Saturday 9 August 2014

முறுக்கு பேசுமா பேசும் அப்பச்சி எங்கள் செட்டிநாட்டில் கேளுங்கள் ...



ஐயா மார்களே ஆயா அப்பத்தா மார்களே
ஆச்சிகளே அண்ணன்களே பிள்ளை குட்டிகளே
என்னைப்பிடிக்காதவர் எவருமுண்டோ உங்களில்?
என்னைக் கடிக்காதவர் யாருமுண்டோ உங்களில்?
உடல் தீங்கு பெரிதாய் வராது
உபாதைகள் ரொம்ப இராது
தினமும் தின்றாலும் திகட்டாது
பார்த்தவுடன் கடிக்கத்தூண்டும்
மேலும் மேலும் எடுக்கத்தூண்டும்
போதும் என்று உள்ளம் நினைத்தாலும்
நா மீண்டும் ருசிக்கத் தூண்டும்
கூட ஒண்ணு சாப்பிட்டா ஒண்ணும் ஆயிடாதுன்னு
சமாதானத்தோடு வயிறும் மனமும் நிறையும்



வெள்ளாவில வச்சு வெளுத்தாப்ல இருக்கோணும்
வெயிலுக்கு காட்டாம வளர்த்தாப்ல இருக்கோணும்னு
பொண்ணு கேட்கற மாப்பிள்ளைகள் மாதிரி
எல்லாருக்கும் நான் கூட அப்படி இருந்தாத்தேன் பிடிக்கும்
ஆனா அவையோரே நான் உள்ளது போல
இருந்தாக்கூட ருசியில் குறையமாட்டேன்
எல்லாருக்கும் எல்லாமே வெள்ளையா கிடைக்காது
உள்ளதுபோல இருக்கிறதெல்லாம் எப்பவுமே கடுக்காது

அடிப்படையில் முப்பரிமாணங்கள் எனக்குண்டு
அனைத்திற்கும் தனிச்சுவையுண்டு

பிழிந்தவுடன்
வெள்ளைப்பூவாய் மலர்ந்து சிரித்ததும்
திருப்பாமல் எடுத்துவிட்டால்
என் பெயர் பச்சத்தேன்குழல்
இது என் குழந்தைபபருவம்
வெள்ளப்பணியாரம் எனக்கு தூரத்து உறவு
இருவருமே மவுசானவர்கள்,
இருவருமே எண்ணெயில் குளித்தவுடன்
ஈரத்தோடு வெளிவருபவர்கள்
சூடாய் சாப்பிட்டால் மட்டுமே அதிகம் ருசிப்பவர்கள்
உடலுக்கு தீங்கு கொஞ்சம் கூட விதைப்பவர்கள்

என் அடுத்த பரிமாணம் தேன்குழல் -எனது பெண்பால்
பெண் போன்று மென்மையானவள்
அவள் போன்றே சிக்கலானவள் - பார்ப்பதற்கு !!
குழல்வடிவில் மலர்ந்து தேனாய் சுவைப்பேன்
சிக்கலாய்ப் பிழிந்தாலும் சிறப்பாய் ருசிப்பேன்
சட்டி கொள்ளும் வரை என்னைப் பிழியலாம்
அளவுகளுக்கு அப்பாற்பட்டவள் நான்
சிக்கலின்றி வாழநினைக்கும் உங்களுக்கு
சிக்கலான என்னுருவம் ஓர் எடுத்துக்காட்டு
சிக்கலை ஆறப்போட்டு அணுகினால் சீராகும்
என்னையும் அறவைத்து கடித்தல் நன்றாகும்

எனது மூன்றாவது பரிமாணம் முறுக்குவடை - எனது ஆண்பால்
முறுக்கான என் உருவம் உறுதியான என் வடிவம்
நேர்த்தியான அழகு சிக்கலில்லா பொலிவு
எததனை சுட்டாலும் பிசிரில்லாத வட்டம்
அளவெடுத்து வைத்தாற்போல் அனைத்தும் ஒரே விட்டம்
ஒன்பது சுற்று ஏழு சுற்று ஐந்து சுற்று
சுற்று எத்தனை யானாலும் சுவை ஒன்று தான்
இது ஆச்சிமாரின் கைவண்ணத்தால் கிடைத்தபெரும்பேறு
நகரத்தார் குலத்திற்கே உள்ள தனிப்பெறும் பேறு

எனக்குமட்டும் உரித்தான இன்னொரு பேறு
மாப்பிள்ளை பலகாரத்தில் முன்நிற்கும் பேறு
1001, 501, 301 என தோதிற்கு தகுந்தாற்போல் எண்ணிக்கை
ஒன்று குறைந்தாலும் ஓங்கிவிடும் மாப்பிள்ளைவீட்டாரின் கை
உடையாமல் சென்று சேர்தல்வேண்டும்
உப்புக் குறையாமலும் இருத்தல் வேண்டும்
சம்மந்தப்புரத்தின் வாய்க்கு அவலாய் இருந்திடாமல்
அவர்கள் நாவில் ருசியாய் நிலைத்திடல்வேண்டும்
எனது அளவும் ருசியும் பொலிவும்
பெண்வீட்டார் பெருமை என்றென்றும் பேசவேண்டும்

என் உரு எதுவானாலும் மூலம் ஒன்று தான்
அரிசியும் பருப்பும் கலந்திட்ட கலவைதான்
அளவுகள் மாறினால் உருவும் மாறிடும்
நீங்கள் கடிக்கும்போதெல்லாம்
நான் ருசிக்கவேண்டுமா?
என்னைத் தயாரிப்பதில் சற்று அக்கறை கொள்ளுங்கள்
முறுக்குதானே என்று சாதாரணமாக எண்ணிணால்
நானும் முறுக்கிக் கொள்வேன்
ரெடி மிக்ஸில்நீங்கள் என்னை ரெடி பண்ண நினைத்தால்
சிறப்பான ருசிக்கு உத்திரவாதம் இல்லை
ஆகவே செட்டியவீட்டின் முறுக்கின் செய்முறையை
சிம்பிளாக சொல்கிறேன் செவி மடுங்கள்
தேவையான அளவுகளில் அரிசியும் பருப்பும் வேண்டும்
அரிசியைக்கழுவிகாயவைத்து அரைத்தாலும் சரி
ஈரத்துணியால் துடைத்து காயவைத்து அரைத்தாலும் சரி
நான் கருக்காமல் இருக்கவேண்டுமேயானால்
அரிசி சுத்தமாய் இருத்தல் வேண்டும்
பொன்னிறமாய் பருப்பை வறுத்து
காயவைத்த அரிசியோடு இணைத்து
கலப்படமில்லாமல் அரிசிஅரைத்த
அரவை இயந்திரத்தில் பதமாய் அரைத்து
பின் பக்குவமாய் உப்பிட்டு தேவையான தண்ணீரிட்டு
பிசைந்து அழகாக சுற்றி
அளவான சூட்டில் காய்ந்த எண்ணெயில்
பக்குவமாய் பிழிந்து
கருத்து சிவக்காமல்
பிரிந்து வெடிக்காமல்
பேசாத பக்குவத்தை அடைந்தவுடன்
என்னை எடுத்து எண்ணெயை இறுத்து
காற்றில்லாத உலகத்தில்
வைத்துக்காத்தால்
எனக்கு ஆயுள் கூடும்
மொத்தத்தில்
வதக்குவதக்குன்னும் இருக்கப்படாது
கடுக்குகடுக்குன்னும் இருக்கப்படாது
பொருபொருன்னு இருக்கவேண்டும்
இதுவே என் ருசியின் இலக்கணம்
என்னைப்பிழிய நினைக்கும்
யாவரின் லட்சியம்

என்னை உண்ண காலங்கள் கிடையாது
என்னை கடிக்க நேரங்கள் கிடையாது
தினமுண்ணும் பலகாரம் நான்
விருந்தினர்வருகைக்கு
என்றும் கைகொடுப்பவன்
இரண்டு முறுக்கோடு காபிகொடுத்து
விருந்தினர்க்கு உளமாற உபசரித்தால்
உள்ளம் நிறைந்துவிடும் உவகை பொங்கிவிடும்
சீரியல் பார்க்கும்போதும் சரி
சினிமா பார்க்கும் போதும் சரி
அரட்டை அடிக்கும்போதும் சரி
ப்ரயாணம் பண்ணும் போதும் சரி
கடிப்பதற்கு உகந்தவன்
ஸ்னாக்ஸில் சிறந்தவன்

நான் விருந்தினர்களை உபசரிக்கும்
பண்டம் மட்டுமல்ல
உறவுகளின் நேசத்தை ப்ரதிபலிக்கும்
பண்டமும் கூட
கொண்டுவிக்கப்போகும் செட்டியார்களின்
உடைமைகளோடு உடையாமல் பயணித்து
ஒவ்வொரு நாளும் ஓவியமாய் ஒவ்வொண்ணாய்
என்னை எடுத்து வைச்சு கடிக்கையிலே
ஆச்சியின் ஞாபகத்தை சினேகமாய் நினைவூட்டி
பாசத்தை பக்குவமாய் இறுக்குவதில் எனக்கும் ஓர் பங்குண்டு
கல்யாணத்திற்கப்புறம் மகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும்
பிறந்தவீட்டுப் பாசத்தையும் ஆயாவீட்டு அன்பையும்
அமைதியா நினைவூட்டுவதில் எங்க பங்கும் அதிகமுண்டு
வெளியூருக்கு படிக்கப்போகும் பிள்ளைகளின்
வீட்டு ஞாபகத்தை விரட்டியடிப்பதிலும்
எங்கள் பங்குகொஞ்சமுண்டு

இதுவரை என் பெருமை கேட்டீரகள்
என் ருசியின் சிறப்பை அறிந்தீர்கள்
இனி என் அவா கேளுங்கள்
என் உள்ளத்து உணர்வுகளை உணருங்கள்
கடுக்கென்று கடிப்பதிலே தான் சுகம் எனக்கு
பல்லில் அரைபடுவதில் தான் இன்பம் எனக்கு
பல்லில்லாத ஐயாக்களும் பாப்பாக்களும்
இடித்துண்பதிலும் அரைத்துண்பதிலும்
எங்களுக்கு இஷ்டம் அவ்வளவில்லை என்றாலும்
அவர்கள் ஆசையைத் தணிப்பதிலே
ஒர் வகை இன்பம் உண்டு
விஷேடங்களில் விருந்தாகும் போது
பிறந்திட்ட பயனடைவோம்
கேதார வீடுகளில் கடிபடும்போது
கவலையில் பங்கு கொள்வோம்
எங்களுக்கும் உணர்வுண்டு - உங்கள்
வயிற்றுக்கிரையாகும் வரை உயிருமுண்டு
எங்கு விருந்தானாலும் ருசிக்க வேண்டும்
இடம் எதுவானாலும் சிறக்க வேண்டும்
என்ற எண்ணத்துடனே பிறக்கிறோம்
என்ற எண்ணத்துடனே உயிர் துறக்கிறோம்
அடுத்தமுறை என்னை எடுக்கும்போது
கவலைகள் மறந்து கடித்திடுங்கள்
சுவையில் மனதை லயித்திடுங்கள்
எனதுரையினை நினைத்தடுங்கள்
எனதுணர்வினை மதித்திடுங்கள் ..

- Ragavan

No comments:

Post a Comment