கொண்டி என்றால் என்ன என்று எனது நண்பர் அலைபேசியில் கேட்டார்.
அவருக்கு எனது #பதில்:-
கொண்டி என்றால் பணம் அல்லது கைப்பொருள் - முதலீடு என்பதாகும்.
பண்டமாற்றுப் பொருளாதாரம் பணம் - அதாவது காசு என்ற நாணய செலாவணிக்கு மாறியபோது வந்த தமிழ் வழக்குச் சொல். தொன்றுதொட்டுநாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கடலாடி அயல் நாடுகள் சென்ற போது தங்களின் முதலீடுகளாகக் கொண்டிருப்பவையே கொண்டி எனப்படுவது.
நாட்டுக்கோட்டை நகரத்தார் வீடுகளில், சென்ற கணவன் அங்கேயே இறந்து போனால் கொண்டிவிற்கச் சென்ற கணவனை நினைத்து இந்தச் சொல்லாட்சிகளுடன் கூடிய அழகிய ஒப்புமை இல்லா இறங்கற்பாடல்கள் தன்னுணர்ச்சியாய் வெளிப்படுத்தியுள்ளனர் ஆச்சிமார்கள்.
கணவன் கொண்டி விற்க கப்பலேறிய பின், அவனைப் பிரிந்து வாடும் ஆச்சி, மகனையோ அல்லது மகளையோ மடியில் கிடத்தி உறங்க வைக்கப் பாடும்தால்லாட்டுப் பாடலிலும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி தன் குழந்தைக்கு கணவன் சென்ற காரணத்தை நல்ல தமிழில் பாலூட்டுவது போல் தமிழை குழந்தையின் செவிகளில் ஊட்டுவாள்.
சொல்லிய தமிழும், பாடிய பாடலும் எங்கள் நகரத்தார் வீடுகளின் தூண்களில் எதிரொலித்து ஆண்டாண்டுகளாய் கொண்டிருக்கும் உணர்வுகளை, கர்ணம் (காதுகளைக் கொண்டிருக்கும் சிற்பத் தூண்கள் ) வைத்த வளவுத் தூண்கள் சங்கப் பலகைபோல் பதித்திருக்கும். பண்பாட்டின் வேர்களுக்கும் விழுதுகளாய் தன் கால்பதித்து நிற்கும் விழுமியங்களே அவை என்பதை இன்றைய தலைமுறை செவிமடுக்காமல் போவதென்ன ?????
கோயில் மாடு - கொண்டி மாடு என்று இரண்டு வகை உண்டு. கோயில் மாட்டிற்கு விலை கிடையாது. கொண்டி மாட்டிற்கு சந்தையில் விலை உண்டு. அடங்காத மாடு என்பதற்கும் வாய்ப்புண்டு. சந்தைக்கு போகும் மாடு நமக்கு இல்லை என்பதே அது. கொண்டி என்பது பொருள், கைப்பணம், முதலீடு, செலாவணி,அடக்கமுடியத.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
---- நெற்குப்பை காசிவிசுவநாதன்.