Sunday, 10 August 2014

பால் பணியாரம் பேசுமா பேசும் அப்பச்சி எங்கள் செட்டிநாட்டில் கேளுங்கள் ...



செட்டிநாட்டு சீமையில, நகரத்தார் மத்தியில
நகர்வலந்தான் நடந்துச்சு, நல்லாதான் இருந்துச்சு
அதுநம்ம செட்டியாருக எடுத்துவரும் காவடிShow இல்லீங்க 
நம்ம ஆச்சிமார் செய்துவரும் பலகார show ங்க
வகைவகையா பலகாரங்க வரிசையில வந்தாக
பசியோடு இருப்பவுக பொறுமையோடு கேளுங்க
பலகாரம் பலவகையா பீத்திக்கிட்ட கதையுங்க
உங்கள்முன் நானதை பகரத்தான் வந்தேங்க
முறுக்கு தேங்குழல் அதிரசம் ஆடிக்கூழ்
சீடை சீப்பு சீடை மாவுருண்டை மணகோலம்
வடை வெள்ளைபணியாரம் கந்தரப்பம் கருப்பட்டி பணியாரம்
சீயம் சீனிப் பணியாரம் பால் கொழக்கட்டை பால் பணியாரம்
இன்னும் எவ்வளவோ வந்தாக எதைஎதையோ செஞ்சாக
தம்பெருமை சொன்னாக தம்பட்டம் அடிச்சாக
மத்ததெல்லாம் மறந்திருச்சு மனசவிட்டுப் போயிடுச்சு
பசுமறத்தாணிபோல பால் பணியாரம்தான் பதிஞ்சிறுச்சு
இனி பால் பணியரமாக நான்.
உருவத்தில் சிறியவன்நான் சுவையிலே பெரியவன்நான்
வடிவத்தில் உருண்டைநான் நிறத்திலே வெள்ளைதான்
தித்திக்கும் பலகாரம் நான் திகட்டாத பலகாரம் நான்
வயது வரம்பின்றி அனைவரையும் கவர்ந்தவன் நான்
பச்சரிசி உளுந்து சரிசமமா ஊறவைச்சு
கிரைண்டரோ மிக்ஸியோ பக்குவமா அறைச்சுவைச்சு
சின்னசின்னதா கிள்ளிப்போட்டு எண்ணையில பொறிச்சுவைச்சு
சூடான தண்ணியில் ஊறவைச்சு வடிகட்டி
பாலோடு, தேங்காய்ப்பால் கலக்கிவைச்ச Cocktailல
தட்டோடு தள்ளும்போது தள்ளாடி கவுந்திடுவேன்
போதையெல்லாம் தலைக்கேறி போதும்வரை ஊறிடுவேன்
ஊறித் தெளிகையிலே ஊதித்தான் வந்திடுவேன்
ஏலக்காய் சேர்க்கையில எட்டூரும் மணமணக்கும்
நம்மஆச்சி சமைக்கையில சீனச்சிக்கும் வாய் ஊறும்
வீட்டுக்கு விளக்கேற்றவரும் மகாலெட்சுமியை வரவேற்கும்
பெண் அழைப்பு வீடுகளில் பிரதான பலகாரம் நான்
மணநாளின் ராஜாவை மருமகளோடு அழைத்துவந்து
மங்களம் உண்டாக்கும் மகத்தான பலகாரம் நான்
நகரத்தார் திருமணத்தில் தித்திக்கும் பலகாரம்
எத்தனையோ இருந்தாலும் அதை எல்லாம்
பத்தோட பதினொன்னா இலையிலதான் வைப்பாக
என்னமட்டும் ஒய்யாரமா கப்பில்தான் தருவாக
சுருங்கச் சொன்னா
"Born with silver spoon familyயில
நான் served with Cup & Spoon"
macdonalds french fries, KFC Cheese fries
நாவினிக்கும் Nuggets பசியடைக்கும் burger
இந்தக்கால பிள்ளைகளின் Favourite Choice.
இதையெல்லாம் சாப்பிட்டா Guarantee இல்ல ஆயுசு
பால்குடி மறையாத மழலை ஆனாலும்
பல்லு போன பாட்டைய்யா ஆனாலும்
பல்லுக்கு ஏங்காம மல்லுக்கு நிக்காம
பதுசா சாப்பிடக்கூடிய பால்வடியும் பலகாரம்நான்




நவீன ஆச்சிகளுக்கு ஒரு Tips.
ஆயாவும் அப்பாத்தாவும் என்னை அடிக்கடிதான் செஞ்சாக
ஆத்தாவோ உங்களுக்கெல்லாம் அப்பப்ப தந்தாங்க
அய்யய்யோ நீங்கெல்லாம் எப்பயோதான் செய்ரீங்க
இப்படியே போச்சுதுன்னா வருங்கால சந்ததிங்க
என்ன மறந்தேதான் போயிடுங்க
காதோரம் ரகசியமா ஒன்னு மட்டும் சொல்ரேங்க
கடைபிடிச்சு கேட்டீங்கன்னா கட்டாயம் நடக்குமுங்க
சிரமத்தப் பார்க்காம செஞ்சுதான் பாருங்க - உங்க
செட்டியார்களின் changeதான் சிலநொடியில் தெரியுங்க
பால்பணியாரம் செஞ்சாச்சு, செட்டியார் வந்தாச்சு
சாப்பிட்டு முடிச்சாச்சு, அப்புறம் என்ன ஆகும்?
சுத்தி சுத்தி வருவாக சொன்னதெல்லம் கேட்பாக
ஆச்சிக உங்க வாழ்க்கையெல்லாம் ஜாலியாக
(ஓரக்) கண்ணால் உங்கள பார்ப்பாக கேட்டதெல்லாம் தருவாக
அய்யோ அவுக wallet எல்லாம் காலியாக
என்றெல்லாம் ஆச்சிமார்களுக்கு Tips கொடுத்து விடைபெற்றது பால்பணியாரம்.

- சிட்டாள் திருநாவிற்கரசு

No comments:

Post a Comment