Monday, 4 August 2014

சுப்பையன் வணக்கம்

அலைகடலுக்கப்பாலே மலைநாட்டில் அமைந்திருக்கும் 
அழகான தண்ணி மலையே! 
அலைபாயும் மனத்திடையே சிலநேரம் துதித்தாலும் 
அருள்வானே தண்ணி மலையே! 
விலைபோட முடியாத மலையளவு வளங்கொண்ட 
பினாங்கு நகர்த் தண்ணி மலையைத் 
தலையாட மனமாடத் தமிழ்பாடித் துதிப்போர்க்குத் 
தலையாய செல்வம் வருமே! 
கலம் ஏறிப் பினாங்குநகர் கண்டார் தமையெல்லாம் 
காப்பாற்றும் தண்ணி மலையே! 
நலம்தந்து நிலம்தந்து அருள் தந்து பொருள் தந்து 
பாலிப்பான் தண்ணி மலையே! 
மலைநாட்டில் அமர்ந்தவனை மனவீட்டில் கண்டவர்க்கு 
மயிலேறும் தண்ணி மலையான் 
கலையாத பெருவாழ்வும் நிலையான சுகவாழ்வும் 
கண்முன்னே கொண்டு தருவான்! 

-கவிஞர் மா. கண்ணப்பன் 


பினாங் நகரத்தார் ஆலயத்தில்  தை பூசத்தின் போது வெள்ளித் தேரில் நகர்வலம் வந்த தண்ணீர்மலையான்



ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை கழுத்தில் 
அணியாரம் இட்ட பெருமான் 
ஆகாயம் பூமியிடை நீராவிபோல் வடிவில் 
ஆதாரமான பெருமான் 

மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது 
மெய்யாள வந்த பெருமான் 
மின்னாகி இடியாகி மழையாகிக் காற்றாகி 
விளைவாகி நின்ற பெருமான் 

கோலாலம் பூரில்வளர்கோன் தண்டபாணி இவன் 
கோவில் கொண்டாடு மனமே 
கூற்றேதும் வாராது கொடுநோயும் சேராது 
குறையாத வாழ்வு மிகுமே! 

`ஓம்'என்ற சிறுமுட்டை உள்வீடு அவன்வீடு 
உன்வீடும் அந்த இடமே 
ஓசைக்கு மணியுண்டு பூசைக்கு மணமுண்டு 
உன்வாழ்வு கந்தன் வசமே 

நாமென்ற ஆங்காரம் நமதென்ற எக்காளம் 
நடவாது வேலனிடமே 
நடக்கட்டும் பார்ப்போ மென்றிருக்கட்டும் உன்உள்ளம் 
நலம் யாவும் வீடுவருமே 

கோமன்னன் வாழ்கின்ற கோலாலம்பூர் செந்தூர் 
கொடிகட்டி ஆள விடுமே 
கொண்டாடு கொண்டாடு தண்டாயுதத் தானைக் 
குறையாத செல்வ மிகுமே! 

-கவியரசு கண்ணதாசன் 



பினாங் நாட்டுகோட்டை நகரத்தார் கோயில் தண்ணீர் மலையான் 




அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் 
அப்பன் பழனியப்பன் - தினம் 
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் 
அப்பன் பழனியப்பன் 

கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் 
காவலில் நின்றி ருப்பான் - அங்கு 
கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் 
கண்டுகளித்தி ருப்பான். 

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு 
ஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்த 
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை 
சொல்ல மொழியுமுண்டோ! 

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் 
வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டி 
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் 
வேலனை வெல்வதுண்டோ! 

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் 
சேர்ந்து வணங்கிடுவோம் - அந்த 
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் 
சென்று கனிந்து நிற்போம்! 

பக்தருக்கென்று திறந்திருக்கும் தென் 
பழனியைக் கண்டுகொள்வோம் - அங்கு 
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் 
செய்து பணிந்திடுவோம்! 

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன் 
தண்டாயுத மல்லவோ - அந்த 
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு 
செட்டி மகளல்லவோ! 

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட 
கோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும் 
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி 
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! 

ஆறும் அறுபதும் ஆனஇருபதும் 
ஆடிநடந்து செல்வோம்-சில 
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும் 
அன்புடன் ஊர்ந்து செல்வோம்! 

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை 
உச்சத்தில் வைத்திருப்போம் - கையில் 
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து 
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்! 

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில் 
வேட்டுவன் கந்தனுக்கு - இரு 
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர் 
கனிவு நிறைந்திருக்கு! 

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று 
கால்களிலே விழுவோம் - அவன் 
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும் 
காவிரிபோல் வளர்வோம்! 

கவியரசு கண்ணதாசன் 




வேனும் செட்டி முருகன் துணை 




No comments:

Post a Comment