Monday, 29 September 2014

சப்தரிஷி ராமாயாணம்


சப்தரிஷி ராமாயாணம்
குழிபிறை ஆதினம் அண்ணாமலை செட்டியார் இல்லத்தில் இராமர் திருக்கல்யாணத்தின் பொது


சப்தரிஷி ராமாயணம் சுருக்கமானது. ஏழு மகரிஷிகளால் இயற்றப் பெற்றதால் சப்தரிஷி ராமாயணம் என பெயர் பெற்றது. சமஸ்கிருத ஸ்லோகங்களாக இயற்ற பெற்ற இதை ஸ்ரீ ராமரின் திருவருளால் தமிழில் கவிதையாக்கியிருக்கிறேன். இதை படிப்பவர் யாவரையும் காத்தருள வேண்டுமென ஸ்ரீ ராமரை வேண்டி அவர் பொற்பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறேன்.

காஷ்யப மகரிஷியின் பால காண்டம்:

வாரிசு வேண்டுமென தசரதர் வேண்டினார்
சூர்ய குலத்தில் ஸ்ரீ ராமர் தோன்றினார்
விஸ்வாமித்திரரிடம் வித்தைகள் கற்றார்
அஸ்திரங்கள் பல அன்போடு பெற்றார்
கன்னி யுத்தத்தில் தாடகையை கொன்றார்
கௌசிகன் வேள்விக்கு காவலாய் நின்றார்
சுபாகு மாரீசன் இருவரையும் வென்றார்
அகலிகா கல்லின் மேல் அவர் பாதம் பட்டது
பெண்ணாகி நின்றாள் பெற்ற சாபம் விட்டது
ஜனகர் ஆளும் மிதிலை புகுந்தார்
சிவபெருமானின் வில்லை வகுந்தார்
மண்ணின் மகளாம் சீதையை மணந்தார்
ஜானகி ராமனாய் ஊர்வலம் நடந்தார்
வழியில் பரசுராமருக்கு பணிவை தந்தார்
அயோத்தி திரும்பினார் நலமாக
பல்லாண்டு வாழ்ந்தார் வளமாக

அத்ரி மகரிஷியின் அயோத்யா காண்டம்:

ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக வேளையில்
சூழ்ச்சி தோன்றியது கூனியின் மூளையில்
அதை கைகேயி புத்திக்குள் திணித்தாள்
இரண்டு வரங்களை கேட்கும்படி பணித்தாள்
கைகேயி ஆசையால் ராமர் பாசத்தை மறந்தாள்
மன்னனிடம் இரண்டு வரங்களையும் இரந்தால்
உன் ராமன் காடாள வேண்டும்
என் பரதன் நாடாள வேண்டும்
இதை கேட்டதும் தசரதர் கலங்கினார்
துக்கத்தால் தரையில் விழுந்து மயங்கினார்
பரத்வாஜ மகரிஷியின் ஆரண்ய காண்டம்
தந்தை சொல் காக்க மனம் உகந்தார்
சீதா லக்ஷ்மண சமேத ராமர் வனம் புகுந்தார்
பாவம் போக்கிடும் கங்கையை கடந்தார்
வேடன் குகனின் நட்பை அடைந்தார்
மரவுரி சடை முனி போல தரித்தார்
சித்ரகூடத்தில் சில நாள் வசித்தார்
காண வந்த பரதனை அணைத்தார்
தந்தைக்கான ஈமக்கடன் முடித்தார்
வனத்தில் வசித்தோர்க்கு நன்மை செய்தார்
பின் அகஸ்திய முனிவரின் ஆசிரமம் எய்தார்
முனிவரிடம் பெற்றார் இனிதான அருளும்
அக்ஷ்யவில் எனும் அரிதான பொருளும்

விஸ்வாமித்திர மகரிஷியின் கிஷ்கிந்தா காண்டம் :

அகஸ்தியர் சொல்படி பஞ்சவடி சென்றார்
பஞ்சவடியின் முனிவர்களிடம் அபயம் என்றார்
சூர்ப்பணகையின் காதையும் மூக்கையும் சிதைத்தார்
திறம் மிக்க கர தூஷணர்களை வதைத்தார்
மாயம் செய்த பொன்மானை அதம் செய்தார்
வானர தலைவன் வாலியை வதம் செய்தார்
வன ராஜ்யத்தை குண தாரையோடு சுக்ரீவனுக்கு வழங்கினார்
ஆபத்தில் உதவும் நண்பனாக விளங்கினார்

கௌதம மகரிஷியின் சுந்தர காண்டம் :

ஆஞ்சநேயர் விளையாட்டாக கடல் தாண்டி குதித்தார்
அசோகவனத்தில் அன்னையை கண்டு துதித்தார்
ஸ்ரீ ராமர் தந்த மோதிரத்தை எடுத்தார்
ஜனகன் மகள் ஜானகியிடம் கொடுத்தார்
அக்ஷன் முதலான அரக்கரை ஒழித்தார்
இலங்கையை நெருப்பால் எரித்தார்
பின் ஸ்ரீ ராமரிடம் வேகமாக பறந்தார்
கண்டேன் சீதையை என மகிழ்ச்சியோடு பகர்ந்தார்

ஜமதாக்னி மகரிஷியின் யுத்த காண்டம்:

ஸ்ரீ ராமர் நளன் மூலமாக சேது அணை செய்வித்தார்
வீரம் மிக்க வானரருடன் இலங்கை சென்று கர்ஜித்தார்
கும்பகர்ணன் முதலான அசுரருக்கு எமனாக நின்றார்
ராவணன் அழிந்த அப்பெரும்போரில் வென்றார்
இலங்கை அரசை விபீஷணன் தலையில் முடிந்தார்
ஜெய ராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் பறந்தார்
அயோத்யாவின் சிம்மாசனத்தில் மன்னனாய் அமர்ந்தார்

விசிஷ்ட மகரிஷியின் உத்தர காண்டம்:

சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமர் மன்னனாய் சிறந்தார்
லக்ஷ்மண பரத சத்ருக்கனரோடு நல்லாட்சி புரிந்தார்
அவர் ஆட்சியில் அஸ்வமேதம் போன்ற வேள்விகள் நடந்தன
மக்கள் மட்டுமல்ல அணில் போன்ற ஜீவன்கள் கூட மகிழ்ந்தன
ஊரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பிழைக்கச் செய்தார்
உயிர்களின் தலைவனான் ஸ்ரீ ராமர் தர்மத்தை தழைக்கச் செய்தார்
பல்லாண்டுகளுக்குப் பின் தம் ராஜ்யத்தை இரண்டாக்கினார்
தம் புதல்வரான லவ குசரை அவற்றுக்கு அரசனக்கினார்
தன்னை நேசித்த மக்களோடு சரயு நதியில் இறங்கினார்
மீண்டும் பரம பதம் சென்று மீண்டும் மஹாவிஷ்ணுவாக விளங்கினார்

பாராயண பலன்

அமுதம் நிகரான ராம காதை ஜபித்தவர்
செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்தவர்
அறம் பொருள் இன்பம் மூன்றையும் வெல்வர்
தேவர்கள் விஷ்ணுவை துதிக்கும் வைகுண்டம் செல்வர்

Sunday, 28 September 2014

அகர வரிசையில் இராமாயணம்

இந்த புண்ணிய மாதமாமன் புரட்டாசியில் பெருமாளை வணங்குவதும் ராமாயணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும்செயலாகும். அதிவேகமாக மனிதன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் காலம் இது . சற்று எளிமையாகவும் சுருக்கமாகவும்
இன்று இங்கு சற்று வித்தியாசமான முறையில் ராமாயணத்தின் கதைச் சுருக்கம் அ வரிசையில் . அமுதுக்கு நிகரான நம் தமிழ் மொழியில் செழுமையை இதில் நாம் காணமுடிகிறது .
இராமர் பட்டாபிஷேகம்


"அனந்தனே அசுரர்களை அழித்து,அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாகஅறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்குஅளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ? அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை
அரவ-ணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின்
அரிய வில்லை அடக்கி, அன்பும்அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியைஅடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகியஅனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்குஅனுப்பினாள். அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையைஅபகரித்தான் அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்குஅளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னைஅங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்அளவில்லை. அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியைஅடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர். அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனைஅரசனாக அரியணையில் அமர்த்தினர். அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையைஅடைந்தான். அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்கஅன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின்அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம். அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையைஅமைத்து,அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல். அனந்த ராமனின் அவதாரஅருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே. "

Thursday, 25 September 2014

கண்ணதாசன் அவர்கள் மொழிபெயர்த்த கனகதாரா ஸ்தோத்திரம்





மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே.
நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டு
நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு
கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு,
கொஞ்சிடும் , பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!
ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்
என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்று
ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு
அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே !
நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்
நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்!
பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்துமூடி
பரம்பரைப் பெருமை காப்பார் !
பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலே
அச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டு
ஆனந்தம் கொள்வதுண்டு !
இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே !
இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே !
மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னை
மாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்
அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டு
அண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !
பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!
பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்
பிழைப்பன்யான் அருள்செய்வாயே,
பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே !
கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்பு
கார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலை
மைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!
மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!
செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்
திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்!
கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயே
கொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே !
போரினில் அரக்கர்கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னை
போரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்த
மாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய் ?
மங்கையின் விழிகளன்றோ ! மாலவன் தன்னை வென்ற
தேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலே
திருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ!
கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்
கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே !
மாந்தருக் (கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்
சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்
தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும் !
எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!
இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே!
எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி ?
இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி ?
தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும் !
தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும் !
அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்
அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும் !
இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே !
இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் தாயே !
நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்
நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!
சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்
சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்
வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்
வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!
தேர்கொண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவியாலே
திருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே !
ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி!
அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி !
ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்!
அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்!
தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாக
திரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்!
வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே !
வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே!
வேதத்தின் விளைவே போற்றி ! வினைப்பயன் விளைப்பாய் போற்றி !
சீதத்தா மரையே போற்றி ! செம்மைசேர் அழகே போற்றி !
கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி !
ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி !
பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி !
நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி ! போற்றி !
பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி ! போற்றி !
மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி ! போற்றி !
அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி !
அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி !
குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி !
குளிர்ந்தமா மதியி னோடும் குடி வந்த உறவே போற்றி !
sமன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி !
sமாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி !
என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி !
எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி ! போற்றி !
தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி !
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி !
தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி !
தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி !
தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி !
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி !
தாள் , மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி ! போற்றி !
பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி!
பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி!
தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி!
தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி!
சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி!
ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி!
பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி!
பக்தருக் (கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி!
கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி!
கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி!
மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி!
மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி!
விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி!
விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி!
எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி!
இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி!
மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி !
வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி !
மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி !
விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி !
கைநிறை செல்வம் யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி !
காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி !
செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி !
சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி ! போற்றி !
மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி !
மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி !
தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி !
தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி !
ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி !
ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி !
தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி !
தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி ! போற்றி !
கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!
காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!
வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!
வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!
பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!
பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!
விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!
வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி!
மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்தி
மங்கைக்கு நன்னீராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்தி
தண்டலக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி
தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டி
மண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கி
மறுவிலாப் பளிங்fகின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்
அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!
அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்!
பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!
பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ!
ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையோன் ஒருவ னேதான்
இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்!
தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்
சநிதிரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்
மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி!
முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி!
மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாக
அற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதி
ஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்
இப்பொழுது ரைத்த பாடல் எவரெங்குபா டினாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;
நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும்; என்றும்
நாட்டுக்கே ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை!


Tuesday, 16 September 2014

புரட்டாசி மாதமும் செட்டிநாடும் :



பொதுவாக நம் செட்டிநாட்டில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு விழாக்கள் நிகழும் இந்த புரட்டாசி மாதம் சற்று விசேஷம் நிறைந்த மாதம் .இந்த மாதம் பிறப்பதற்கு முன்பே ஓர் இரு நாட்களின் முன்பே அமைத்து பொருட்களும் சுத்தம் செய்து அடுப்படி சாமான்கள் கழுவி சுத்தம் செய்தும் . புது பாத்திரங்கள் இந்த மாதத்திற்கு என்று தனியாக பாத்திரங்கள் வைத்திருப்பர் .அவற்றையே இந்த புரட்டாசி மாதத்தில் மட்டும் பயன்படுத்துவர் . இந்த மாதத்தில் மிகுந்து செட்டிநாட்டு பகுதி மக்கள் அனைவரும் சைவ உணவே எடுதுகொள்வர்.

செட்டிநாடும் ராமாயணமும் :

இந்த மாதத்தில் நம் செட்டிநாட்டுப் பகுதியெங்கும் (ஏடு படித்தல் ) இராமயணம் ஊரின் பொதுவில் உள்ள கச்சேரிகூடம் , பிள்ளையார்கோயில் , சிவாலயம் , வீடுகள் , அரசமரத்தடிகள் போன்ற இடங்களில் ஓதப்படும் .சில இடங்களில் காலையிலும்
மிகுந்து இந்த இராமாயணம் படிப்பது மலையிலும் நிகழும் . இந்த நிகழ்வி அணைத்து சமூகத்தவர்களாலும் நிகழ்த்தப்படும்.
இந்த விழா ஊரின் பொதுவில் அனைவரும் ஒன்றாக இணைத்து 1௦ ,15 , 21 என்று இராமர் பட்டாபிஷேகம் படம் வைத்து மாலையில் படிப்பர் . அப்போது தங்களால் இயன்றதை நாட்டார்களும் நகரத்தார்களும் தினம் ஒருவராக கதை கேட்க வருபவர்களுக்கும் ராமருக்கு நிவேதனமாக சுண்டல் , வடை , பாயசம் , போன்ற நிவேதம் செய்தும் தருவர் .

இதை தொடர்ந்து மற்றும் நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் ஏடு படிப்பர் . தங்கள் வீடுகளில் 7 , 9 , 11 நாட்கள் என்று ஏடு படிப்பர் . இந்த நிகழ்விற்கு நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் மாலையில் ஏடு படிப்பர் .இதற்கு நகரத்தார்கள் தங்களும் தெரிந்தவர்கள் , சுற்றத்தார்கள் , பங்காளிகள் , தாயபிள்ளைகள் என்று இந்த நிகழ்விற்கும் அனைவரையும் வீட்டிற்கு திருமணத்திற்கு அழைப்பது போல் அனைவரையும் அழைப்பர்

மாலையில் வீட்டில் விளக்கேற்றி ராமர்(பட்டாபிஷேகம் ) படத்திற்கு மாலைகளும் பூக்களும் சாற்றி பூரணகும்பம் வைத்து வழிபடுவர் . நாள் ஒன்றுக்கு ஒரு விதமாக இராமர் பிறப்பு முதல் பட்டாபிஷகம் வரையான நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக படிப்பர் .இதை கேட்க அருகில் உள்ள நகரத்தார்கள் மற்றும் தெரிந்தவர்கள் வந்து மாலையில் கதை கேட்பார்கள் . இந்த நிகழ்வில் மூன்று நாட்கள் சிறப்பாக நிகழும் . இராமர் பிறப்பு நிகழ்வு .மற்றும் சீதா கலியாணம் சிறப்பாக நிகழும் . வீடுகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மாலையில் ஏடு படித்து இராமர் சீதை திருமணம் சிறப்பாக நிகழும் .திருமனத்திற்கு தாயபிள்ளைகள் பங்காளிகள் என்று அனைவரையும் அழைத்து சிறப்பாக நிகழ்த்துவார் . சீதா கலியாணத்தில் மலையில் வீட்டில் திருமண விருந்தும் நிகழும் . இதேபோல் இறுதி நாள் பட்டாபிஷேகம் நிகழும்போது சிறப்பாக இருக்கும்

ஏடு படித்தலின் தாத்பரியம் :

இராமாயணம் படிப்பதில் ஒரு சூட்சமம் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். இராமாயணம்தில் இராமர் மற்றும் அவர் தம்பிகளின் ஒற்றுமையை காட்டுகிறது .நம் செட்டிநாட்டில் முன்பு வீட்டில் 5 அல்லது 6 பிள்ளைகள் இருக்கும் . அவர்கள் ராமன் , லெட்சுமணன் , பரதன் , சத்ருகன் ஆகிய நால்வர் போன்று ஒற்றுமையாய் வாழவேண்டும் அறவழியில் நடக்கவேண்டும். என்பதையும் .குடும்ப ஒற்றுமை பலப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த நிகழ்வை தொடங்கிவைத்தனர் .
மேலும் ஊர் பொதுவாக இராமாயணம் படிப்பது நிகழ்வதன் நோக்கம் . அணைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.அயோத்தி மற்றும் மீதலை நகரத்தில் எப்படி மகிழிச்சி நிலவியோதோ அதுபோன்று நம் ஊரிலும் நிலவவேண்டும் என்றும் மக்கள் நல்வழியில் செல்லவேண்டும். தவறான வழியில் சென்றால் ஏற்படும் விளைவுகளை ராமாயணத்தில் கதையில் மூலம் உணர்ந்து நல்வழியில் செல்லவேண்டும் என்பதன் நோக்கில் நிகழ்த்தப்படுகிறது .
மேலும் தற்போது நகரதர்களும் நாட்டார்களும் சரி தொழில் வேலை நிமித்தமாக நாம் நம் கிராமங்களை விட்டு வெளியேறி பல பகுதிகளில் வசிக்கிறோம் . நம் இந்த மாத்ததில் நாம் உள்ள வீட்டில் ராமர் படம் வைத்து ராமாயணம் படிக்கலாம் . நம் ஐயாக்களும் ஆயாககள் , அப்பதாகள் நமக்கும் சொல்லி சென்றவரை நாமும் நம் பிள்ளைகளும் சொல்லி புரிய வைக்க வேண்டும் . இது நம் பண்பாடு . நம் பண்பாடை நாம் தான் பாதுகாக்க வேண்டும் .

மற்றும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மற்றும் அதை தொடர்ந்து 9 நாட்கள் நவராத்திரி விழா சிறப்பாக நிகழும் மாலையில் அம்மனை சிறப்பாக அலங்காரத்தில் திருவீதி உலாவும் நிகழும். 1௦ நாள் விஜய தசமி விழா மிகவும் கோலாகலமாக நிகழும்

செட்டிநாட்டில் விஜதசமி (மகர்நோன்பு ):

இந்த விழாவின் போது கோயிலில் இருந்து அம்மன் குதிரை வாகனத்தில் ஏறி கையில் வில் அம்பு ஏந்தி பவனிவருவாள் . அதற்கும் முன்பு மக்கள் மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்வர் பின் நகர்வலம் வந்த அம்பாள் மகர்நோன்பு பொட்டலை நோக்கி செல்வர் . அங்கு ஒரு வாழை மரத்துடன் வன்னிமரம் கிளைகளை ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருக்கும். நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஒன்றாக இணைந்து இந்த விழாவை சிறப்பாக நிகழ்த்துவர். கோயிலில் இருந்து மகர்நோன்பு போட்டால் செல்லும் வழியெங்கும் நீர்மோர் ,பானகம் ,சர்பத் , பழங்கள் , புளிசாதம் , கதம்பசாதம் , எலுமிச்சசாதம் ,பொங்கல் [போன்ற வகை வகையாக செய்து தம்மால் இயன்றவற்றை மக்களுக்கு கொடுப்பர் . மற்றும் மகர்நோன்பு பொட்டலில் சுவாமி வாழை மரத்தை நோக்கி மூன்று முறை அம்பு எய்துவார் . எய்த அம்பை வீட்டிற்கும் பிடித்து சென்றால் தங்கள் அந்த ஆண்டு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை .
சுவாமி அம்பு போட்ட பின் சுவாமி அங்குள்ள கொட்டகையின் சில மணிநேரம் தங்கி பக்தர்களுக்கு அருள்புரிவார் .

நகரத்தார்களும் மகர்நோன்பு :

நகரத்தார்கள் வீடுகளில் வாசலில் அழகான பெரிய கோலங்கள் இடப்பட்டு வாயில்களில் தொரணங்கள் தொங்கவிடப்பட்டும் . வீட்டில் திருமணமான புதிய தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் இந்த விழாவில் பங்கு பெறுவார் . இதற்காகவே திருமணத்தின் போது பெண்ணுக்கு வெள்ளியில் ஒரு அம்பு(அ) கிளுக்கி செய்து வைத்திருப்பார்கள். இந்த அம்பை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ள படைக்கிற அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலின் முகப்பில் ஒரு தீபமும் ஆலம் கரைத்து வைத்து பிள்ளையை தூக்கி கொண்டு செல்வர் . சுவாமி அம்பு இட்டபின் அனைவருக்கும் தங்கள் பிள்ளைகளை தூக்கிகொண்டு அம்பு போடுபர் (பிள்ளையின் கையில் அம்பை கொடுத்து பெற்றோர் குழந்தையின் கையை பிடித்து அந்த வாழை மாரத்தில் குத்திவிட்டு அந்த வாழை மரத்தில் இருந்து சிறிது நாரை எடுத்தும் வன்னிமாரத்தில் இருந்து சிறுது இலையை எடுத்து அந்த அம்பின் முன்பு கட்டிவிடுவர் .

அம்புடன் பிள்ளையை கொட்டகையில் உள்ள சுவாமியை தரிசித்து விட்டு வீடு திரும்புவர் .வீட்டில் வாசலில் பெற்றோரும் குழந்தையும் நிற்கசெய்து ஆலத்தி எடுத்தி வீட்டிற்குள் பிரவேசித்து . படைக்கும் வீட்டில் சென்று அம்பை வைத்து வழிபாடுசெய்வர் .செட்டிநாட்டில் தாய்க்குத் தலைமகன் அம்பு போடுதல் விசேஷம். “ என்னப்பா, தாய்க்குத் தலைமகன், எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டு கசாப்புக் குழம்பு சாப்பிட்டு அம்பு போடப் போகலையா ?” என்று கேட்டபர் இந்த நிகழ்வுகள் 2௦ முதல் 3௦ வருடகளுக்கு முன்பு வரை சிறப்பாக அணைத்து நகரத்தார் இல்லங்களிலும் நிகழும் . தற்போது இந்த நிகழ்வு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு

Thursday, 11 September 2014

கொழும்பு நாட்டுகோட்டை நகரத்தார் கோயில் ஆடிவேல் பூசை

கெட்டாலும் செட்டி! கிழிந்தாலும் பட்டு! என்பதைப்போல நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வர்த்தகத்தில் சிறப்புற்று விளங்கியதோடல்லாமல் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதிலும் தனியிடம் பிடித்தவர்கள்.

தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1790 ஆம் ஆண்டு வர்த்தக நோக்குடன் இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமது சொந்தச் செலவில் நாட்டின் பல நகரங்களில் கோயில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். செட்டியார்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோயில்களை அமைத்தார்கள்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.

1874 ஆம் ஆண்டு காலரா நோய் பரவியதன் காரணமாக கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை செல்வதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடுத்துவிட்டனர். இதனால் அந்த ஆண்டு பழைய கதிரேசன் ஆலயத்தில் கதிர்காமக் கந்தன் உற்சவத்தை நடத்தத் தீர்மானித்தார்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். இதுதான் கொழும்பில் ஆடிவேல் பிறந்த வரலாறு.

கொழும்பு செட்டியாளர் தெருவில் 1939 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடிவேல் விழா பக்தர்கள் மத்தியில் இன்னமும் மறக்க முடியாத காட்சியாக இருக்கின்றது.

‘செட்டியார் தெரு புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத்திற்குச் சென்ற வெள்ளி ரதம் 1983 யூலை 24 ஆம் திகதி இரவு மீண்டும் ஆலயம் திரும்புவதற்காக கொள்ளுப்பிட்டி வரை வந்துகொண்டிருக்கிறது. வர வர உடன் வந்த பக்தர்கள் சிறிது சிறிதாகக் காணாமற் போகிறார்கள். பின்னர்தான் தகவல் கிடைத்தது.

பொரளை மயானத்தில் இராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட சில குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. உடனே வெள்ளி ரதத்தை மீண்டும் பம்பலப்பிட்டிக்கே கொண்டு சென்றனராம்  அன்றிரவு வானொன்றில் சுவாமிச் சிலையைக் கொண்டு சென்றனராம். ஒரு வாரம் கழித்து ரதத்தைக் கொண்டு வரப்பட்டதாம் .’

நம்மவர்களால் சிறப்பாக நிகழ்த்த பட்ட இந்த விழா மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது


ஆடிவேல் பூசை ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் முருகன் தேரில் பவனி வருவார் முருகனின் திரு உருவுடன் அவரது கைவேலும் தேரில் வைத்து பவனி வருவர் .இங்கு ஆடி வேல் பூசை பழைய கதிர்வேலாயுதசுவாமி மரத் தேரிலும் புதிய கதிர்வேலாயுதர் வெள்ளித் தேரிலும் பவனி வருவார் . மாசி மகத்தின் போது நம் சென்னை மண்ணடி பவளக் காரத்தெருவில் உள்ள பழைய தன்னடாயுதபாணி புதிய தண்டாயுதபாணி வளம் வருவது போல் இங்கும் பழைய புதிய என இரண்டு முருகன் உள்ளனர் . இங்கு உள்ள வெள்ளித் தேரின் வயது 140 இந்த தேர்

1983வரை இந்த விழா தொடர்ந்து மிகவும் கோலாகலமாக நிகழ்த்து வந்தது .கரகாட்டம் , காவடியாட்டம் , மயிலாட்டம் , போன்ற நிகழ்சிகளுடன் நிகழும் .1983 ஆம் ஆண்டு விழாவின் இரவு ஊர்வலத்தில் ஏற்பட்ட இனக் கலவரத்திற்கு பின் இந்த விழா 1983க்கு பின் நிகழ வில்லை. இந்த விழா 1993, 2002, 2004 ,2010 ஆண்டுகளில் விழா நடைபெற்றிருக்கிறது. பின் 2012 பின் இந்த விழா இலங்கையின் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டு(சுற்றுலா துறையில் வருமானம் குறைந்ததால் தேசிய விழாவாக அறிவிக்கப்பட்டது) . நிகழ்ந்துவருகிறது. இந்த ஆலயம் இலங்கையின் தலைநகராம் கொழும்புவில் உள்ளது . இது சிங்களவர்கள் அதிகம் உள்ள பகுதி .

வண்ண அலங்காரத்தில் யானை

தீவட்டி பிடிக்கப்படுகிறது 

தேரில் பவனிக்கு வரும் புதியகதிர்வேலாயுதர் 

வள்ளி தெய்வானையுடன் புதியகதிர்வேலாயுதர் 

புதியகதிர்வேலாயுதர்  தேரில் பவனி வரவுள்ள காட்சி 

தேரின் மீதுள்ள கலைவெளிப்பாடுகள்














மேலே உள்ளவை புதிய கதிர்வேலாயுதர் வெள்ளித்தேரில் பவனிவந்த காட்சிகள் கிழே உள்ளவை பழைய கதிர்வேலாயுதர் ஆலய பழைய கதிர்வேலாயுதர் மரத்தேரில் பவனி வந்த காட்சி