Wednesday, 30 November 2016

மண்ணுக்கேற்ற மார்க்சீயம் போல மண்ணுக்கேற்ற மதம் என்பதும் வந்துவிட்டது.


மண்ணுக்கேற்ற மார்க்சீயம் போல மண்ணுக்கேற்ற மதம் என்பதும் வந்துவிட்டது. மதத்தைக் கொண்டு உலகாள வேண்டும் என்ற சிந்தனையே தவறு. அது பண்பாட்டை, மரபினை பிறர் மேல் திணிப்பதாகும்.




அதனை தமிழன் தன் இனத்தின் மீதே திணித்ததில்லை.
ஆனால் நமக்கான மெய்யியல் ஒன்று இயக்க நடையில் தன்மாற்றம்
 பெற்று வருவதையும் நாம் உணர வேண்டும்.
இன்று இருக்கும் ஒரு நிலையினை வைத்து அன்று நடந்தவைகளை யூகிக்கவும் முடியாது.



அதற்கும் மேலாக ஆரியன் எதை நம்மிடம் இருந்து திருடினான்,
எதை பட்டா மாற்றினான் என்பதெல்லாம் தகுந்த வாழ்வியல் நடைமுறைகளில் கண்டறியவேண்டும்.

தமிழர்களின் மெய்யியல் அறம்சார்ந்து உளம்சார்ந்து ஏதோ ஒரு வகையில் நம்முடன் பயணிக்கின்றது.




இன்று நமக்குத் தேவை இன அடையாளம், அதற்கான ஓர்மை, அரசியல் வலிமை, மொழி ஆளுமை ஆகியவைகளே. இவைகளை உறுதி செய்தபின்னர் மெய்யியல் விளக்கம் தேடுவது சாலச் சிறந்தது.

நமது பண்பாட்டில் பலவகையான ஊடக தாக்குதல் நடந்த வண்ணம் இருக்கின்றது. நமது குடும்ப வாழ்வியல் முறைகளை வடுகர்கள் கலசம் கலக்கி குழப்பம் விளைத்து சுக்கு சுக்களாக கட்டுடைக்கின்றனர்.





இவற்றிற்கான பாதுகாப்பை உறுதி செய்வோம். அரசியல் வலிமை பெறுவோம். அனைவரும் அமர்ந்து மெய்யியல்,வாழ்வியல் முறைமைகளை சீர்மை செய்வோம். அதுவரை அரசியல் வலிமையே நமது முதன்மை என்பதை உணருங்கள்.


வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

Monday, 28 November 2016

#மூதாதையர்__வழிபாடும் -- #தென்புலமும்.



தென் புலத்தார் என்பது தமிழர் வாழ்வியலில் மூதாதையர் அல்லது 

இறந்தோர் என்பதே பொருளாகும். 

 தமிழர் வாழ்வியலும், வாழ்முறையும் நிலம் சார்ந்த ஒன்று. 



அந்த வகையில், ஒவ்வொரு ஊரின் தெற்கேயும் ஈம முறைமைகள் செய்வதற்கான புலம் (இறந்தவர்களுக்கான இடம் ) தெரிவு செய்யப்படும். அதுவே இடுகாடு / சுடு காடு என்பதாகும் . 



தமிழர்களின் ஒவ்வொரு ஊரின் தெற்கு எல்லையிலும் இவை இருக்கும் .
 ( TOWN PLANNING OF TAMILS ) தெற்கு - தென் திசை என்பது ஒரு வாழ்விடத்தின் -- அந்த ஊரின் தென் பகுதியே ஆகும். அங்கே தங்கள் மூதாதையர் உள்ளனர் என்பதும் ஒரு குறியீடு. தென்புலம் என்பதற்கு வேறு பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ஐயன் வள்ளுவர் கடவுள் என்று யாரையும் குறிப்பிடவில்லை. தெய்வம் என்பதே அவர் குறிப்பிடும் சொல். தெய்வம் என்பது வணங்கப்படுவது. 




அதுவே வடமொழி என்று கூறப்படும் பாகத்தில், பாழி , சம்கிரிதம் ஆகியவற்றில் தெய்வம் - தெய்வதா - தேவதா - அதிதேவதா - இஷ்ட தேவதா - தேவா - தேவ் என்பது வரை நீட்சி பெற்றது. இது தவிர இறந்தவர்களுக்கு உடன் செய்யப்படும் கடமைகள் வேறு. இது உடல் அடக்கம், குடும்பத்தினர் ஒன்று கூடல், துயரப் பரிமாற்றம், ஆறுதல் , பண்பாட்டு சடங்குகள் ஆகியவை. 

ஆனால் இறந்தவர்களை நினைத்து ஆண்டுகள் கழித்து செய்யப்படும் திதி முதலிய கிரியையைகள் என்பன தமிழர் வழக்காக இருந்ததில்லை. காரணம் படைப்பு - படையல், மூதாதையர் வழிபாடு ஆகியன வேறு. 

 

புரோகிதரை அழைத்து வந்து இல்லாத ஊருக்கு வழிதேடுவது என்பது வேறு. ஆனால் பலவற்றில் மக்கள் ஈடுபாட்டுடன் பண்பாட்டிலும் நுழைத்துவிட்டனர். இதனை மெதுவாகவே தெளிவிக்க முடியும். அதற்கும் மேலாக சைவ நெறியான சிவஞான போதம் விளக்கவுரை எழுதிய அண்ணல் சிதம்பரனார் திதி கொடுப்பதை எதிர்க்கின்றார். 



அது தேவையற்றது என்றும் திடமாக வாதிடுகின்றார். மக்களின் ஆசை போகும்வரை வேண்டுமானால் ஸ்மார்த்தாவை விடுத்து, ஆதி சைவர்களை வைத்து செய்யலாம் என்ற கருத்தினை முன் வைக்கின்றார். 

27-11-2016 
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. 
நெற்குப்பை காசி விசுவநாதன். 
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு

Sunday, 27 November 2016

#வங்கித்துறையும் #தமிழர்__ஆளுமையும்.



ஒரு காலத்தில் வங்கித் தொழிலில் பிரிடிஷ் இந்தியாவின் காலத்தில் இருந்து, இந்திரா காங்கிரஸ் எமர்ஜன்சி காலம் வரையிலும் கோலோச்சியவர்கள் தமிழர்களே.

இந்தியர்கள் ஆரம்பித்த வங்கிகளில் அதிகமாக வெளிநாட்டில் கிளைபரப்பிய சாதனை தமிழர்களுக்கு மட்டுமே.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செட்டிநாடு பாங்கிங் கார்ப்பரேஷன், சிலோன் வங்கி, மதுரை வங்கி லிமிடட்ஆகியவை.



 தெற்காசியாவில் கால்பதிக்காத நாடுகள் இல்லை.
பர்மாவில் 1920 களில் சிட்டி சார்ட்டட் பாங்க் எனப்பட்ட இன்றைய சிட்டி பாங்க் ( அமெரிக்கனுடைய அதே வங்கி ) டெல்லி வைசிராயிடம், ஒரு ஒப்புதல் பத்திரத்தையே கொடுத்துவிட்டு தங்கள் வங்கிகளை மூடிச் சென்றனர்.
அதாவது, தமிழ் வணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் எளிமையான வங்கிப் பரிவர்த்தனை முறைகளும், சிக்கனமான வாடிக்கையாளர் அணுகுமுறையும், அவர்களின் துரித சேவைக்கும் நிகரான வங்கித்துறை சேவையினை எங்களால் கொடுக்க முடியவில்லை என்பதே அந்த சாசனம்.

அதாவது, இரவு பகல் எந்த நேரமும் வங்கியில் பணம் பெறலாம், கொடுக்கலாம் என்ற நிலையினை நகரத்தார்கள் அங்கே ஒழுங்கு முறை செய்திருந்தனர்.

அதற்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம், எளிய தவணை, அல்லது சேவைக்கான எளிய விலை ஆகியவற்றை நடைமுறையில் கொண்டிருந்தனர். எல்லாவற்றிக்கும் மேலாக வெவ்வேறு சிறு / பெரு நகரத்தார் வங்கிகளில் உள்ள வட்டி விகிதத்தை ஒழுங்கு முறை செய்ய தெரிவு செய்யப்பட்ட நகரத்தார்கள் சங்கத்தில் கூடி வட்டி விகிதத்தை உறுதி செய்வார்கள்.



அதனையே வரைமுறையாகக் கொண்டு அணைத்து வங்கிகளும் நடந்தமையால் அங்கே வட்டி விகிதத்தில் ஏற்ற தாழ்வு அல்லது நெருக்கடி காலங்களில் கடன் நிலுவைக்கான கால அவகாசம் ஆகியவற்றை
நெறிப்படுத்தினர்.

ஆனால் சிட்டி வங்கி 9 டு 5 என்ற அலுவல் நேரம், வட்டி விகிதத்திலும், ஈடு வைக்கும் பொருளிலும் சமநிலை இல்லாமை ஆகியவை கண்டு மக்கள் வரவும் இல்லை. இதனை அடுத்தே அவர்கள் அன்றே கடை கட்டினர்.
மேற்படி ஒழுங்கு முறையே பின்னர் இம்பீரியல் வங்கியும் தனதாக்கிக் கொண்டது.

இன்று தமிழ் நாட்டில் தமிழர்களிடம் ஏதேனும் வங்கிகள் உள்ளனவா ?? ஒன்றே ஒன்று நாடார் சமூக மக்களால் நடத்தப்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மட்டுமே.

காரணம் அவர்களின் ஒற்றுமையும், அந்த சமூகத்தினரின் ஒட்டு வங்கியுமேதான். அந்த அளவில் இன்று தமிழர்கள் வசம் உள்ள ஒற்றை வங்கி அதுமட்டுமே.



மற்றபடி சிறு வங்கிகள் முதல், சிட்பண்ட்ஸ் எனபப்டும் சிறு முதலீட்டு சேமிப்பு முறைகளும் கூட முற்று முழுதாக வடுகர் வசமே.
காரணம் அரசியல் தலைமையும், நிர்வாக எந்திரமும் முற்று முழுதாக வடுகர் வசம்.

முத்தூட் / மனபுரம் போன்ற வடுக நாயர்வகை மலையாளிகள் செழித்து கொழிப்பதற்கு காரணம், இங்கே உள்ள நகரத்தார்கள் சிறு வணிகக் கடன் கொடுத்து வந்த வட்டிக்கடைகள் ஒடுக்கப்பட்டு, அவர்களை அந்த இடத்தில இருந்து அகற்றியதே.

இதனால் சிறு வணிகள் கடன் கொடுத்து வந்த நகரத்தார்கள் அந்த அந்த ஊரில் ஒரு அடகு கடை வைத்து உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் தங்கள் வருமானம், மற்றும் மீமிகத் தொகையினை குளம் வெட்டுதல், நீர் நிலை பெருக்குதல் என்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர்.
அவர்களை 1970 களில் ஒடுக்கியபின்னர் இங்கே மார்வாடிகளும், கடந்த இருப்பது ஆண்டுகளாக மலையாளிகளின் மனபுரம் / முத்தூட் நிறுவனங்கள் உருட்டுக் கட்டை / நாயர் போலீஸ் சகிதமாக கோவணத்தோடு உருவிச் செல்வதை நாம் பார்த்துதான் வருகின்றோம்.

இத்தனைக்கும் ஊடாக , மேற்படி மனபுரம் / முத்தூட் நிறுவனங்களிடம் பொருக்கித் தின்று வரும் மலையாள கம்யூனிஸ்டுகள், தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் சுரண்டலை ஒழித்துவிட்டோம் பாருங்கள் என்று நம்மிடமே சில்லறை குளுக்குவதையும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.


ஆகவே தமிழர் வசம் மீண்டும் முதலீட்டு நிறுவனங்கள் வரவேண்டும்.
நமக்கு ஊடாக இருந்து நம்மை கட்டுடைப்பவர்கள் யார் என்ற தெளிவுடன் இனி வரும் காலத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
நன்றி.


அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

நகரத்தார்களும் வங்கித்தொழிலும்


நகரத்தார்கள் பர்மாவில் இருந்து முடக்கப்பட்டு பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு பல காரணங்கள் உண்டு.
1. முதலில் தொழிலில் போட்டியிட முடியாத குஜராத்திகளும் - ராஜஸ்தான் மார்வாடிகளும்.


2.அணித்தமாக இருந்த வங்காளிகளை விட தமிழ் வணிகர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மக்களிடம் கொண்டிருந்த செல்வாக்கு.
3. சீனர்களும், அமெரிக்க வங்கிகளும் தமிழ் வணிகர்களின் வங்கித்துறையுடன் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்ட நிலையில் -- பிரித்தானிய அரசிற்கும் நகரத்தார்களுக்கும் ஏற்பட்ட பூசல் (இரண்டாம் உலகப்போர் )

மேற்ப்படி காரணிகளைக் கண்டறிந்து அதற்கு தோதாக விடுதலைபெற்ற பர்மா மன்னருடன், நேரு காங்கிரஸ் கைகோர்த்து செய்யப்பட்ட செயல்வடிவம் கொடுத்து முடிக்கப்பட்டதே நகரத்தார் வெளியேற்றம்.
ஆனால் இன்று நாம் நினைப்பது போல குஜராத்திகளின் வலைப்பின்னல் அப்படியானது அல்ல. குஜராத்திகள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மக்களுக்கு எதிரானவர்கள். ஆகவே தான் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னரே குஜராத்திகள் வங்கிகள் இந்தியாவை ஆளத்துவங்கி விட்டன.
சுருக்கமாக சொல்லப்போனால் எமர்ஜன்சி காலத்தில் இந்தியாவில் எஞ்சியிருந்த நகரத்தார் வங்கிகளை நாட்டுடைமையாக்கியதும், வங்கிகள் கொண்டு மக்களை சுரண்டுவதற்கும் உள்ள செயல்திட்டம் வெளிப்படும்.
இன்று வங்கிகளை வைத்து நாட்டிற்கு பொருள் ஈட்டுவதை விட வங்கிகளே அதன் உரிமையாளர்களே நாடாள்வது என்ற கருத்தியல் செயல்வடிவம் கொண்டுள்ளதை நாம் உணர வேண்டும்.

27-11-2016.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "