Tuesday, 23 May 2017

#மாசிலாநாதரும்__மாசற்ற__வாழ்வும் :-


நன்றாக ஞாபகம் உள்ளது. 1989 ஆம் ஆண்டு இந்தக் குறிப்பினை எனது தந்தையார் கத்தரித்து வைத்துவிட்டு என்னிடம் திரு.எட்மன்ட்ஸ் அவர்கள் பற்றிய ஞாபகம் உள்ளதா என்கிறார்.


நன்றாக உள்ளதப்பா என்றேன். அதன் உள்ளடக்கத்தைப் படித்தேன். அதற்கும் மேல் சிறிய வயதில் உள்ள ஞாபகங்கள் மட்டுமே மனதில் படமாக ஓடியது.
அவருடன் தரங்கை கோட்டையின் கொத்தளத்தில் (அவர் மூன்று சக்கர வண்டியில் அமர்ந்து கொண்டு, தானே வண்டியினை ஒட்டிக்கொண்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் எனது தந்தையாருடன் விவாதித்துக்கொண்டிருப்பார்.



வாங்க ஆவுடையப்பன், பையன விளையாட விடுங்க நாம் பேசிக்கிட்டிருப்போம்.

புல்வெளியில் அதனை ஒட்டிய சீகன் பால்க் ஐயர் வந்திறங்கிய நினைவுத் தூண் அருகிலும் ( அப்போதே மிகவும் சிதைந்துபோயிருந்தது) சுடு மட் செங்கற்களையும், சிப்பிகளையும் எடுத்துக்கொண்டு, இடிந்த கோட்டைச் சுவர் வரை சென்று முடிந்தவரை எனது உயரத்திற்கு, எட்டி எட்டிப் பார்த்து ஆர்ப்பரிக்கும் தரங்கம்பாடி கடற்கரையினை, அதன் வேகத்தை, அந்த அலைக்கடலில் பொங்கு நுரையுடன் கொப்பளிக்கும் வரலாற்றினை புரியாமலேயே புரியாத வயதில் மூச்சுக்கு காற்றின் இறைப்புடன் உள்வாங்கிக்கொண்டிருந்தேன்.



மிதி வண்டியில் இருந்து துள்ளிக் குதித்தவுடன், டாக்டர் எட்மண்டஸ் அவர்களின் கைகளை பற்றி ஐயா வணக்கம் என்று சொன்னவுடன், எனது கடற்கரை பெருவெளிக்கு சென்றுவிடுவேன்.

கூ.. கூ... வென்று ஆர்ப்பரிக்கும் கடல் காற்று, அத்தோடு சேர்ந்து உவர்க்கும் எங்கள் பாட்டன்மார்களின் உப்பும் உடலை வருடும் போதே,
கால்கள் மணலில் பதிந்து, புதைந்து வேகத்தைக் குறைத்தாலும், அந்தக் கொத்தளத்தில் உள்ள வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமலேயே.... உணர்ந்துகொண்டிருப்பதும் ஒவ்வொரு வாரமும் இயல்பானது.
( டாக்டர் எட்மண்டஸ் அவர் என்ன மருத்துவரா அல்லது பேராசிரியரா என்பதை கூட 1989 ஆம் ஆண்டு தந்தையுடன் உரையாடும் போது கேட்டுக்கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.பிழைப்பும் அதனைப் பின் தொடரும் வாழ்க்கையுமே அன்றைய மனநிலையில் இருந்தபோது நான் தவறவிட்டது எத்தனையோ.?)



பிறையாற்றுச் சோழர்களின் தலைநகராகவும் (இன்றைய பொறையாறு) , அவர்களின் முதன்மை இயற்கை துறைமுகமாகவும் (தரங்கம்பாடி), பிந்தைய வந்தேறிகளின் ஆட்சிக்காலம் வரையிலும் தமிழர்களின் கடல்சார் மேலாண்மையில் - காவிரிப்பூம்பட்டினம் (சோழநாடு) / கொற்கை, மருங்கூர்பட்டினம், தொண்டி -( பாண்டிய நாடு) போன்ற கிழக்கு கடற்கரையின் தமிழர் மேலாண்மை சொல்லும் ஒரு அறிய இயற்கை துறைமுகம் சடங்கம்பாடி என்றும் / குலசேகரன்பட்டினம் என்றும் அறியப்படும் தரங்கம்பாடி.






தமிழர்களின் சீன கடல்சார் வணிகம் பன்நெடுங்காலம் (காவிரிப் பூம்பட்டினத்தின் முடிவிற்குப் பின்னரும்) தொடர்ந்திருந்ததை தரங்கம்பாடி/சடங்கம்பாடி/ குலசேகரன்பட்டினம் என்ற ட்ராங்குபார் என்ற இந்த ஊர்.
இதற்கு சான்று சொல்வது அங்கே 20 ஆம் நூற்ராண்டு வரையில் இருந்து அதன் முற்பகுதியில் பாதிக்கும் மேல் கடல் கொண்ட மாசிலா நாதர் என்ற சிவன் கோவிலே.
நான் அன்று விளையாடிக்கொண்டிருக்கும் போது, கிட்டத்தட்ட உண்ணாழி வரை கடல் வந்திருந்தது.



அதற்கும் முந்தைய பகுதிகளான முகப்புமாடம், கொடிமரம், அர்த்தமண்டபம் அனைத்தையும் ஆர்ப்பரிக்கும் கடல் கபளீகரம் செய்திருந்தது.
அந்த மண்டபத்தின் இறுதிப்பகுதி சீனர்களின் கலைப்பாங்கில் வேயப்பட்டதாக இருந்துள்ளதை டேனிஷ் கோட்டையின் மேற்புற கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து வரைந்த ஐரோப்பிய ஓவியன் பதிவு செய்துள்ளதையும் அதன் படிவம் ஒன்று கோபன்ஹேகன் அருங்காட்சியகத்தில் உள்ளதையும் திரு.எட்மன்ட்ஸ் கூறியதாக என் தந்தையார் கூறினார்.
அந்த கத்தரித்த காகிதத்தை எனது ஆவணக் காப்பகத்தில் சேர்த்துக்கொண்டேன்.
ஆனால் அன்று அவருடன் பேசித் தெரிந்துகொள்ள வேண்டிய பலவற்றை தவறவிட்டேன்.

திரு.எட்மன்ட்ஸ் தரங்கம்பாடியில் இருந்து கங்காணிகளின் வாயிலாக பல தொழிலாளர்கள் வெள்ளையர்களால் நங்கூரமிடப்பட்ட நீராவிக்கப்பலில் பலரையும் ஏற்றிச் சென்றதாகவும் அதன் பின்னர் இந்தத்துறைமுகம் பயன்பாட்டிலிருந்து விடுபட்டதையும் கூறியிருந்தார்.
அப்படிச் சென்றவர்களின் ஒரு குடும்பம் தான் தில்லையாடி வள்ளியம்மை.
தில்லையாடி என்று தற்போது அறியப்படும் தில்லையாளி என்று சோழ சாசனங்கள் கூறப்படும் ஊர்தான் அன்னை வள்ளியம்மையின் சொந்த ஊர்.
இதற்கு 1915 ஆம் ஆண்டு வாக்கில் காந்தியடிகளும் பிறையாறு என்ற பொறையாறு வந்து தங்கி அவர்கள் குடும்பத்தை பார்த்துவிட்டுச் சென்றதும் வரலாற்றில் உண்டு.



பொறையாறு என்று தற்போது வழங்கப்படும் பிறையாறு என்ற ஊர் அப்போதைய பிறையாற்றுச் சோழர்களின் தலை நகராகவும் இருந்துள்ளது.
இந்த ஊரின் வழியாகவே காவிரியின் கிளைகளில் ஒன்றான உப்பனாறு என்ற ஆறும் (வடகிழக்கில் பாய்ந்து தரங்கம்பாடியில் கழிமுகமாய் கலக்கும்),
கூடவே காவிரியின் மற்றுமொரு கிளை நதியான நந்தலாறு (பொறையாற்றின் தெற்கு எல்லையாகவும் ) என்ற ஆற்றின் கழிமுகமும் கலக்கும்.
இந்த இடைப்பட்ட பகுதியில் அன்று உப்பனாறு வலஞ்சுழியும் (MEANDER) ஆறு பிறைபோல வந்து வளஞ் சூழ்ந்து வலம் வரும் அழகிய நிலப்பகுதிதான் இந்த சோழர்குடித் தலைநகரும் அதன் சங்ககாலம் தொட்டு வாழ்வாங்கு வாழ்ந்த குலசேகரன்பட்டினமும்.



அன்று தஞ்சை ரகுநாத் நாயுடு, தனது உல்லாச வாழ்க்கைக்காக டேனிஷ் வணிகர்களுக்கு தாரைவார்க்கப்பட்ட ஊர்தான் #தரங்கம்பாடி.
டேனிஷ் கோட்டை கட்டிய பின்னர் (1700 களில் ), தரங்கம்பாடி என்று ஊரும் அதில் உள்ள மக்களும் அதன் இயற்கை துறைமுகமாக இருந்த உப்பனாற்றின் கழிமுகமும் முழுமையாகவே கிட்டங்கி / கோட்டை / கொத்தளம் / தன்னாட்சி நிர்வாகமும் செய்துகொள்ள விட்டுவிட்டான்.
அன்றிலிருந்து அந்த நகருக்கும் கோட்டைக்குமான அரசகுடும்ப வைசிராய், காவற்படை, நிர்வாக ஆளுநர், தன்னாட்சி பெற்ற தனி நீதி மன்றம், சிறைக்கூடம், போர்தளவாடம் / வணிகப்பொருட்களுக்கான கிட்டங்கி என்று ஒரு தனி இறையாண்மை கொண்ட நாட்டினையே உருவாக்கினார்கள்.
இந்த மண் / மக்கள் என்று எல்லாவற்ரையும் தாரைவார்த்த ரகுநாத் நாயுடு தஞ்சையில் உல்லாசபோகம். இவனைத்தான் தமிழ்நாடு திராவிட அரசு கடைசி தமிழ் மன்னனாக (ஒரு தெலுங்கனை) அந்தப் பகுதி வரலாற்றில் பதிந்துள்ளனர்.

வெள்ளையனிடம் உடன் படிக்கை செய்துகொண்ட பின்னர் கோட்டை கொத்தளம் அங்கே மண்ணின் மைந்தர்களான மக்களையும் - தமிழ் கடலாடிகளையும் சேர்த்தே சில லட்சத்திற்கு விற்று முடித்துச் சென்றனர்.
அதன் பின்னரே வெள்ளையர் கொட்டமும் தமிழர்களின் புலம்பெயர் அவலங்களும் நிகழ்ந்தன.
மெல்ல மெல்ல கடல் ஆர்ப்பரித்து கரையினைக் கரைகின்றது. உப்புக்காற்றும் ஆர்பரிப்பும் ஓயவில்லை.

எம்மவர் முன்னர் வாழ்ந்த வரலாற்றின் சுவடுகள் மட்டும் மறைந்து வருகின்றது.
மாசிலாநாதரே.......!!!!
மாசற்ற தமிழர் வாழ்வை என்ன செய்ய நினைத்தீரோ...!!!???


அன்புடன்,
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "
11-05-2017.

No comments:

Post a Comment