Saturday, 31 December 2016

ஆயாவின் ஆத்தா வீட்டு பிள்ளையார்நோன்பு நினைவுகள்



எங்கள் ஆயாவிடம் தன் சிறுவயது பிள்ளையார் நோன்பு அனுபங்களை கேட்ட பொது அவர் குழிபிறையில் தன் ஆத்தா விட்டு அனுபவங்களையும் தன் அம்மான் விராச்சிலை மு.பழ வீட்டின் அனுபவங்களையும் அன்று செய்த வழக்கத்தையும் சொன்னார் அவற்றின் தொகுப்பே இது.

கார்த்திகை தீபத்திருநாளில் இருந்து இருபத்தியொரு நாட்கள் நோன்பு இருந்து அதாதுவது கார்த்திகை மாதம் அமரபக்ஷம் துவங்கி மார்கழி மாதம் பூர்வபக்ஷம் சஷ்டி திதியும் சதயநட்சதிரம் கூடி வரும் நாள் வரை புல்லால் உண்ணாது காலையும் மாலையும் நீராடி மாலையில் விளக்கேற்றி வைத்து புது கொடிவேட்டியில் இருந்து தினம் ஒரு நூல்இழை எடுத்து வைத்து சேகரித்து வருவராம் . அந்த 21நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்து விராசிலையில் இருந்து தன் வீட்டிற்கும் தன் ஐயா அல்லது அம்மான் மூணு படி பச்சருசி , வெள்ளம் , பசுநெய் உடன் 21ரூபாய் பணம் இவைகளை வைத்து வண்டிகட்டிக்கொண்டு அல்லது (பிளசரில் )சின்னக்காரில் வந்து கொடுத்துச் செல்வார்களாம். அன்று மதியம் மரக்காய்கறிகள் கொண்டு பிறந்த வீட்டு சீதனம் கொண்டு வந்தவர்களுக்கும் விருந்து படைபார்கலாம். 21ஆம் நாள் காலை அல்லது முதல் நாள் வீடு வாசல் எல்லாம் தூய்மைபடுத்தி .வீட்டு வாயிலில் மங்கலமாய் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி வைத்தும். முதல் நாள் இரவோ அல்லது காலையிலே பலகாரங்கள் செய்ய மாவுக்கும் ஊறவைத்து அவற்றை பக்குவமாய் அரைத்து எடுப்பார்களாம்.அவர்கள் சிறுபிள்ளையாக இருக்கும் பொது வீட்டில் நோன்பன்று சீடை , தேன்குழல் , மவோலம் ,சீப்புசீடை ,சுண்டக்கடலை , வெள்ளைப்பணியாரம்,உளுந்துவடை ,கல்கண்டு வடை , கருப்பட்டி பணியாரம் , சீயம் ,கொழுக்கட்டை ,மாவிளக்கும் , பொரியுருண்டை ,கடலையுருண்டை ,எள்ளுருண்டை இவைகளை செய்து வைப்பார்கலாம். அதிகமாக செய்தாலும் எல்லாம் ஒற்றைப்படை 3,5,7,9என்ற எண்ணிகையில் தனியாக எடுத்து வைப்பார்களாம் .இவ்வளவு பலகாரங்களையும் ஆளுக்கும் ஒருவராக ஒன்றாக கூடி வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து செய்வார்களாம் . அதுமட்டும் இல்லாது வீட்டில் மண்பானை ஓட்டில் மண்கொட்டி வீட்டிலேயே 5வகை (நெல் ,அவள்,சோளம் ,கம்பு ,எள் )பொரிகளையும் பொரித்து எடுப்பார்கலாம்.சாமிவீட்டின் உள்ளோ அல்லது வளவிலோ பச்சருசி மாவால் நடுவீட்டுக் கோலமிட்டு அதன் மீது பூ ,பழம், பலகாரங்கள் , விளக்கு ,பிள்ளையார் இவைகளை வைத்து தயார் செய்வார்களாம் .



விநாயகருக்கும் அருகில் இருகுச்சியில் ஆவாரம்பூ , கன்னுப்பிள்ளை பூ ,நெல்கதிர் இவைகளை ஒரு செண்டாக கட்டி விநாயகருக்கும் இருபுறமும் வைப்பார்களாம் . இதற்கும் அர்த்தம் விநாயகர் ஆவாரம் பூ காட்டுக்கும் இடையில் இருப்பதாகவும் இப்படி உள்ள உள்ள விநாயகர் வழிபடுதல் நன்மை பயக்கும் .ஆவாரை,கன்னுப்பிபிள்ளைபூ இவைகள் மருத்துவ குணம் கொண்டது .நெற்கதிர்கள் நாம் உண்ணும் உணவு பொருள் இவற்றை விநாயகருக்கும் சார்த்தி வழிபடுவது சிறப்பு ஆவாரைப் பூ 21 இதழ்கள் கொண்டது .அதன் மடல்கள் மேல் நோக்கி உள்ளதால் வாழ்வில் நாம் மேல்நோக்கி செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும் . இந்த ஆவாரை கொண்டு விநாயகரை அர்சித்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கு என்பதான்லும் . இந்த செண்டுகள் விநாயகரின் அங்குசம் போன்று இருப்பதால் இதை வைத்து வழிபாடுசெய்கிக்றோம் என்றார் . இந்த பூசையில் வைக்க வெள்ளிப் பிள்ளையார் திருமணத்தின் பொது பெண்வீட்டில் குடுப்பதை வைத்து எடுப்பார்கள் .சிறிது பூ , அருகம்புல் சார்த்தி வழிபடுவார்கலாம். முன்பு பொரி கிண்ணம் திருமணத்தின் பொது பெண்வீட்டார் வெள்ளைப்பித்தாளை ,வெண்கலம் ,வெள்ளி போன்றவைகளில் செய்து வைப்பது வழக்கம் அந்த பொரிகிண்ணத்தில் பொறித்த பொறிகளை விநாயகர் முன்வைபார்க்கலாம்.





மாலைப்பொழுதின் துவக்கத்தில் வீட்டில் பெரியவர்(ஐயா) ஒரு தடுக்கும் போட்டு அதன் மீது அமர்ந்து 21நாட்கள் சேகரித்து வைத்த நூல்இழைகளை எடுத்து திரட்டு பாலுடன் நெய் கலந்து கொண்டு செய்த கலவையில் நூல்இழைகளை மத்தியில் வைத்து பிள்ளையாராக வீட்டில் உள்ளவர் எண்ணிகையை கணக்கில் கொண்டு ஒற்றைபடையில் பிடித்து வைக்கப்படும். பிடித்து வைத்த சிறுபிள்ளையார்களையும் இங்கு பிள்ளையார் முன்பு வைத்து குத்துவிளக்கேற்றி வைத்து உடன் ஒரு பிள்ளையார் விளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வீட்டில் இருக்கும் பெண்கள் அங்கு அருகில் உள்ள சுவற்றில் தும்பு பிடிப்பார்கலாம். பின் எல்லோறோம் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல் , கோளாறு பதிகம் , தங்களுக்கும் தெரிந்த விநாயகர் பாடலை படித்து வழிபடுவர் உப பாடல்களையும் படிப்பதும் உண்டாம். படித்து முடித்து சங்குஊத்தி தீபம் பார்ப்பார்கலாம். பின் வீட்டின் பெரிய ஐயா தலையில் விருமாப்பு கட்டி கொண்டு கிழக்கு அல்லது வடக்கு பார்த்து தடுகின் மீது அமர வீட்டில் பெரியார் முதல் சிறியவர் வரை ஒருவர் பின் ஒருவராக அவர்முன் விழுந்து வங்கி திருநீறு பெற்று தீபம் ஏற்றப்பட்ட இழையை விநாயகரை நினைத்து அணையாமல் அப்படியே வாயில் இட்டுக் கொள்வார்களாம். 



அப்படி வீட்டில் யாரேனும் கருவுற்று இருந்தால் தாய்க்கும் ஒரு இழையும் பிள்ளைக்கும் ஒரு இழையும் கொடுப்பார்களாம் . இழை எடுத்து கொடுக்கும் ஐயா முதலில் ஒரு இழையை எடுத்துகொள்வார் அதன் பெயர் பிள்ளையார் இழை .இப்படி நாம் சுடருடன் இழையை உட்கொளுவதன் தத்துவம் " ஒளி வடிவான இறைவனை நமக்குள்ளே எழுந்தருளச் செய்யும் செயல் " என்பதை நாம் செய்கிறோம் . 


இப்படி எல்லோரும் இழை எடுத்தும் கருபட்டிபணியாரம் , முதலிய நிவேதனப் பொருட்கள் பிரித்து தருவார்களாம். அதில் அந்த மாவிளக்கு ஏற்றி பகுதி கருகிஉள்ளது யாருக்கும் என்று போட்டி போட்டுக்கொள்வார்களாம் . அடுத்த நாள் மாலை வீட்டில் விநாயகர் அருகில் வைத்திருந்த ஆவாரை செண்டுகளை அருகில் உள்ள கோயிலில் உள்ள விநாயகர் முன்பு தட்டி காண்பித்து விட்டு அதை அந்த விநாயகர் கோவிலின் ஓடுக் கூரையின் மீது போட்டுவிட்டு வீடு திரும்புவராம். பிள்ளயார் நோன்புக்கும் பலகாரங்கள் சீடை , கைமுறுக்கு செய்கையில் யார் முதலில் கைமுறுக்கு சுற்றுகிறார்கள் , சீடை உருட்டுகிறார்கள் , யார் வேகமாக அழாகா பூ தொடுகிறார்கள் என்ற போட்டி எல்லாம் பிள்ளைகள் மத்தியில் அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்வார்களாம் .இப்படி ஆயா தன் சிறுவயது பிள்ளயார் நோன்பு பற்றிய செய்தியை பகிரையில் மிகுந்த உற்சாகத்துடன் பூரிப்புடன் சொல்லிமுடித்தார் .

-.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

No comments:

Post a Comment