Monday 11 August 2014

சாயாவனேஸ்வரர் கோயில்

சாயாவனம்

" சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
 முக்குளமும் ஆடி 
முத்திபெற்று வந்த கண்ணோ  "


என்ற நம் ஆச்சிகள் பாடி தாலாட்டி தூங்கவைத்த தாலாட்டு வரிகள் நாம் கேட்ட துண்டு . சங்கு முகம் என்று கூறுவது  காவேரி ஆறு கடலுடன் கலக்கும் முகத் துவாரத்தில் நீராடுதல் மிகவும் சிறப்பு என்பது இந்த தாலாட்டில் தெரியவருகிறது . 

இங்கு தீர்த்தமாடி  சாயாவனதில் உள்ள ஈஸ்வரனை வழிபட்ட பின் திருவெண்காட்டில் உள்ள  சூரிய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் , அக்னி தீர்த்தம்  இவைகளே  முக்குள தீர்த்தங்கள்  இவைகளில் தீர்த்தமாடி ஈசனை வழிபடுதல் மிகவும் சிறப்பு . இவ்வாறு தீர்த்தம் ஆடி இறைவனை வழிபட்டால் முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை . 

இங்குதான் பட்டினத்தார் பிறந்தார் . இந்த ஆலயத்து ஈசனையும் அம்மையையும் பட்டினதாராகிய திருவெண்காடாரும்அவரது மனைவி சிவகலை ஆச்சியும் இங்குதான் வழிபட்டனர்.  இந்த கோயில் பட்டினத்தார் வீடு ( நகர விடுதிக்கு ) சற்று முன்பு உள்ளது . இந்த கோயில் உள்ள இடத்தை சாயவனம் . திருச்சாய்காடு என்ற இடத்தில உள்ளது . 
ஆலய தோற்றம் 


தல வரலாறு

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.


கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார்.
ஆலயத்தின் முன்புற தோற்றம் 


தலப்பெருமை :

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் "யானையால் புக முடியாத கோயில்' என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.

63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து, முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு, சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம், ""நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை,'' என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், ""நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்'' என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.


ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், ""நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்'' என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி,""நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க'' எனக்கூறி மறைந்தார்.

மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.

வில்லேந்திய வேலவன்: 

இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.



பொதுத் தகவல் :


இக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது. கோயில் குளத்திற்கு தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன
சாயாவன நாதர் (அ) சாயாவனேஸ்வரர் 


குயலினும் இன்மொழி அம்மை 






1 comment:

  1. வணக்கம்

    அருமையான பதிவு
    தொடருங்கள்...வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete