Sunday, 11 December 2016

கார்த்திகை புதுமை :


நகரத்தார்கள் அனைவரும் சைவர்கள் . சிவனையும் முருகனையும் இருகண்கள் எனப் போற்றி வழிபடுகிறவர்கள் . அதிரை நட்சத்திரம் சிவனனுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் சிவனைக் கண்டவுடன் உமையாளையும் காணவேண்டும் என்ற காரணத்தாலும் மார்கழி மாதத்தில் பெண்களுக்கு திருவாதிரை என்ற சடங்கு கொண்டாடப் படுகிறது .




கார்த்திகை நட்சத்திரம் முருகனுக் உரியது .முருகன் தமிழ்க் கடவுள் என்பதாலும் வீரத்தில் சிறந்தவன் என்பதாலும் அவனைப் போற்றி கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகைப் புதுமை என்னும் விழா நம் நகரத்தார் குலத்துதித்த ஆண்மக்களுக்கு செய்தனர் . 



இளமையிலேயே ஆண்குழந்தைகளுக்கு வீர உணர்வை ஊட்டவும் முருகனைப் போன்ற அழகும் ,வீரமும் உடைய தங்கள் ஆண் மகனை ஊராருக்கு அறிமுகப்படுத்தவும் திருமணத்திற்கு வயது வந்த  ஆண் மகன்  எங்கள் இல்லத்தில் உள்ளான் என்பதை இந்த நிகழ்வு மூலம் அறிமுகபடுத்தப்பட்டதாகவும் கொள்ளலாம் . இப்போது இந்த விழா மிக அரிதாகவே நிகழ்கிறது .இது  தற்போது வழக்கொழிந்துவரும்  ஒரு தொன்மையான நகரத்தாரின்  தனித்துவ வாழ்வியல் சடங்குகள் ஆகும்


 

நகரத்தார்கள் தங்கள் வீட்டில் திருமண வயதில் ஆண்மகன் இருக்கிறான் என்பதை சுற்றத்தாருக்கு தெரிவிக்கும் நிகழ்வே இந்த கர்திகைப் புதுமை . இதை சூப்பிடி அல்லது சூழ்பிடி என்று அழைக்கப்படும்.






கார்த்திகைப் புதுமை நாளன்று தங்கள் இல்லத்தில் வாழைமரம் ஒன்றை நாட்டி அதன்மேல் பெரிய அகல் வைத்து பெரிதாக திரி போட்டு வைத்து வாழைமரத்தின் நடுவில் சதுரமாக இரண்டு அடுக்கு அமைத்து  அதில் அநேக தீபம் ஏற்றி வைத்து அந்த வாழைமரத்தை சுற்றிலும் மாக்கோலம் இட்டுவைப்பர் .



  புதுமையின் நாயகனான ஆண்மகனுக்கு  திருமணம் விழாவுக்கும்  அணியும்  நவகண்டி மாலை மற்றும் திருமார்பை அலங்கரிக்கும் மகரி ( மயில் பதக்கம்  )அணிவித்து வைரக்கடுக்கன்போன்ற அணிமணிகள் சூடி தலைப்பாகை தரித்து
பின் அலங்கரிக்கபட்ட குதிரையின் மீது ஆடவனை ஏற்றி மங்கல வாத்தியங்கள் முழங்க குலம்போல் எண்ணெய் விட்டு ஏற்றாத பெரிய அகல் விளக்குடன் தேங்காய் பழங்கள் முதலியவையுடன் சங்கநாதம் முழங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அல்லது சிவாலயம் சென்று சங்கநாதம் முழங்க செய்து கொண்டுவந்த பெரிய அகல் விளக்கை ஏற்றச் செய்து ஆண் பிள்ளையின் கையில் கொடுத்துப் பிடிகச்செய்து அதில் தீவட்டியை ஏற்றி மணக்கோலத்தில் உள்ள ஆடவன் கையில் கொடுத்து சொக்கப் பனையை கொளுத்திய பின் அது முழுவதுமாக ஏறிந்து முடிக்கும் தருவாயில் அந்த காட்சியை மணக்கோலம் பூண்ட ஆடவனை  தரிசிக்கசெய்வர்.

அதன்பின் ஆலயத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு பின் நகர சிவன்கோயில்சென்று பரிவார தெய்வங்களுக்கும் அம்மையப்பனுக்கும் அர்ச்சனை செய்து முன் ஆலயம் வந்தது போல் மேளதாளம் சங்கநாதம் முழங்க மணக் கோலத்தில் உள்ள ஆடவன் குதிரையின் மீது அமரச்செய்து வீடு திரும்புவர். வீடு வந்து அடைந்ததும் ஆலம் கரைத்து  சிலேட்டு விளக்கு பிடித்து திருஷ்டி கழித்து மணக்கோல ஆடவனை உள்ளே அழைத்து சென்று படைகின்றன சாமி வீட்டில் அந்த வீட்டுப் பெண் பிள்ளை விளக்கை ஏற்ற செய்து வழிபடுவர் . பின் கோலம் இட்டு அமைத்த ஒற்றை மனையில்  விழாநாயகனை நிறுத்தி பெண்களாக ஒரு சடங்கு நடத்தி புதுமையை நிறைவு செய்து மரபு .



புதுமை என்பது  ஆணுக்கும் பெண்ணுக்கும்  செய்யும்  ஒரு இன்றியமையாத ஒரு  முக்கியமான  சடங்கு ஆகும் புதுமைகள் செய்த  பின் தான்  திருமணம்  நிகழ்த்தப்படும். புதுமை  என்பது அரைக்கலியாணம்  என்று  சொல்லப்படும்

சிலப்பதிகாரத்தில் கண்டேத்தும் செல்வேள் என்ற தொடரும் மாதரார் தொழுதேத்த வயங்கும் புகழ் கண்ணகி என்ற தொடரும் இடம்பெறுகின்றன. இவற்றுள் நகரத்தார் மேற்கொண்ட கர்திகைப் புதுமை திருவாதிரைப் புதுமை விழாக்களின் குறிப்புகள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

------------ஆ.தெக்கூர் கண.இராம.நா.இராமு

No comments:

Post a Comment