சாவன்னா கோனா வீடு என்றால் எங்கள் ஊரில் மிகவும் பிரசித்தம். அதாவது சாவிக்கொத்து சண்முகம் செட்டியார் என்பதின் சுருக்கம் அது.
செட்டிநாட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் அல்லது அங்கே உள்ள புள்ளிகளுக்கும் அடையாளப்பெயர் இருப்பது காலம் காலமாக உள்ள வழக்கம். சில வீடுகளுக்கு அவர்கள் திருப்பணி செய்த கோவிலை வைத்து அல்லது அக்கோவில் இருக்கும் ஊரை வைத்து அடையாளப் பெயர் நிலவும். உதாரணமாக திருச்சுளிக் கோவிலுக்குத் திருப்பணி செய்த வீட்டிற்குத் திருச்சுளியார் வீடு என்ற அடையாளப் பெயர். சில வீடுகளுக்கு அவர்களுக்கு நிலபுலன்கள் உள்ள கிராமத்தின் பெயரை வைத்து அடையாளப் பெயர் இருக்கும். துடுப்பூர் கிராமத்தில் நிலபுலன்கள் இருந்த வீட்டிற்கு துடுப்பூரார் வீடு என்று பெயர். கல்கத்தாவில் வணிகம் செய்த வீட்டுக்காரர்களுக்கு வங்காளத்தார் வீடு என்ற பெயர் நிலவும்.
ஒரே வீட்டில் மூன்று வீரப்பன்கள் இருந்தால் எப்படி அடையாளப் படுத்துவது? பெரிய வீரப்பன், நடு வீரப்பன், சின்ன வீரப்பன் என்று வேறு படுத்திச் சொல்வார்கள். ஆச்சிமார்கள் சிலருக்கும் அடையாளப் பெயர் நிலவும். சறுக்குப்படி சாலி ஆச்சி, சுருக்குப் பை சுந்தரி ஆச்சி என்ற பெயர்கள் நிலவும்.
ஆனால் சாவிக்கொத்து என்ற அடையாளப் பெயர் சற்று சற்று வித்தியாசமாகப் படவே, என் தந்தையாரிடம் வினவினேன். ஒரு நல்ல கதை கிடைத்தது.
சண்முகம் செட்டியார் வீட்டிற்கு முதலில் சூம்பியோ சூனாபானா என்ற பெயர்தான் இருந்ததாம். சண்முகம் செட்டியாரின் அய்யா பர்மாவில் கொண்டு விற்றுப் பெரும் பொருள் ஈட்டி வந்தவர். ஊரில் இரண்டு வீட்டு மனையில் மிகவும் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டையும் கட்டினாராம். அதனால் அவர் பெயரில் அது அறியப்பட்டதாம். அவருக்கு வம்சா வழியில் ஒரே மகன், ஒரே பேரன். பேரன்தான் நமது கதையின் நாயகர்.
காந்திஜியின் வெள்ளையனே வெளியேறு போராட்டம் சூடி பிடிக்கத் துவங்கிய 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம்தான் சண்முகம் செட்டியார் பிறந்தார்.
ஆடிமாதம் ஆண்பிள்ளை பிறந்தால் ஆட்டி வத்துவிடும் என்று சொல்வார்களாம். அது உண்மையா அல்லது பொய்யா என்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் சண்முகம் செட்டியார் விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. அது சமயம் இரண்டாம் உலகப்போர் வேறு நடந்து கொண்டிருந்தது. சண்முகம் செட்டியாரின் அப்பச்சிக்கு அப்போது முப்பது வயது. பர்மாவில் அனைத்தையும் போட்டது போட்டபடி உயிர் பிழைத்தால் போதுமென்று வந்தவருக்கு அடி மேல் அடி!
யுத்தம் முடிந்து பர்மாவில் அரசு மாறியதில், சொத்துக்கள் அனைத்தும் பறிபோய்விட்டன. மொத்தம் நான்காயிரம் ஏக்கர்கள் விளை நிலம் மற்றும் அந்தக்கால மதிப்பில் ரூபாய் நான்கு லட்சம் அளவில் இருந்த கொடுக்கல், வாங்கல் கடை.
சம்பாதித்ததை எல்லாம் ஒரே கூடையில் போட்டு வைக்காதே என்பார்கள். போட்டு வைத்ததால் அனைத்தும் கூடையோடு பர்மாவில் பறிபோய்விட்டது. இங்கே மேலூரில் இருந்த ஐம்பது ஏக்கர் நிலம் மட்டுமே மிஞ்சியது.
அந்த ஐம்பது ஏக்கர் நிலத்தில் கிடைத்த வருமானம்தான் சண்முகம் செட்டியாரையும், அவருக்கு முன்னதாகப் பிறந்த மூன்று பெண்பிள்ளைகளையும், வளர்த்து ஆளாக்குவதற்கு அவருடைய அப்பச்சிக்குப் பெரிதும் உதவியதாம்.
1964ஆம் அண்டு சண்முகம் செட்டியார் அழகப்பாவில் படித்து முடித்து ஒரு கல்யாண டிகிரியோடு அதாவது இளங்கலை ஆங்கில இலக்கிய பட்டத்தோடு வெளியே வந்தபோது, உள்ளூரில் ஒரு பங்குத் தரகர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. மேலூர் சொத்தில் ஒன்றும் மிஞ்சாது, ஆச்சிகளின் கல்யாணச் செலவில் கரைந்து போகும் என்று தெரிந்த சண்முகம் செட்டியார், முனைப்புடன், பங்கு வணிகத்தில் இருந்த நெளிவு சுளிவுகளை அக்கறையுடன் கற்றுத் தேர்ந்து, பிறகு அதையே தன் தொழிலாக்கிக்கொண்டார்.
தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த சண்முகம் செட்டியாரின் வாழ்வில், அவருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த சம்பவம் அவருடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில்தான் அரங்கேறியதாம்.
சண்முகம் செட்டியாருக்கும், அவருடைய மைத்துனனுக்கும் காரைக்குடி சந்தைப்பேட்டை அருகே இருந்த ஒரு இடம் விஷயமாக வழக்கு நடந்து கொண்டிருந்த நேரம் அது. சண்முகம் செட்டியாரின் மூத்த மகன் சுப்பிரமணியன் என்ற மணி வீட்டிற்கு அடங்காமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தவன், தன் அம்மானுடன் கூட்டு சேர்ந்ததோடு மட்டும் அல்லாமல் அப்பச்சிக்குத் தெரியாமல் அப்பச்சி பீரோவில் இருந்த வழக்கு சம்பந்தமான பத்திரங்கள், காகிதங்கள் அனைத்தையும் தன் அம்மானிடம் கொண்டுபோய்க் கொடுத்து விட்டான். சும்மா அல்ல, அம்மானிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டான். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. அதை வைத்து வியாபாரம் செய்யலாம் என்ற ஆசையோடு சென்னைக்கும் ரயிலேறிப் போய்விட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து விஷயம் முழுமையாகத் தெரிந்தபோது, சண்முகம் செட்டியார் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. தன் மகனே இப்படிச் செய்வான் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. மகனின் நம்பிக்கைத் துரோகச் செயலால் அவர் மிகவும் நொடிந்துபோய் விட்டார். அதிலிருந்து மற்றவர்கள் மேலிருந்த நம்பிக்கை அவருக்கு முற்றிலும் போய்விட்டது.
எல்லாவற்றையும் பூட்டி வைக்கத் துவங்கியவர், முக்கியமான சாவிகளை எல்லாம் ஒரு கொத்தாக்கித் தன்னுடனேயே வைத்திருந்தார். வீட்டுச் சாவிகளை எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றை வைத்துப் பூட்டியிருப்பார். மற்றவர்களால் அத்தனை எளிதில் அவர் வைத்துள்ள சாவிகளை எடுப்பதோ அல்லது திறப்பதோ நடக்காத காரியம்.
உள்ளூர் கோவிலுக்குச் சென்றாலும் சரி, கடை கண்ணிகளுக்குச் சென்றாலும் சரி அல்லது பங்காளிகள், உறவினர்கள் வீட்டு விஷேசங்களுக்குச் சென்றாலும் சரி சாவியை மட்டும் பிரிய மாட்டார். இடுப்பிலேயே இருக்கும். உறங்கும்போது கூட பொது இடங்களில் உறங்க மாட்டார். முகப்பு அறையில் ஒன்றுக்கு மூன்றாகத் தாள் போட்டுவிட்டுத் தனியாகத்தான் உறங்குவார்.
இந்த இடுப்புச்சாவி உறவால்தான் அவருக்கு சாவன்னா கோனா என்ற அடையாளப் பெயரும் வந்ததாம். செட்டியாரின் முன்கதைச் சுருக்கம் இதுதான்.
ஆனால் அவருடைய பின்கதை இன்னும் விறுவிறுப்பானது. அதையும் என் தந்தையாரே சொன்னார்கள்.
தன்னுடைய நான்கு பெண் மக்களுக்கும், இரண்டாவது மகனுக்கும் நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தவர், தன் மூத்த மகனுடன் மட்டும் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டார். பங்காளிகளில் இரண்டு பெரியவர்கள் சேர்ந்து, அவனுக்கு மணம் செய்து வைத்தபோது, ஊராரின் வற்புறுத்தலுக்காக கலந்து கொண்டவர், இசை குடிமானத்தில் மட்டும் தன் கையெழுத்தைப் போட்டு பெற்ற கடனைத் தீர்த்துவைத்தாராம். மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்து பால்பழம் கொடுத்து ஆசீர்வாதம் செய்யும் நிகழ்வையும், காய்ச்சி ஊற்றும் நிகழ்வையும் தவிர்த்து விட்டாராம்.
கால ஓட்டம் அவருடைய எல்லாக் காயங்களுக்கும் மருந்து போட்டுக் குணப்படுத்தியது.
இந்த ஆண்டு மே மாதம் தனது 69ஆவது வயதில் சண்முகம் செட்டியார் காலமாகிவிட்டார். ஆனால் அதுகூட ஒரு விபத்தின் மூலம் அரங்கேறியது.
சண்முகம் செட்டியார் வீடு பேருந்துகள் செல்லும் பிரதான சாலையில் இருந்தது. குடிநீர்க் குழாய்களைப் பதிப்பதற்காக குடிநீர் வாரியத்துக்காரர்கள், மூன்றடி அகலம், ஆறடி ஆழத்திற்குப் பெரிய தொடர் பள்ளத்தை வெட்டிப் போட்டிருந்தார்கள். சண்முகம் செட்டியார் தன் வீட்டிலிருந்து அந்தப் பள்ளத்தைக் கடந்து செல்வதற்குப் பலகைகளைப் போட்டு வைத்திருந்தார். அவர்கள் வெட்டிப்போட்டு வாரக் கணக்காகிவிட்டது. பணி ஒப்பந்தக்காரர்கள் வேலையை முடித்துப் பள்ளத்தை இன்னும் மூடாமல் வைத்திருந்தார்கள்.
வீட்டில் விடுமுறைக்கு வந்திருந்த பேரன் பேத்திகளுக்கு, வீட்டிற்கு எதிரே பலகாரக்கடை வைத்திருக்கும் இசக்கி கடைக்குச் சென்று, பதினைந்து உருளைக்கிழங்கு போண்டாக்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பியவர், அந்தப் பள்ளத்தைக் கடக்கும்போது, பலகை புரண்டு, தடால் என்று குழிக்குள் தலைகுப்புற விழுந்து விட்டார்.
ஒரு கையில் பலகாரப் பொட்டலம், இன்னொரு கையில் சாவிக்கொத்து என்று இரண்டையும் விடாமல் பிடித்துக்கொண்டே குழிக்குள் விழுந்ததால், தலையில் பலமாக அடிபட்டு, விழுந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டார். அதாவது ஸ்பாட் அவுட்!
முதல் உதவிக்கு வந்த மருத்துவரும் அதைத்தான் சொன்னார்.”விழுந்து இறக்கக்கூடிய அளவிற்கு அது பெரிய பள்ளம் ஒன்றும் அல்ல. இவர் விழுகும்போது கைகளைத் தரையில் ஊன்றி இருந்தால், தலையில் அடிபட்டிருக்காது, மரணமும் ஏற்பட்டிருக்காது!”
எல்லாம் விதிக்கப்பட்டது. யார் என்ன செய்ய முடியும்?
“சாவிக்கொத்து சண்முகம் செட்டியார் கையில் சாவியைப் பிடித்துக் கொண்டே காலனோடு பயணமாகிவிட்டார்” என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்.
கதையை இத்துடன் முடித்திருந்தால், பத்திரிக்கையில் அல்லது பதிவில் எழுதும் அளவிற்கு அதில் மேன்மை இல்லாது போயிருக்கும்!
ஆனால் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உள்ளது.
செட்டியார் காலமான செய்தியைக் கேள்விப்பட்டு, அதுவரை வீட்டு வாசப்படிக்குள் கால் பதிக்காத மூத்த மகன் மணியும் உடனே புறப்பட்டு வந்து, தன்னைப் பெற்றவருக்கு கிரியைகள் அனைத்தையும் செய்தான்.
ஆறு பிள்ளைகளும் சேர்ந்து, அவருக்கு மற்ற காரியங்களையும் செய்து முடித்தனர். செட்டியார் ஊரிலேயே தன் காலம் முழுவதும் இருந்து அத்தனை வீட்டின் நல்லது கெட்டதுக்குச் சென்று வந்தவர் என்பதால் ஒட்டு மொத்த ஊராரும் விஷயத்தைக் கேள்விப்பட்டு, காரியம் நடந்த பத்து நாட்களுக்குள் அவர் வீட்டிற்கு வந்து கேதம் கேட்டுவிட்டுப் போனார்கள்.
பதினொன்றாம் நாள் அவர் பெட்டகத்தையும், பீரோவையும் பிரித்தபோதுதான், அவர் சம்பாத்தித்து சேர்த்துவைத்திருந்த செல்வத்தின் அளவு பிள்ளைகளுக்குத் தெரிந்தது. தெரிந்தது மட்டுமல்ல, பிரமிப்பையும் கொடுத்தது.
ஆனால் அது முக்கியமில்லை. அதைவிட முக்கியமானது பெட்டகத்தின் மேலாக இருந்த செட்டியாரின் பதிவு செய்யப்பெற்ற உயில்தான் பார்த்த அனைவரையும் கலக்கிவிட்டது.
அதில் செட்டியார் குறிப்பிட்டிருந்த முக்கியமான வாசகம் இதுதான்:
”என் மனம் பக்குவப்பட்டுவிட்டது. மூத்த மகன் மணி மீதிருந்த கோபம் இப்போது எனக்கு இல்லை. மன்னிப்பதுதான் உயர்ந்த குணம். அவனை நான் மன்னித்து விட்டேன். என் சொத்துக்கள், செல்வங்களில் இந்த பூர்வீக வீட்டை தவிர மற்ற அனைத்தையும் எட்டு சரிசம பங்காக வைத்து என்னுடைய பிள்ளைகளுக்கு ஆறு பங்கைக் கொடுத்துவிட வேண்டியது. அதாவது அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது. இந்தப் பூர்வீக வீடு என் மகன்கள் இருவருக்கு மட்டுமே உரியது. பிரித்த செல்வத்தில் இரண்டு பங்குகளில் ஒரு பங்கை உள்ளூர் நகரச் சிவன் கோவிலுக்கும், இன்னொரு பங்கைக் கல்விப் பணி செய்யும் வித்யா பரிபாலன அமைப்பாளர்களிடமும் கொடுத்துவிட வேண்டியது.”
செட்டிநாட்டில் வீட்டிற்கு வீடு அடையாளப் பெயர்கள் மாறலாம். ஆனால் தர்ம சிந்தனை மட்டும் மாறாமல் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுதான் செட்டி நாட்டின் சிறப்பு. காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு வரும் மரபு அது!
-சுப்பையாவீரப்பன் ...
No comments:
Post a Comment