங்களுக்கெல்லாம் நீங்கள் கட்டிய மனைவியைக் கொண்டு செல்லவில்லை.
செட்டி முருகனைத்தான் கொண்டு சென்றீர்.

வட்டித்தொழில் கட்டு கட்டாய் பணம் நிரம்ப
செட்டி முருகன் உங்களுக்குத்துணை நின்றான்.

வாய்ப்புகள் அதிகமாக உள்ளூரில் இல்லையென்பதால்
வாய்க்கரிசி போடப்பட்டு கப்பலிலே வெளிநாடு சென்றீர்கள்.
வாய்க்கரிசி என்பது இறந்தவர்களுக்கு போடுவது
ஒரு வாரம் ஆபத்தான கப்பல் பயணம். அக்கரை சென்றால்தான் உயிர் மீண்டும் உங்கள் கையில்.

கப்பலேறுகையில் முதலில் கடல் முகம் தெரியும்.
கண்களில் நீரோடு நிற்க்கும் மனைவிமுகம் தெரியும் என்கின்ற வாழ்க்கைதான் உங்களுக்கு.

அடுத்ததாக அய்யாக்கள் கட்டிய வீடு

விருந்தினர்களை உபசரிக்க அலங்காரமாய் முகப்பு
ஏராளமான அறைகளுடன் வெளிச்சம் காற்று நிறைந்த வளவு
உணவு உண்பதற்க்கு இரண்டாம் கட்டு
பெண்கள் இளைப்பாரி மகிழ்வதற்க்கு மூன்றாம் கட்டு
சமையல் செய்வதற்க்கு நான்காம் கட்டு என
கட்டு கட்டாய் நீங்கள் பெருவாழ்க்கை வாழ்ந்தீர்கள்.

அடுக்கு மாடி கட்டிட்த்தில் எங்கள் வீட்டில்
நடந்தால் மேசையில் கால் பட்டு
உட்கார்ந்தால் சுவற்றில் கை பட்டு
படுத்தால் அலமாரியில் இடி பட்டு
இப்படியாக பட்டு பட்டு சிறிய வாழ்க்கை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வீதி முதல் அடுத்த வீதி வரை நீளும் ஏக்கரளவில் வீடு
திருமணம் செய்வதற்க்கூட மண்டபம் தேவையில்லை உங்களுக்கு
குழந்தைகள் பிறந்த நாளிற்க்கூட Void Deck கீழ்த்தளம் வேண்டும் எங்களுக்கு.

இளம் வயதிலேயே அப்பத்தாவின் கைபிடித்தீர்
வரிசையாய் பிள்ளைகளை சலிப்பின்றி பெற்று வந்தீர்
மூத்த மகளோடு மனைவிக்கும் ஒன்றாக பிரசவம் கண்டீர்
அப்போதெல்லாம் SA1, SA2 இல்லாத்தால் பிழைத்தீர்..!
SA1, SA2 – Semestral Assessment (Singapore)

அப்பத்தாவின் ஓர் கண்ணசைவில்
ஒராயிரம் அர்த்தம் கொள்வீர்
அவரைக் கலக்காமல் காரியங்கள் செய்யமாட்டீர்

ஊரெல்லாம் போற்ற உங்களுக்கு மணிவிழா
குழந்தைகள் கொண்டாடும் அற்புத மகிழ்வு விழா
அறுபதாம் அகவையில் மற்றுமோர் திருமண வைபவம் –
(அதே அப்பத்தாவோடு)
பேரன் பேத்திகள் பார்த்து மகிழ மீண்டுமோர் சந்தர்ப்பம்

பேரன் பேத்தி திருமணம் வரை சலிப்பின்றி நட்த்தி வந்தீர்
குடும்பத்தின் உயர்வுக்காக ஓய்வின்றி உழைத்து வந்தீர் ..

Alagu Sundaram

No comments:

Post a Comment