Friday, 8 August 2014

வணிகத் தமிழ் வளர்ப்போம்


இந்தியாவிலேயே கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் தமிழர்கள் என்பதே இன்றைய இளைய சந்ததியினருக்கு உரைக்கப்படாத செய்தி.

தமிழ் படிப்பவர்கள் குறைந்தும், வரலாறு படிப்பவர்கள் அதை விடக் குறைந்தும் வருவதால், இந்த செய்தியை இந்தியாவில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் ஒரு வணிகப்புத்தகமாக வெளியிட்ட பெங்குவின் பதிப்பகத்திற்கும், இந்திய வணிகக் கதை என்ற தலைப்பில் இதை அனுமதித்து முன்னுரை எழுதிய குருசரண் தாஸிற்கும், நூல் ஆசிரியர் கனகலதா முகுந்திற்கும் நன்றிகள் முதலில்.

2000 ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் கிழக்குக்கரையில் துறைமுகங்கள் அமைத்து ரோமாபுரி, சீனா மற்றும் சகல கிழக்காசிய நாடுகளிலும் வணிகம் செய்திருக்கிறான் தமிழன். காஞ்சி, மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, கரூர், தொண்டி என நம் எல்லா ஊர்களும் சொல்ல முடியாத அளவு சீரும் சிறப்புமாக இருந்திருக்கின்றன. மணிமேகலையில் காஞ்சி நகரில் தங்க சங்கிலிகள் போட்ட குதிரைகள் நின்றதாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

பொன்னும் பொருளும் பண்டமாற்று செய்த காலத்தில் ஐரோப்பிய நாட்டு தங்கம் இந்தியாவிற்கு வர ஆரம்பித்திருக்கின்றது. வேறெதுவும் வேண்டா வண்ணம் வாழ்ந்த தமிழன் அதிகம் பரிவர்த்தனை செய்தவை தங்கம், வைரம், நவரத்தினக்கற்கள் இவைகளைத்தான். மற்றதெல்லாம் இங்கு தட்டுப்பாடின்றி கிடைத்ததால், ஆபரணத்திற்கு தேவையான உலோகங்கள் மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டன.

இன்றைய மதிப்பீட்டில் உலகில் உள்ள தங்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளதாகச் சொல்கிறார்கள். நம்ப சிரமமான இந்த தகவலை குருசரண் தாஸின் முன்னுரையில் பத்மனாபசுவாமி கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ஆகும் என்று படித்தவுடன் நம்பத் தோன்றுகிறது.

கோயிலைச் சுற்றிய வாழ்க்கை முறையை நம் முன்னோர்கள் நிறுவி, அதைச் சுற்றியே அனைத்து சமூக-பொருளாதாரக்கூறுகளையும் கட்டமைத்திருக்கிறார்கள். கோயில் நிலம், கோயில் நகை, கோயில் மாடு, கோயில் தெப்பம், கோயில் நிர்வாகம் இப்படித்தான் கட்டிக் காத்திருக்கிறார்கள். கோயிலைச் சுற்றி வணிகம் செய்திருக்கிறார்கள். நகரம் என்ற கட்டமைப்பு தமிழர்களின் பங்கீடு.

எல்லா நகரங்களிலும் பெரிய கடை வீதி என்று ஒன்று இருந்தது. இன்றும் இருக்கிறது. துறை சார்ந்த தெருக்களும் அங்காடிகளும் கடைகளும் இருந்தன. விவசாயம் செய்தவர்கள் அனைவரும் வேளாளர்கள். வணிகர்கள் எல்லாம் செட்டிகள். இது சாதி அடையாளம் அல்ல. தொழில் அடையாளம். பதினேழாம் நூற்றாண்டிற்கு பிறகு தான் சாதி அடையாளங்களும் உப பிரிவுகளும் உறுதியடைகின்றன.

எல்லா கலைகளும் செழித்திருக்கின்றன. சென்னிமலையில் உருக்கு செய்து ரோமாபுரிக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆலங்குளத்து மண் வேலைப்பாடுகளில் ரோமானிய தாக்கம் தெரிகிறது. தமிழ் வரலாறு நம் தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் வந்தவர்கள் எழுதிய பயண நூல்கள் வழியாகவும் தான் தெரிகின்றது. வெள்ளம் கொண்டுபோன மிச்சம் தான் நமக்கு கிடைத்துள்ளது என்பது எவ்வளவு பெரிய சோகம்?

அசோகர் கால கல்வெட்டுகளிலேயே தமிழர் பற்றிய குறிப்புகள் இருந்தன. பின் சங்க இலக்கியங்கள் அதைத் தெரிவித்தன. ஜைன- புத்த மரபுகள் தலை தூக்கிய காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் இவை ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. பின்னர் பல்லவர்கள் ஆண்டார்கள். இலங்கையை பிடித்தான் பல்லவன்.

ஆனால் அதிக ஆண்டு காலம் நல்லாட்சி செய்தது சோழ வம்சமே. பத்தாம் நூற்றாண்டில் இலங்கையை பலமுறை வென்று, அதை சோழ மாநிலமாகவும் அறிவித்த காலமும் உண்டு. கடாரம் கொண்டான். வங்கம் வழி சென்று கங்கை கொண்டான். கம்புஜாவில் (இன்றைய கம்போடியா) அங்கோர் வாட் கோயில் கட்டினான். அனைத்திற்கும் மேலாக நல்லாட்சி புரிந்தார்கள். குறிப்பாக மக்கள் தங்கள் தொழிலை கவலையின்றி மேற்கொள்ளும் நிலையை அளித்தார்கள். எல்லா வணிகமும் தழைத்தன. உலகளாவிய வணிகம் செய்த முதல் குடி தமிழ்க் குடி என்ற பெருமை கிடைத்தது.

உணர்ச்சி வசப்படாமல் படிக்க இயலவில்லை. 2,000 ஆண்டுகளுக்கு முன் உலகிற்கு வழி காட்டியவர்கள் இந்த ஆயிரம் ஆண்டுகளில் நிலை தவறி தாழ்ந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. முதலில் மொகலாய சாம்ராஜ்யம், பின்னர் கிழக்கிந்தியக் கம்ெபனி என எதுவும் தமிழர் வணிகத்தை வேரூன்ற விடவில்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர். சாதி வேரூன்றியது. அந்நியர் ஆட்சிகளுக்கும், தாக்கத்திற்கும் முழுவதும் இரையானோம்.

இந்தப் புத்தகம் தமிழகத்தின் பண்டை காலத்து வணிக சூழலை நியாயமாக பதிவு செய்துள்ளது. எல்லா சான்றுகளும் முறையாகக் காட்டப்பட்டு தமிழர் அல்லாதவர்கள் படித்தாலும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. ஒரு பொருளாதாரப் பேராசிரியர் எழுதியதால் வணிகத் தகவல்களை முறையாக எழுதியிருக்கிறார்.

மார்வாடிகள் பற்றிய புத்தகத்தில் இன்றைய மார்வாடிகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. ஆனால் இது வெறும் வரலாற்று ஆவணமாக உள்ளது. இன்றைய வணிகத்தில் ஜெயித்த தமிழர்களைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியிருக்கலாம். நம் முருகப்பா குழுமமும், டி.வி.எஸ் குழுமமும் சாதாரண சாதனைகளையா செய்திருக்கின்றன? வியாபாரத்தில் ஜெயித்த முதல் தலைமுறை தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

அதேபோல நகரத்தார் சமூகம் பற்றியும் இன்னமும் விரிவான குறிப்புகள் கொடுத்திருக்கலாம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை பற்றியெல்லாம் பிரமாதமாகச் சொல்லியிருக்கலாம். இவையெல்லாம் என் எதிர்பார்ப்புகள்தாம். குறைகள் என்று சொல்ல முடியாது. தங்கள் வேர்கள் தெரியாமல் எம்.பி.ஏ படிப்பவர்கள் இதைப் படித்தால் நிச்சயம் தன்னம்பிக்கையுடன் புதிதாக யோசிப்பார்கள்.

தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் போலி அறிவு ஜீவிகளுக்கு நிச்சயம் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம்.

இந்த கட்டுரை நேற்று தி இந்து நாளிஇதழில் வணிகம் என்ற பகுதியில் வெளிவந்தது .

No comments:

Post a Comment